சற்று முன்
Home / இந்தியா / சீமானுக்கு ஒரு திறந்த மடல்!!! – அமரதாஸ்

சீமானுக்கு ஒரு திறந்த மடல்!!! – அமரதாஸ்

amarathaasஅன்பிற்கும் நட்பிற்குமுரிய சீமான் அவர்களுக்கு…

நீண்ட காலத்திற்கு முன்னரேயே உங்களுக்கு ஒரு விரிவான மடலை எழுத நினைத்திருந்தேன். சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. தமிழகத்தில், தேர்தல் சார்ந்த அலைக்கழிவுகள் குறைந்து, இப்போது கொஞ்சம் அமைதியாக இருப்பீர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு மடலை மிகவும் சுருக்கமாக எழுதிப் பகிரங்கமாகவே வெளியிடலாம் என்று தோன்றியது. உங்களது ஆரோக்கியமான முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன். அதே நேரத்தில், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மேற்கொள்ளும் ஆரோக்கியமற்ற, முதிர்ச்சியற்ற செயல்களையும் தோல்விகளையும் பரிசீலனை செய்யுங்கள் என்றும், தோல்விகளை ஒப்புக்கொண்டு அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு தமிழின நலன் சார்ந்து தொடர்ந்து பயணியுங்கள் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இது, உங்களோடு என்னை அடையாளப்படுத்தும் நோக்கிலானதோ உங்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கிலானதோ அல்ல.

‘எல்லாளன்’ என்ற திரைப்பட முயற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஒருமுறை நீங்கள் ஈழத்துக்கு வந்திருந்தீர்கள். அப்போதுதான் முதல் முறையாக உங்களைச் சந்தித்தேன். பிறகு, அங்கு தங்கியிருந்த நாட்களில் பலமுறை சந்தித்திருக்கிறேன். உங்களோடு பயணித்திருக்கிறேன். ஈழத்தில், உங்களைப் பல நிலைகளிலும் ஒளிப்படங்கள் எடுத்திருக்கிறேன். ஆயுத ரீதியான ஈழ விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர், தொலைபேசியூடாகவும் பேசியிருக்கிறேன். பிறகு, நட்பின் நிமித்தம் இந்தியாவிலும் சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் உங்களோடு பேச நினைத்திருந்த பல விடையங்களை விரிவாகப் பேசக் கூடிய சூழ்நிலைகள் அமைந்திருக்கவில்லை. உங்கள் நல்லெண்ணங்களையும் பலவீனங்களையும் பலங்களையும் இயல்புகளையும் நான் ஓரளவுக்கு நேரில் அறிந்தவன். இனியும் உங்களைச் சந்திக்க முடிந்தால், நீங்கள் கேட்பதற்குத் தயாராக இருந்தால் தனிப்பட்ட முறையில் உங்களுக்குச் சொல்வதற்கு நிறைய விடையங்கள் இருக்கும்.

ஒரு திரைப்பட இயக்குநராகவே முதலில் உங்களைச் சந்தித்தேன். அப்போது உங்களிடம் கட்சி இருக்கவில்லை. இப்போது, ‘நாம் தமிழர் கட்சி’ யினை உருவாக்கி ஒரு அரசியல் வாதியாகப் பரிணமித்திருக்கிறீர்கள். சரி பிழைகளுக்கப்பால், தமிழினத்தின் நட்புச் சக்தியாகவே உங்கள் கட்சியினைப் பார்க்கிறபடியினாலும், உங்களது சில நடவடிக்கைகளில் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருப்பதனாலும் நட்புரிமையோடு இதனை எழுதுகிறேன். உங்களது துணிச்சலான உண்மையான சில கருத்துக்களை உரிய முறையில் கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ளத் திராணியற்றவர்களும், உங்களது தோல்விகளில் சந்தோசப்படவும் உங்களை நக்கலடிக்கவும் காத்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை என்றாலும், அத்தகையவர்களுக்கான சந்தர்ப்பங்களை நீங்களாகவே சில சமயங்களில் ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறீர்கள். இது, விரிவாக உரையாடப்பட வேண்டியது.13221250_1030837590341728_1872946922188026980_o

பொதுவெளியில் நீங்கள் முன்னெடுக்கிற காரியங்களுக்கான எதிர்வினைகள் பொதுவெளியில் வந்துகொண்டுதான் இருக்கும். ஆரோக்கியமான, நட்புரீதியான விமர்சனங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். நல்லெண்ணம் கொண்ட உங்கள் முயற்சிகளில் அங்காங்கே தவறுகள் இடம்பெறக் கூடிய சாத்தியங்கள் புரிந்துகொள்ளக் கூடியவையானாலும், உங்கள் செயல்களையும் புரிதல்களையும் மறுபரிசீலனை செய்து கொண்டு நீங்கள் முன்னேறவேண்டியது அவசியமானது. இப்போது நடந்து முடிந்த தேர்தலில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வியின் காரணங்களை நீங்கள் ஆராயவேண்டும். மோசமானவர்களும் பொருத்தமில்லாதவர்களும் சுய நலமிகளும் அதிகமதிகம் தொடர்ந்து அதிகாரத்துக்கு வந்துகொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கான காரணங்கள் கண்டறியப்படவேண்டும். அப்படியானால் தான் ஆரோக்கியமான வழிகளில் உங்களால் முன்னேற முடியும்.

