சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள் / தேசிய பாதுகாப்பிற்கு இல்லை. நல்லிணக்கத்திற்கே அச்சுறுத்தல் ! நிருபா குணசேகரலிங்கம்

தேசிய பாதுகாப்பிற்கு இல்லை. நல்லிணக்கத்திற்கே அச்சுறுத்தல் ! நிருபா குணசேகரலிங்கம்

ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் மீது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாரமும் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

அவரது தற்போதைய குற்றச்சாட்டுக்களில், நாட்டில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இதனால் ஆயுதப்பாவனை தலைதூக்கியுள்ளது. அதனைப் புரியாது நடைமுறையில் உள்ள அரசாங்கம் செயற்படுகின்றது என்று தெரிவித்து வருகின்றார். அத்துடன், வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் அரசாங்கத்தினைக் கடுமையாகச் சாடியுள்ளார். இக் குற்றச்சாட்டுக்களைத் மஹிந்த ராஜபக் ஷ முன்வைத்துவிட்டு, வடக்கில் எப்போதும் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாகவும் யுத்த சூழ்நிலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு உபதேசம் செய்துள்ளார்.

ஆயுதங்கள் மீட்கப்பட்டமை போரின் பின்பாக இடம்பெறக்கூடிய வழமையான நிகழ்வு. எனவே, இதனால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இக் கருத்தினை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். விசாரணைகளும் நடைபெற்றே வருகின்றன. எனவே, மஹிந்த ராஜபக் ஷவின் தேசிய பாதுகாப்புக் குறித்த குற்றச்சாட்டுக்கள் இவற்றின் வாயிலாக அற்றுப்போயுள்ளன. எனினும், இத் தேசிய பாதுகாப்புப் பற்றிய சச்சரவு ஒன்றினை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் கூட்டு எதிரணியினர் குறியாகவே இருக்கின்றனர். அவர்கள் குற்றஞ்சாட்டுவதை கைவிடவில்லை. இதற்கு மேலாக தாம் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமது தேசிய பாதுகாப்புக் குறித்து அக்கறை இருப்பதாக கடும்போக்குக்குள் ஓர் நம்பகத்தன்மையினைக் காட்ட கூட்டு எதிரணியினர் எத்தனிக்கின்றனர்.

தேசிய பாதுகாப்பினை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினருக்கு தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றது. ராஜபக் ஷக்களின் ஆட்சியினை 20 ஆண்டுகள் சென்றாலும் கவிழ்க்க முடியாது என்றே அவர்கள் முன்னர் தெரிவித்துவந்தனர். புலிகளுடனான இராணுவ வெற்றி மீது கிடைக்கப்பெற்ற தேர்தல் செல்வாக்கு இழக்கப்படும் என்று மஹிந்த ராஜபக் ஷ ஒருபோதும் நம்பியிருக்கவில்லை.

இவ்வாறானதோர் நம்பிக்கையில் மிதந்தவராகவே கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். இந்த எதிர்பார்க்க முடியாத தேர்தல் தோல்வி மஹிந்த ராஜ பக் ஷ தலைமையிலான செயற்பாட்டாளர்களை இன்றும் ஆட்டிப்படைக்கின்றது. இதன் எதிரொலியாக கூட்டு எதிரணி என தம்மை வடிவமைத்துக்கொண்டு அக் குழு அரசாங்கத்தின் நடத்தைகளால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற பரப்புரையினை வெகுவாக முன்னெடுக்கின்றது.

அசைக்க முடியாத ஆட்சியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை கனவு காண வைத்ததும் தேசிய பாதுகாப்பு என்ற விடயமே. இந்நிலையில், இது சிங்கள மக்களை மனநிலை ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராகத் திசை திருப்புவதற்கு தகுந்த உத்தியாக அமையுமா என்பது ஆராயப்படவேண்டிய ஒன்றேயாகும்.

