சற்று முன்
Home / கட்டுரைகள் / ஞானசார தேரர்களும் ரத்ன தேரர்களும் பிறந்து கொண்டேயிருப்பார்கள்!

ஞானசார தேரர்களும் ரத்ன தேரர்களும் பிறந்து கொண்டேயிருப்பார்கள்!

யாழ்ப்பாணத்தில் புடவைக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண் உள்ளாடைகள் வாங்குவதற்கு வந்த ஒரு பெண் வாடிக்கையாளரிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

;நீங்கள் கேட்கும் உள்ளாடைகள் நமது கடையில் இல்லை அவற்றை மின்சார நிலைய வீதியில் உள்ள ஒரு கடையில் வாங்கலாம் ஆனால் அங்கே நீங்கள் போக வேண்டாம் ஏனென்றால் அந்தக் கடையில் விற்கப்படும் உள்ளாடைகளில் ஒரு வித ரசாயனம் விசிறப்பட்டு இருப்பதாகவும் அது உடலுக்குத் தீங்கானது என்றும் ஒரு தகவல் உண்டு ; என்று. அவர் அவ்வாறு குறிப்பிட்ட அந்தக் கடை ஒரு முஸ்லீம் வர்த்தகருக்கு சொந்தமானது.இது ஒரு கட்டுக்கதை. இது முதலாவது. இரண்டாவது கற்பனை -கிழக்கில் ஒரு சாப்பாட்டுக் கடையில் விற்கப்படும் இடியப்பத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

மூன்றாவது கற்பனை- மூதூரில் கிளிவெட்டி சிறீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரதான பூசகருக்கு உதவியாளராக வேலை செய்தவர் தன்னை இந்துவாகக் காட்டிக் கொண்ட ஒரு முஸ்லிம் என்றும் இவர் ஆலயத்தில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்தார் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது நான்காவது கற்பனை குருநாகலில் ஒரு முஸ்லிம் மகப்பேற்று நிபுணர் தனது சத்திரசிகிச்சைகளின் போது முஸ்லிம்கள் அல்லாத நோயாளர்களுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே; கர்ப்பத் தடை செய்ததாக கூறப்படுவது

முஸ்லிம்கள் தொடர்பான இவ்வாறான கற்பனைகள் கட்டுக்கதைகள் இணையப் பரப்பில் குறிப்பாக சமூக வலைத்தளங்களிலும் சில பிரதான நீரோட்ட ஊடகங்களிலும் ஓர் ஆபத்தான தொற்று வியாதி போல அல்லது விஷம் போல வேகமாகப் பரவி வருகின்றன. இது ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பின்னர்தான் பரவி வருகின்றது என்பதல்ல.ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு முன்னரே பல மாதங்களுக்கு முன்பு அம்பாறையில் தொடங்கி கண்டி வரையிலும் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட தாக்குதலின் போதும் இதுபோன்ற வதந்திகள் உலாவின.கட்டுக் கதைகள் உலாவின. அம்பாறையில் முஸ்லிமுக்கு சொந்தமான ஒரு கொத்து ரொட்டி கடையில் கொத்து ரொட்டியில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்;படுவதாக பரவிய வதந்திகளும் திகன தாக்குதல்களுக்கு ஒரு காரணம் ஆகும.

இவ்வாறு பரவும் வதந்திகள் அல்லது கற்பனைக் கதைகளில் பெரும்பாலானவை முஸ்லிம்கள் அல்லாத ஏனைய இனத்தவர்களின் கருத்தரிக்கும் ஆற்றலை தடுப்பதற்காக முஸ்லிம்கள் சதி செய்கிறார்கள் என்ற ஒரு எடுகோளின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. இந்த எடுகோள்கள் எங்கிருந்து வருகின்றன? முஸ்லிம்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் தமது சனத்தொகையை பெருக்கி வருகிறார்கள் என்ற ஓர் அவதானிப்பிலிருந்துதான் இந்த அவதானிப்பு இலங்கைத் தீவுக்கு மட்டும் உரியதல்ல. உலகம் முழுவதும் இப்படி ஒர் அச்சம் உண்டு. முஸ்லிம்களின் சனத்தொகை பெருக்கமானது எதிர்காலத்தில் ஏனைய முஸ்லிம்கள் அல்லாத இனங்களுக்கு ஆபத்தானது என்றும் அது ஏனைய முஸ்லிம்கள் அல்லாத இனங்களை அவர்களுடைய சொந்த நாடுகளிலேயே சிறுபான்மையினர் ஆக்கிவிடும் என்று ஒர் அச்சம் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது.