ஈழம் சார் விடையங்களை அதிகமதிகம் முன்னிறுத்திய உங்கள் நடவடிக்கைகள் உங்களுக்கான தமிழக அரசியல் செல்வாக்கை, இருப்பை உறுதி செய்து கொள்ளும் உள்நோக்கம் கொண்டதாகப் பலராலும் பார்க்கப்படுகிறது என்பது நீங்கள் அறியாததல்ல. இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கான தடை நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் அவர்களை அங்கிருந்துகொண்டே பகிரங்கமாகப் போற்றுவதும் அவர்களை முன்வைத்து அரசியல் செய்வதும் உங்களது துணிச்சலுக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாகவும் நோக்கப்படுகிறது. ஈழம் சார் விடையங்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் அதன் தலைவருக்கும் நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தினை, உங்கள் நிதானமான செயல்களில் காட்டவேண்டுமென்பதே பலரதும் கருத்தாக இருக்கிறது. ஈழ விடுதலைப் போராட்டத்தைத் தீவிரமாகவும் பெருமளவுக்கு ஆரோக்கியமாகவும் முன்னெடுத்த விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைமையும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையல்ல. விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியிலான ஈழ விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர் என்ற முறையில், அப் போராட்டமானது ஈழத்தில் தோற்கடிக்கப்பட்டமைக்கான காரணங்களை, நீங்கள் உற்று நோக்க வேண்டும். உங்கள் கடந்த காலத்தை மிகைப்படுத்தியோ திரிபு படுத்தியோ பேசுகிறீர்கள் என்று பலரையும் நினைக்க வைக்கிறீர்கள். குறிப்பாக, விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான உங்களது தொடர்புகள் குறித்த கருத்துக்கள் சர்ச்சைகளுக்குரியவை.

ஈழ அரசியல் நிலைமைகளை , தமிழக அரசியல் நிலைமைகளை, இந்திய அரசியல் பின்னணியிலும் சர்வதேச அரசியல் பின்னணியிலும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும். தவிரவும், ஈழ அரசியல் நிலைமைகளும் தமிழக அரசியல் நிலைமைகளும் வெவ்வேறானவை. ஈழத்திலும் தமிழகத்திலும் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதனால் இரண்டு இடங்களிலும் நிலைமைகள் ஒரேமாதிரியானவையல்ல. ஈழம் சார்ந்த தமிழக மக்களின் உண்மையான உணர்வுகளும் ஆதரவு நிலைப்பாடுகளும் கண்ணியமாகவும் பக்குவமாகவும் கையாளப்படவேண்டியவை. தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளின் பல்வேறு நெருக்கடிகள், சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இயங்கும் ஈழத்தவர்களுக்கான மோசமான சிறைகள் போன்ற ஈழம் சம்மந்தப்பட்ட சிக்கலான, அக்கறைகொண்டு செயற்பட வேண்டிய விடையங்களில் அதிகம் கவனமெடுங்கள். உலக அளவில் மிகவும் வலிமையான ஊடகமாக இருக்கும் சினமாவை, அரசியல் சார்ந்தும் திரைத்துறை சார்ந்தும் இருக்கும் உங்களால் ஈழத் தமிழின நலன் சார்ந்தும் ஈழத் தமிழினத்தின் நெருக்கடியான வாழ்வு சார்ந்தும் பயன்படுத்த முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இப்படியானவற்றிலிருந்து உங்களது ஈழ அக்கறைகளை விரிவுபடுத்துவது நல்லதென்று நினைக்கிறேன். மேலும், தமிழகத்தில் இயங்கக் கூடிய நட்பு சக்திகளை இனங்கண்டு, இயன்றவரையில் ஒன்றினைந்த பலமாகி ஜனநாயக ரீதியில், செயற்படுவதே ஆரோக்கியமானது.

ஒரு விடையம் சாத்தியமாகாது என்று கணித்து, அதற்கான முயற்சிகளைக் கைவிட வேண்டியதில்லை. எதையும் சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை முதலில் உருவாக்க வேண்டும். நேர்மையான முயற்சிகள் கூட, நிதானமான பக்குவமான வழிமுறைகள் மூலமே வெற்றிபெறும் என்பது இன்றைய உலக யதார்த்தமாக இருக்கிறது. தேர்தல் அரசியல் மூலம் ஆட்சியதிகாரத்துக்கு வந்து, தமிழனத்துக்கு நீங்கள் ‘நல்லது’ செய்ய நினைத்தால் அது தவறல்ல. தெளிவான சுயவிமர்சனங்களுடன் கூடிய செயற்பாடுகள் அதற்கு அவசியமானவை. மக்களை உணர்ச்சிவசப்படுத்தி, உசுப்பேத்தி, ஆசை வார்த்தைகள் கூறிக் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ளும் தமிழகத்தின் ஏனைய கட்சிகள் போல உங்களது கட்சியும் ஆகிவிடக்கூடாது. தயவு செய்து உங்கள் பேச்சுக்களிலும் செயல்களிலும் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். எதை எப்படிச் சொல்வது, எதை எப்படிச் செய்வது என்ற தெளிவான திட்டங்களோடு இருங்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கும் நீங்கள், கடந்து வந்த பாதையினையும் கடக்கவேண்டியிருக்கிற தூரத்தினையும் கவனத்திலெடுக்க வேண்டும்.

– அமரதாஸ் –

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com