போருக்குப் பின்னர் நல்லிணக்கம் சார்ந்த சொற்கள் அதிகளவில் உச்சரிக்கப்பட்டிருக்கவும் செயற்படுத்தப்பட்டிருக்கவும் வேண்டும். எனினும் தேசிய பாதுகாப்பு என்ற சொல்லே அதிகளவில் இலங்கையில் கவர்ச்சிக்குரிய கருத்தாகக் கொள்ளப்பட்டது. நல்லிணக்கத்திற்காக தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு பதிலாக இராணுவத்தினருக்கு கட்டவுட் வைக்கப்பட்டது.

தயட்ட கிருள போன்ற இராணுவ கண்காட்சிகள் பெரும் செலவில் நடைபெற்றன. இவ்வாறாக இராணுவம் இலங்கையின் அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டது. இன்று ராஜபக் ஷ குடும்பத்திற்கு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் சரத் பொன்சேகா, இராணுவத்தில் இருந்து அரசியலுக்கு எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டதற்கும் ஆரம்பத்தில் மஹிந்த ராஜபக் ஷவின் இராணுவத்தினரை முன்னிலைப்படுத்திய அரசியலே காரணமாயிருந்தது. மஹிந்த , இராணுவ மயமாக்கத்துடன் நாட்டை வடிவமைக்க எடுத்த முயற்சிகளின் தாக்கமே இன்று யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடக்கின்ற நிலையிலும், தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்குக் கூட தீர்வை எட்ட முடியாத ஓர் அவலச் சூழ்நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது. சாதாரணமாக தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துவதில் கூட தேசிய பாதுகாப்பு கடும் நிராகரிப்புக்களை கொடுத்துள்ளது.

தேசிய பாதுகாப்பு மீதான எல்லை கடந்த அபிப்பிராய நம்பிக்கைகள் காரணமாக, நல்லிணக்கத்திற்காக போரின் பின் கனிந்த சந்தர்ப்பங்கள் பல உதறி எறியப்பட்டு விட்டன. மஹிந்த தரப்பினர் யாழில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கியுடன் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் இக் காலப்பகுதியையும் வரலாற்றின் சாபக்கேடான காலகட்டமாக மாற்றிவிடுமோ என்ற அச்சம் தமிழ்த் தரப்புக்களிடம் அதிகமாகவுள்ளது.

 இவ் ஆண்டினை தமிழ் மக்கள் அரசியல் தீர்விற்கான ஆண்டாகவே பார்க்கின்றனர். அப்படியானதோர் இடத்தில் கூட்டு எதிரணியினர் தமது அரசியல் இலாபம் கருதி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தென்னிலங்கையில் முன்வைக்கும் பிரசாரங்கள் சிங்கள மக்களை நல்லிணக்கத்திற்கு எதிரான திசையில் கொண்டு செல்லும் அபாய நிலைமையுள்ளது. இந்த நிலையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், தற்கொலை அங்கி தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் இதற்கு தமிழர்கள் துணைபோகவில்லை என்ற நிலைப்பாட்டையும் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு என்பது மக்களின் பாதுகாப்பிற்கானது என்ற நிலைமை மாற்றங்கண்டு, அதனை வைத்து அரசியல் செய்வதற்கான களம் ஒன்றே தென்னிலங்கையில் தற்போதும் இருந்து வருகின்றது என்பதை மறுக்க முடியாது. மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் தனது பதவிக்காலத்தில் வெகுவாக முன்னெடுத்த இராணுவ மயமாக்கம் இந்த நிலைமைக்கு பிரதான காரணமாக இன்றும் உள்ளது. இது நேரடியாகவே ஜனநாயகத்தினை பாதிக்கும் முயற்சியாகும்.

தமிழ் மக்கள், இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு சம அந்தஸ்து உள்ள மக்களாக ஒரே நாட்டிற்குள் தாமும் வாழவே விருப்பம் கொண்டுள்ளனர். இவ்வாறானதோர் சூழ்நிலையில் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையினைக் கூட ஏற்றுக்கொள்ளாத மனநிலையில் இன்றும் சிங்கள கடும்போக்குவாத சக்திகள் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இவ்வாறான விடயம் நல்லிணக்கத்திற்கான நம்பிக்கையினை தகர்ப்பதாகவே அமைகின்றது.