குறிப்பாக செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் அதாவது பச்சை ஆபத்து என்று அழைக்கப்படுகின்ற இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான மேற்கு நாடுகளின் யுத்தத்தின் பின்னணியில் மேற்கண்டவாறான கற்பனைகளும் வதந்திகளும் கட்டுக்கதைகளும் உலகம் முழுவதிலும் பரவி வருகின்றன . முஸ்லிம்களின் சனத்தொகை ஏனைய இனங்களோடு ஒப்பிடுகையில் அதிகரித்த விகிதத்தில் பெருகி வருகிறது என்று ஒரு புள்ளிவிவரம் காட்டப்படுகிறது. இஸ்லாமோஃபோபியா எனப்படுகின்ற இஸ்லாத்துக்கு எதிரான அச்சத்தின் பின்னணியில் மேற்படி புள்ளி விபரங்களும் வதந்திகளும் கட்டுக்கதைகளும் அதிகரித்த அளவில் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக ஏற்கனவே இனங்களுக்கிடையில் முரண்பாடுகளும் சந்தேகங்களும் தேவையற்ற அச்சங்களும் நிறுவனமயப்பட்டு இறுகிக் கட்டிபத்திப் போயிருக்கும் இலங்கை தீவில் முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கண்டவாறான கட்டுக்கதைகளும் வதந்திகளும் இலகுவாகப்பரவி விடுகின்றன. அவ்வாறு பரவுவதை இணையப்பரப்பு குறிப்பாக சமூக வலைத்தளங்கள் அதிகம் ஊக்குவிக்கின்றன.

ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின் இலங்கைத் தீவில் இதுவரையிலும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான முஸ்;லிம்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள.; இதில் ஒரு பகுதியினர் கற்பனையான பயங்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முற்கற்பிதங்கள் என்பவற்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக முஸ்லீம் வழக்கறிஞர்களும் புத்திஜீவிகளும் குற்றம்சாட்டுகிறார்கள.

