சற்று முன்
Home / இந்தியா / ‘ராஜீவ் வழக்கின் சாந்தனை நான்தான் சுட்டுக் கொன்றேன்!’ – சிபிஐ அதிகாரியின் பதற வைக்கும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்!

‘ராஜீவ் வழக்கின் சாந்தனை நான்தான் சுட்டுக் கொன்றேன்!’ – சிபிஐ அதிகாரியின் பதற வைக்கும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்!

rajiv
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் அவ்வப்போது வெளியாகும் மர்மங்கள் அரசியல் களத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறன. அதில் லேட்டஸ்ட் வரவு, ‘ ராஜீவ் படுகொலைக்குக் காரணமான சாந்தனை நான்தான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன்’ என விசாரணை அதிகாரியாக இருந்தவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் ஸ்டேட்டஸ். அப்படியானால், 25 ஆண்டுகளாக சின்ன சாந்தன் என்பவர் எதற்காக சிறையில் இருக்கிறார்? என கொந்தளிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

mohanfbமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ம் ஆண்டு, மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை வழக்கில் போலீஸாரால் குற்றம் சுமத்தப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் 25 ஆண்டுகளாக சிறை வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். இந்தப் படுகொலை வழக்கில், சி.பி.ஐ. அடையாளம் காட்டும் நபர்களைப் பிடித்து வரும் ட்ராக்கிங் குழுவில் இருந்த சி.பி.ஐ. ஆய்வாளர் ஜெபமணி மோகன்ராஜ், ‘ குண்டு சாந்தனை நான்தான் சுட்டேன்’ என்று தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார்.

அவருடைய பதிவில், ” விடுதலைப்புலி குண்டு சாந்தனை திருச்சியில் வைத்து விடியக் காலை 04.10 மணிக்கு மூன்று ஆய்வாளர்கள், 7 ரவுண்ட் சுட்டோம். நான் பயன்படுத்தியது .38 ரிவால்வர். மற்றவர்கள் பயன்படுத்தியது 9 எம்.எம். பிஸ்டல். நான் சுட்டது ஒரு ரவுண்ட் மட்டுமே. குண்டு சாந்தன் இருதயத்தைத் துளைத்துச் சென்றது என் துப்பாக்கியில் இருந்து சென்ற குண்டுதான். இது தெரிந்தவுடன் என் நண்பர்கள் என்னைத் தூக்கி வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. இந்தக் காட்சிகள் இன்னும் எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது. இது கதை வசனம் இல்லை. ஒரு தேசபக்தன், தன்னுடைய தேசத்தின் மானம் காக்க துணிச்சலாகக் கடமை ஆற்றிய சரித்திர நிகழ்வு” என பெருமைப்பட்டுக் கொள்கிறார் ஜெபமணி மோகன்ராஜ்.

படுகொலை நிகழ்த்தப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பலமாகியுள்ள இந்த உண்மையால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

santhanஇதுபற்றி நம்மிடம் அவர்கள் விரிவாகப் பேசினர். ” ஆஸ்திரேலியாவிற்கு வேலைக்குச் செல்வதற்காகத்தான் சிறையில் உள்ள சாந்தன் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது இந்தப் படுகொலை வழக்கில் இரும்பொறை என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவர், ‘ சாந்தன் எனக்குக் கடிதம் எழுதுவார். ஆனால், நேரில் சந்தித்தில்லை’ என வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து, சுங்கத்துறை பட்டியலில் இருந்த சின்ன சாந்தனை பலிகடாவாக்கிவிட்டார்கள்.

இந்த உண்மை, டி.வி விவாதம் ஒன்றில்தான் அம்பலமானது. காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுசாமி, சி.பி.ஐ. தலைமை புலனாய்வு விசாரணை அதிகாரி ரகோத்தமன், சி.பி.ஐ. இன்ஸ்பெக்டராக இருந்த ஜெபமணி மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விவாதத்தில், ‘ஒவ்வொருவரையும் மிக மோசமாக உடல், மன ரீதியாக சித்ரவதை செய்துதான் பொய் வாக்குமூலம் வாங்கினீர்கள். கொடூரமாக வதை செய்து வாங்கிய வாக்கு மூலத்தால்தான் அவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள்’ என அய்யநாதன் என்பவர் வாதிட்டபடி இருந்தார்.