பாதுகாப்புப் பற்றி உலகளவில் தற்போது இருவேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அதாவது மரபு வழிப் பாதுகாப்புக் கொள்கை, மற்றையது மக்கள் பாதுகாப்பினை மையமாகக் கொண்ட மரபுசாரா பாதுகாப்புக் கொள்கையாகும். மரபு சாராப் பாதுகாப்புக் கொள்கை என்பது, மக்களின் பாதுகாப்புடன் தொடர்புபட்டது. பாதுகாப்பு என்பது மக்களுக்கானதாகவே அமைய வேண்டும் என்றே வலியுறுத்தப்படுகின்றது. இந்த புதிய பாதுகாப்புக் கொள்கை என்பது அடிப்படையில் இராணுவப் பாதுகாப்பினை மாத்திரம் கொண்டதல்ல. மாறாக பொருளியல் பாதுகாப்பினுள் உள்ளடங்கும் வளர்ச்சி, சமூக நலன், உறுதிநிலை என்பவற்றினையும் மக்களின் நிறைவான வாழ்க்கையினையும் உறுதிசெய்வதாக அமைய வேண்டும். ஆனால், இலங்கையில் துரதிஷ்டவசமாக பாதுகாப்பு என்பது துப்பாக்கியுடன் பிரதேசங்களை ஆட்சி செய்வதாகவே பொது எதிரணியினரால் அர்த்தப்படுத்தப்படுகின்றது.

தேசியப்பாதுகாப்பு விடயத்தில் அநேக ஊடகங்களும் மரபுவழிப் பாதுகாப்புக் குறித்தே அதிகம் பிரசாரம் செய்கின்றன. அரசாங்கத்திற்கு எதிராகவுள்ள சிங்கள அரசியல் தலைவர்கள், உயர் குழுக்களின் பிரதிநிதிகள் வெளிப்படுத்தும் தீவிரவாதம், மரபுவழிப்பாதுகாப்பிற்கு ஆதரவு தருவதாகவுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரத்திலும் சுபீட்சத்திலும் பெரும் பாதிப்புக்கள் ஏற்படவே வாய்ப்புக்கள் உள்ளன.

நாட்டின் தேசிய நல்லிணக்கம் பற்றி சிந்திக்கப்பட வேண்டிய இன்றைய தருணத்தில் அம் முயற்சிகளை முடக்கும் வகையில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற அபிப்பிராயம் ஏற்படுத்தப்படுகின்றது. இது பல கோணங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது. எனவே ஆரோக்கியமற்ற அரசியல் நடத்தை தொடர்வதற்கான அறிகுறிகளே தெரிகின்றன. எனவே தேசிய பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் எனக் கூறுவதைக்காட்டிலும் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதுவே யதார்த்தமாகும்.

வடக்கில் மக்களின் காணிகளில் ஒரு பகுதி மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்படுகின்றமையை இராணுவ வெளியேற்றம் என சிங்கள மக்கள் மத்தியில் தெரிவிக்கப்படுகின்றது. இதனை, உங்களுக்குச் சொந்தமான காணிகளை உங்களுக்குக் கொடுக்கும் போது தென்னிலங்கையில் சிலர் இனவாதம் பேசுகின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைய வாரங்களில் சுட்டிக்காட்டியிருந்தார். இராணுவத்தினர் வசமிருந்த தெல்லிப்பழை நடேஸ்வராக் கல்லூரியினையும் மக்களின் நிலங்களில் குறிப்பிட்ட ஏக்கர்களையும் மீள மக்களிடம் கையளிக்கும் வைபவத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