ஒர் ஏழை முஸ்லீம் பெண்ணின் ஆடையில் தர்ம சக்கரத்தை ஒத்த ஒரு சித்திரம் காணப்பட்டதை அடுத்து அவர் பிடிக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். ஆனால் அவருடைய ஆடையில் காணப்பட்ட சித்திரம் தர்மசக்கரம் அல்லவென்றும் கப்பலை ஓட்டும் சுக்கானே என்றும் கூறப்படுகிறது. சுக்கான் சித்திரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்த குற்றத்துக்காக ஒரு அப்பாவிப் பெண் 21 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். முகத்தை மூடிமுக்காடு அணிந்த காரணத்துக்காக முஸ்லிம் பெண்கள் பொது இடங்களிலும் அலுவலகங்களிலும் அவமானப்படுத்தப்படுகிறார்கள். முஸ்லீம் பெண்களில் ஒரு பகுதியினர் வீட்டை விட்டு வெளியில் வரத் தயங்குவதாகக் கூறப்படுகிறது.சோதனைச்சாவடிகளில் முஸ்லிம் அடையாளம் எனப்படுவது சந்தேகத்துக்குரிய ஒன்றாகவும் அற்ப காரணங்களுக்காக கைது செய்யப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாகவும் மாறியிருக்கிறது.ஈழப் போரில் தமிழ் மக்கள் படைத் தரப்புக்குத்தான் அஞ்சினார்கள். ஆனால் இப்பொழுது முஸ்லிம்கள் படைத்தரப்புக்கு மட்டுமல்ல நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அல்லாத பெரும்பாலானவர்களுக்கு அஞ்சும் ஒரு நிலை தோன்றியுள்ளது என்று கிழக்கில் உள்ள ஒரு புலைமையாளர் கூறுகிறார்.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் மீது தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் தாக்குதல்கள், அவமதிப்புகள்,கைது,சுற்றிவளைப்புக்கள் அச்சுறுத்தல்கள் போன்றவற்றின் விளைவாக கடந்த வாரம் முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் கூடி அரசாங்கத்தில் தாங்கள் வகித்து வரும் பொறுப்புகளை துறப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.இந்த முடிவு மூலம் குற்றம் சாட்டப்படட முஸ்லீம் தலைவர்களுடன் அனைத்து முஸ்லீம் தலைவர்களும் ஒன்றாக நின்று தமது சகோதரத்துவத்தை எண்பித்திருக்கிறார்கள.; அதுமட்டுமல்ல ஏனைய முஸ்லீம் தலைவர்கள் மீதான தனது மேலாண்மையை ரவூப் ஹக்கீம் உறுதிப்படுத்தவும் இது உதவியுள்ளது. தேரர்களின் எதிர்ப்பு அதன் தர்கபூர்வ விளைவாக ரிசாத்தை முஸ்லிம்கள் மத்தியில் ஒரு தியாகியாக்கக்கூடிய ஒரு கொதிப்பான சூழ்நிலை ஏற்பட்ட போது ஹக்கீம் முஸ்லீம் ஐக்கியத்தைப் பாதுகாத்ததன் மூலம் தனது தலைமைத்துவதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இந்த முடிவு சிங்கள பௌத்த பெருந்தேசியவாதிகள் எதிர்பார்த்திராத ஒரு முடிவு என்பதனால்தான் கடந்த புதன்கிழமை மகாநாயக்கர்கள் கூடி இம்முடிவை கைவிடுமாறு முஸ்லிம் தலைவர்களை கேட்டிருக்கிறார்கள். எனினும் மகா நாயக்கர்களின் கோரிக்கைகளில் ஒரு விடயம் ஒளிந்திருக்கிறது அதாவது குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் அரசியல்வாதிகள் தவிர ஏனையவர்கள் தமது பதவி பொறுப்புக்களை மறுபடியும் ஏற்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் சிங்கள மக்களால் மட்டும் அல்ல தமிழ் தரப்பாலும் சந்தேகப்படுகிறார்கள் என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அவர்களுடைய நிலைப்பாடு தமிழ்த் தேசிய நோக்குநிலையை சிதைக்கும் உள்நோக்கமுடையது. ஹிஸ்புல்லாவின் பேச்சுக்கள் பல அதற்கு சான்றாக கிடைக்கின்றன. அதுபோலவே ரிஷாட் பதியுதீன் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர் என்ற ஓர் அபிப்பிராயம் ஒரு தமிழ் பொதுக்கருத்தாக உண்டு

கிழக்கில் வடக்கை விட அதிகரித்த அளவில் தமிழ் முஸ்லிம் இடைவெளி கூடுதலாக காணப்படுகிறது. இந்த இடைவெளியைக்கையாண்டு முன்பு பிள்ளையான் அரசியல் செய்தார். இப்பொழுது வியாழேந்திரன் அரசியல் செய்ய முயற்சிக்கிறார்.எனினும் தமிழ் முஸ்லிம் உறவுகள் செழிப்பான நிலையில் இல்லை என்ற போதிலும் கூட இங்கு மிக முக்கியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயம் உண்டு. அது என்னவெனில் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளின் பின்னரும் கூட முஸ்லிம் சமூகத்தின் மீது தமிழ்ச் சமூகம் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது குழுவாகவோ எந்த ஒரு தாக்குதலையும் இதுவரையிலும் செய்திருக்கவில்லை என்பதே அது.ஈஸ்டர் குண்டு வெடிப்புக்களில் கணிசமான அளவுக்கு பாதிக்கப்பட்டது தமிழ் மக்களே.

ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்கு முன்னரும் கூட தமிழ் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் என்று பார்த்தால் சில உதிரிச் சம்பவங்களைத் தான் கூற முடியும். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கமும் உட்பட சில தமிழ் இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல்களை தொடுத்திருக்கின்றன. எனினும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஹக்கீம்-பிரபாகரன் உடன்படிக்கையோடு அவ்வாறான தாக்குதல்களை அனேகமாகக் கட்டுப்படுத்தியது. அவ்வாறு தமிழ் தரப்பில் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்கள் குறைந்த ஒரு பின்னணியில்தான் முஸ்லிம் சமூகம் தென்னிலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை அச்சமின்றியும் தடைகளின்றியும் அதிகரித்த வேகத்தில் முன்னெடுக்க கூடியதாக இருந்தது.

