சற்று முன்
Home / Uncategorized / அமெரிக்கா மீது இணையத்தாக்குதல்: 1.4 கோடி பேர் பாதிப்பு?

அமெரிக்கா மீது இணையத்தாக்குதல்: 1.4 கோடி பேர் பாதிப்பு?

சீனாவுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இணைய தாக்குதலாளிகள் அமெரிக்க புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரிகள் பற்றிய அதிமுக்கிய இரகசியத்தரவுகளை இணைய வழியாக கைப்பற்றியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் இப்படியானதொரு பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் குறித்த விவரங்கள் கடந்த வாரம் அமெரிக்க அரசால் வெளியிடப்பட்டது. அதைத்தாண்டி, இரண்டாவது இணையமீறல் சம்பவம் ஒன்று நடந்திருப்பது குறித்த விவரங்களை அமெரிக்க அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அதிஉயர் இரகசியத்தன்மை வாய்ந்த அமெரிக்க இணையம் மீதான அத்துமீறிய தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர் அச்சுறுத்தலுக்கும், மிரட்டல்களுக்கும் உள்ளாகலாம் என்கிற அச்சங்களை தோற்றுவித்துள்ளது.
இந்த விஷயத்துடன் நேரடித்தொடர்புள்ள ஓ.பி.எம் எனப்படும் தனிநபர் முகாமைத்துவ அலுவலகம் இன்னமும் இது குறித்து அதிகாரப்பூர்வ கருத்து எதனையும் வெளியிடவில்லை.
அமெரிக்காவின் புலனாய்வு மற்றும் இராணுவத்தினர் தம்மைப்பற்றிய பின்னணியை ஆராய்வதற்காக பணியில் சேரும்போதும், சேர்ந்த பிறகும் அரசுக்கு சமர்ப்பிக்கும் பின்னணி பாதுகாப்பு பரிசோதனை படிவங்களையே இந்த இணைய தாக்குதலை நடத்தியவர்கள் குறிவைத்திருந்ததாக அசோசியேட்டர் செய்திச் சேவையிடம் பேசிய அடையாளம் வெளிப்படுத்த விரும்பாத அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த படிவங்களில் அதிகாரிகளின் கண்ணின் நிறம் முதற் கொண்டு, அவர்களின் கடந்தகால நிதிநிலைமை, கடந்த காலங்களில் அவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தினார்களா இல்லையா என்பது தொடர்பான விவரங்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களின் விபரங்களும் இருக்கின்றன.
அரச ஊழியர்களின் பின்னணி விவரங்கள் இணையம் மூலம் அணுகப்பட்டதாக, இது குறித்து விசாரணை மேற்கொள்பவர்கள் அதிக அளவு நம்புவதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இணையத்தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்தத் தகவல்கள் ஒரு தங்கச் சுரங்கம் போன்றவை என இது குறித்துக் கருத்து தெரிவித்த அமெரிக்காவின் முன்னாள் ஒற்றர்களை வேவுபார்க்கும் அதிகாரி ஜோயல் பிரனர் கூறினார்.
சென்றவாரம் அமெரிக்காவின் அரச ஊழியர்களின் தனிப்பட்டத் தரவுகள் மீது நடத்தப்பட்ட இணையத்தாக்குதல் என்பது முன்பு கூறப்பட்டிருந்ததைவிட மிகப்பெரிய அளவில் நடந்திருப்பதாகவும் தற்போது தெரியவந்திருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த இணைய தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் 4 மில்லியன் பேர் என ஆரம்பத்தில் கணக்கிடப்பட்டாலும், இது குறித்த விசாரணைக்கு நெருக்கமான அதிகாரிகள் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 மில்லியன் பேராக இருக்கலாம் என அசோசியேட்டட் பிரஸ் செய்தி சேவைக்கு தற்போது தெரிவித்துள்ளனர்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கொழும்பின் புறநகர் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஒருவர் பலி!

கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com