யுத்த காலத்திலும் அதற்குப் பின்பாகவும் சட்டத்திற்கு முரணாகவும் நியாயத்திற்குப் புறம்பாகவும் இராணுவத்தினரால் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்கின்றனர். மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதை விமர்சிப்போர்;, இராணுவத்தினர் மக்களின் வளமிக்க விவசாய காணிகளையும் கடல் வளத்தினையும் குடியிருப்புக்களையும் தம்வசம் வைத்திருப்பதில் உள்ள இழப்புக்கள் பற்றி கவனம் செலுத்துவதில்லை. யுத்தத்தின் பின்பாகவும் மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது என்பது பற்றி தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தில் இன்று அதிகம் கர்ச்சிப்போர் கருத்துக்களை வெளியிட்டதில்லை. ஆகவே இவர்கள் மக்களின் பாதுகாப்பினை புறமொதுக்கி இராணுவ மயமாக்கமே தேசிய பாதுகாப்பிற்கு அடிப்படையானது என்ற அபிப்பிராயத்தினை ஏற்படுத்த நினைக்கின்றனர். மேலும், தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தினை கூட்டு எதிர்க்கட்சியினர் தமது அரசியல் இருப்பிற்கான பாதுகாப்புக்கோசமாகவே பயன்படுத்த முனைகின்றனர்.

இதற்கு மேலாக மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் அரச நிர்வாகம் மற்றும் இதர துறைகளிலும்; இராணுவத் தலையீடுகள் தேவைக்குப் புறம்பாகக் காணப்பட்டன. வடக்குக் கிழக்கு உட்பட நாட்டின் சகல பாகங்களிலும் நடைபெறும் பொது நிகழ்வுகளுக்கு கூட இராணுவ புலனாய்வுத்துறையினர் நேரடியாகவே வருகை தந்து புகைப்படம் எடுத்தல், ஒலி மற்றும் ஒளிப்பதிவு செய்தல், ஆராய்தல், விசாரித்தல் என மேசமான ஜனநாயக மறுப்புக்களில் ஈடுபட்டுவந்தனர். இன்றைய அரசாங்கம் அவை எல்லாவற்றினையும் கைவிட்டு விட்டது என்பதற்கு உத்தரவாதமளிக்கவில்லை. ஆயினும் வெளிப்படையாக தெரியுமளவிற்கு அவ்வாறான விடயங்கள் நடக்கவில்லை.

மறவன்புலவுப் பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டமையுடன் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் விளையாடுகின்றது என்ற குற்றச்சாட்டினை இலங்கையின் அரசியலில் புத்திஜீவியாக ஒரு சந்தர்ப்பத்தில் மதிக்கப்பட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார். முன்னர் முற்போக்கானவர்களாகக் காட்டிக்கொண்ட பலர் தற்போது அரசியலில் மாறுபட்ட வடிவங்களை எடுக்கின்றனர். வாசுதேவ நாணயக்காரவுக்கும் இது பொருந்தும். நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தி அதன் பயன்களை மக்கள் அனுபவிப்பதற்கு இந் நடத்தைகள் தடைகளாகவுள்ளன. இவ்வாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுவது சிங்கள மக்களையும் போசிப்பதற்கானது என்று ஏறாவூரில் கூறியிருந்தார்.

நடைமுறையில் அரசியல் நல்லிணக்கத்திற்காக சிங்கள கடும்போக்குவாத சக்திகளிடம் இருந்து சிங்கள மக்களை காப்பாற்றப்படவேண்டிய பெரும்பொறுப்பு சகல மட்டங்களிலும் உள்ளது. கடும்போக்குவாதத்தில் இருந்து விடுபடாது கூட்டு எதிரணி போன்றவற்றின் நிகழ்ச்சி நிரல் மக்கள் மத்தியில் பயணிக்குமாயின் அது சிங்கள மக்களின் மனநிலையினை குழப்புவதற்கான சந்தர்ப்பமாக அமைந்து விடும். இதனால் நல்லிணக்கத்திற்கான சந்தர்ப்பங்களை அற்றுப்போய் விடும். ஆகவே தமிழ் மற்றும் சிங்கள மக்களை நோக்கியதாக சரியான அபிப்பிராயங்களை கட்டமைக்கத் தக்க வேலைத்திட்டங்கள் காலத்தின் தேவையாகவுள்ளன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஞானசார தேரர்களும் ரத்ன தேரர்களும் பிறந்து கொண்டேயிருப்பார்கள்!

யாழ்ப்பாணத்தில் புடவைக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண் உள்ளாடைகள் வாங்குவதற்கு வந்த ஒரு பெண் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com