சற்று முன்
Home / செய்திகள் / நாடளாவிய ஆசிரியர் பற்றாக்குறைக்கு இரண்டு ஆண்டுகளுக்குள் நிரந்தர தீர்வு – ஜனாதிபதி

நாடளாவிய ஆசிரியர் பற்றாக்குறைக்கு இரண்டு ஆண்டுகளுக்குள் நிரந்தர தீர்வு – ஜனாதிபதி

1931755630Janaநாடளாவிய ரீதியில் அனைத்து மாகாணங்களிலும் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் நிரந்தர தீர்வு காணப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (04) முற்பகல் வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்ற மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்திக் செயற்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் பற்றிக் கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் அழைக்கப்பட்ட இக்கூட்டத்திற்கு மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தின் நீர்ப்பாசனம், நீர் வழங்கல், நெடுஞ்சாலை அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி, மீன்பிடித் துறை, மின்சாரம், வீடமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளின் அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் அதன் போது உருவாகும் பிரச்சினைகள் தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சட்டரீதியற்ற காணி நிரப்பும் பணிகள் தொடர்பாக இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. காணிகளை நிரப்புவதற்கு இடமளிக்காமை தொடர்பாக அரசாங்கம் உறுதியாக நின்று செயற்படும் ஒரு காலகட்டத்தில் மாவட்டத்தில் இவ்வாறு வயல்கள் நிரப்பப்படுமாயின் அதற்கான முழுப் பொறுப்பினையும் கமநல சேவை அதிகார சபை பொறுப்பேற்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நில்வள கங்கையில் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுவதன் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன் சுற்றாடல் அதிகார சபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுடனும் கலந்துரையாடி இதற்கு துரித தீர்வினை வழங்குமாறு ஜனாதிபதி உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அவ்வாறே நில்வள கங்கையின் இரு மருங்கினையும் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக மாற்றுவது தொடர்பிலும் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் அதற்குத் தேவையான எதிர்கால நடவடிக்கைகளை ஆயத்தப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

மாத்தறை ஹக்மன வீதியை அகலமாக்குதல் மற்றும் அதிவேகப் பாதையின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. தெற்கு அதிவேகப் பாதையின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும் போது பேணற் காடுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இதன் போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். விசேடமாக வீதி அபிவிருத்திப் பணிகளின் போது ஏற்புடைய அமைச்சர்களுடன் கலந்துரையாடி முறையான திட்டமிடலினூடாக இப் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் தேவை பற்றியும் ஜனாதிபதி விளக்கமளித்தார்.

தெனியாய ஆதார வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்தல் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் இவ்வைத்தியசாலைக்கு முன்னுரிமையளித்து இங்கு நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். கொட்டவில நகர அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் மாத்தறை நதிக்கரை பூங்கா அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சிறிய அளவிலான நீர் மின்சார நிலையங்கள் காரணமாக ஏற்படும் சுற்றாடல் பாதிப்புக்கள் தொடர்பாகவும் இங்கு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன் இது தொடர்பான ஓர் அறிக்கையினை துரிதமாக தனக்குச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கினார். மாவட்டத்தின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் மாத்தறை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையான கிராம அலுவலர் பிரிவுகள் காணப்படுவதன் காரணமாக நிர்வாக நடவடிக்கைகளின் போது ஏற்படும் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு மாத்தறை மாவட்ட பிரதேச செயலகப் பிரிவு மற்றும் கெகனந்துர பிரதேச செயலகப் பிரிவு என இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளாக பிரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மாத்தறை மாவட்டத்தை சகல துறைகளிலும் அபிவிருத்தி செய்தல் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு ஆகுமெனத் தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் அதிகாரத்தினதும் அரச உத்தியோகத்தர்களதும் ஒத்துழைப்புடன் இப் பணிகளை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார்.

அமைச்சர்களான மங்கள சமரவீர, சாகல ரத்நாயக்க, ராஜித சேனாரத்ன, துமிந்த திசாநாக்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, தென்மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் த சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com