அப்போது குறுக்கிட்ட ரகோத்தமன், ‘அப்படியெல்லாம் நாங்கள் யாரையும் சித்ரவதை செய்யவேயில்லை. அப்படி செய்திருந்தால் கர்ப்பிணியான நளினி எப்படி நல்லபடியாக குழந்தை பெற்றெடுத்திருக்க முடியும். சித்ரவதை செய்தோம் என்பது அபாண்டம்’ என்று மறுத்தார். ரகோத்தமனின் பேச்சை இடைமறித்த முன்னாள் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், ‘ எங்கள் வேலையே பிடித்து வருபவரை அடித்து நொறுக்குவதுதான்’ எனப் பேச,

கொந்தளித்துப் போன ரகோத்தமன், ‘ ஆமாம், உங்களைப் பற்றி தெரியாதா… நீங்கதானே திருச்சியில குண்டு சாந்தனை சுட்டுக் கொன்றீர்கள்?’ எனக் கத்தினார். ‘என்ன சார் என்னை இப்படி போட்டுக் கொடுத்துட்டீங்க’ என்கிறார் மோகன்ராஜ். நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தவருக்கும் எதுவும் புரியவில்லை. இப்போது ஃபேஸ்புக்கில் உண்மையை வெளியில் சொல்லியிருக்கிறார் மோகன்ராஜ்” என விவரித்தவர்கள்,

mohanraj“ ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, குண்டு சாந்தன்தான். (சின்ன) சாந்தன் வெளிநாட்டுக்கு போய் வேலை தேட முறைப்படி விசா வாங்கி விமானத்தில் வந்திருந்தவர். கஸ்டம்ஸ் பட்டியலில் சாந்தன் பெயர் இருந்தது. இதை வைத்து குற்றவாளியாக சேர்த்துவிட்டார்கள். பிறகு, உண்மையான குற்றவாளி குண்டு சாந்தன் சிக்கிய தகவலை ரகோத்தமனுக்கு சொல்கிறார் மோகன்ராஜ். அவரோ, ‘ இது வெளிய தெரிஞ்சா சி.பி.ஐ.க்கு பெரிய அவமானமாகப் போய்விடும். உலகமே சிரிக்கும். சுட்டுக் கொன்றுவிடுங்கள்’ என உத்தரவிட்டதாக திருச்சி வேலுச்சாமியிடம் பேசியிருக்கிறார் மோகன்ராஜ். இதுபற்றி பற்றி பத்திரிகையாளர் ஏகலைவனிடம், திருச்சி வேலுச்சாமி சொல்லவும், விவகாரம் அம்பலமாகியிருக்கிறது. ஒரு தவறும் செய்யாத சின்ன சாந்தன் 25 ஆண்டுகளாக சிறையில் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை? முறையான நீதி விசாரணையை எம்.டி.எம்.ஏ நடத்த வேண்டும்” என வேதனைப்பட்டார்.

இதுதொடர்பாக, சி.பி.ஐ முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெபமணி மோகன்ராஜிடம் பேசினோம்.

” ஆமாம். நான்தான் சாந்தனை சுட்டுக் கொன்றேன். அவர் திருச்சியில் ஒரு அறையில் இருந்தார். புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர்தான் அவருடைய அறையைக் காட்டிக் கொடுத்தார். சந்திராசாமியிடம் கூலி வாங்கிக் கொண்டுதான் ராஜீவ்காந்தியைப் படுகொலை செய்தார்கள். சாதாரணமாக நம்மூர் போலீஸார் கைது செய்தால், பொய்யான வாக்குமூலம் தயாரிப்பார்கள் என்று சொல்லலாம். இந்த வழக்கில் சி.பி.ஐ நேரடியாகத் தலையிட்டது. அவர்கள் ஆதாரமில்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள். சிறையில் உள்ள சாந்தனும் குற்றவாளிதான்” என்றார் நிதானமாக.

‘ படுகொலையின் நேரடி சாட்சி ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்’, ‘சிவப்புக் கம்பளத்தில் ராஜீவ்காந்தியை நிற்க வைத்ததே தமிழக காவல்துறைதான்’, ‘ பேரறிவாளன் குற்றவாளி என நான்தான் பொய்யான வாக்குமூலம் எழுதினேன்’ என தொடக்கம் முதலே நீதி வழுவிய போக்கில்தான் விசாரணை நடந்தது என்பதை ஆதாரபூர்வமான ஆதாரங்கள் அம்பலப்படுத்துகின்றன. நீதித்துறையும் அரசு நிர்வாகமும் என்ன செய்யப் போகின்றன?

-ஆ.விஜயானந்த்

(நன்றி- விகடன்)

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com