வடக்கை விடக்கூடுதலான அளவிற்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட குறிப்பாக ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பின்னரும் கூட சாதாரண தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் மீது தனிப்பட்ட ரீதியாகவும் தாக்கவில்லை. சமூகமாகவும் தாக்கவில்லை.கிழக்கில் உள்ள தமிழ்ச் சிவில் அமைப்புகளும் கிறிஸ்தவ சமூகப் பணி அமைப்புகளும் கிழக்கிலிருந்து வரும் அரங்கம் பத்திரிகையும் தமிழ் மக்களைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆற்றுப்படுத்தியிருக்கின்றன. இது மிகச் செழிப்பான ஒரம்சம்.தமிழ் மக்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு பண்பாடு. தென்னிலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் மகா சங்கத்தில் ஒரு பகுதியின் உறுதுணையோடு நன்கு திட்டமிடப்பட்டு நிறுவனமயப்பட்டு நடந்து வருகின்றன.முஸ்லிம்களின் பொருளாதார இலக்குகள் திட்டமிட்டுத் தாக்கப்படுகிள்றன. ஆனால் தமிழ்ப் பகுதிகளில் அப்படிப்பட்ட தாக்குதல்கள் அனேகமாக இல்லை எனலாம்.

இத்தனைக்கும் யுத்தகாலங்களில் முஸ்லிம் சனத்தொகையில் ஒரு பகுதியினர் படைத்தரப்புடன் நின்றார்கள. அவர்களுடைய இரு மொழி மும்மொழிப் புலமை காரணமாக அவர்களை புலனாய்வுத்துறைக்குள் அரசாங்கம் உள்வாங்கியது. திகன கலவரங்களின் போதும் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் பின்னரும் புலனாய்வு தரப்பைச் சேர்ந்த படை அதிகாரிகள் இதை ச்சுட்டிக் காட்டியிருக்கிறார்கள.; முஸ்லிம் புலனாய்வாளர்களின் உதவியின்றி யுத்தத்தை வென்றிருக்க முடியாது என்ற தொனிப்பட அவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இது தவிர இறுதிக்கட்டப்போரில் குறிப்பாக மே மாதம் பதினெட்டாம் திகதி திகதிக்குப் பின் தென்னிலங்கையில் யுத்த வெற்றியை கொண்டாடியவர்களின் மத்தியில் ஒரு பகுதி முஸ்லீம்களும் காணப்பட்டிருக்கிறார்கள்.

எனினும் இவ்வாறான கசப்பான அனுபவங்களின் பின்னணியிலும் குறிப்பாக கிழக்கில் இரண்டு தரப்பும் குருதி சிந்திய பின்னரும் தமிழ்ப் பொது மக்கள் முஸ்லீம் மக்களின் மீது பழிவாங்கம் தாக்குதல்கள் எதையுமே இன்றுவரையிலும் கொடுத்திருக்கவில்லை.கிழக்கில் சீயோன் தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் பின் மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு கடைகளை வாடகைக்குக் கொடுத்திருந்த கடை உரிமையாளர்கள் சில கடைகளை திரும்பப் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் நகரங்களில் முஸ்லிம் வர்த்தகர்களை ஒதுக்கும் விதத்தில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக அனாமதேய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பபட்டிருக்கின்றன. வியாழேந்திரனைப் போன்ற அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.

ஆனாலும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ்ப் பொதுசனத்தால் நிறுவனமயப்பட்ட ரீதியில் எந்த ஒரு தாக்குதலும் நடத்தப்படவில்லை. இச்செழிப்பான முன்னுதாரணத்திலிருந்து சிங்களத் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும்கற்றுக்கொள்ள வேண்டும். இச் செழிப்பான முன்னுதாரணத்திலிருந்து சிந்தித்தால் மட்டும்தான் இலங்கைத் தீவில் முஸ்லிம்களின் எதிர்காலம் ஆகக் கூடிய பட்சம் பாதுகாப்பானதாக அமையும். மாறாக முஸ்லிம் சமூகம் எவ்வளவுதான் கீழிறங்கி வந்து சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்துடன் இணக்க அரசியலை முன்னெடுத்தாலும் ஞானசார தேரர்களும் ரத்ன தேரர்களும் தொடர்ந்தும் பிறந்து கொண்டே யிருப்பார்கள்.

நிலாந்தன்

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

புதிய ஆளுநர்கள் புதிய வியூகம் – நிலாந்தன்

மாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com