சற்று முன்
Home / செய்திகள் / போரானது எம்மை அழித்;தபோதும் “நாம் தமிழர்” என்ற அடையாளத்தை உலக அரங்கில் பொறித்துள்ளோம் – முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

போரானது எம்மை அழித்;தபோதும் “நாம் தமிழர்” என்ற அடையாளத்தை உலக அரங்கில் பொறித்துள்ளோம் – முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

CM-1போரானது எம்மைப் பெருத்த அழிவுகளுக்குள் இட்டுச் சென்றாலும் உலக அரங்கில் “நாம் தமிழர்” என்ற அடையாளத்தையும் பொறிக்க உதவி செய்துள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசிய நாட்கள் போய் பிறநாட்டு நல்லறிஞர் எம்மை வெகுவாகப் புகழ்ந்து பேசும் நிலையை அடைந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

கைதடி மேற்கு சரஸ்வரதி சனசமூக நிலைய புதிய கட்டிடத் திறப்பு விழா
28.07.2016 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில்
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரைநிகழ்த்தியபோதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,
அவரது உரையின் முழுவடிவம் வருமாறு,

குருர் ப்ரம்மா …..
தலைவரவர்களே, சிறப்பு விருந்தினர்களே, சரஸ்வதி சனசமூக நிலைய அங்கத்தவர்களே, சகோதர சகோதரிகளே, இளைஞர் யுவதிகளே!
இப்பொழுதெல்லாம் பலரின் வயிற்றெரிச்லை நான் சம்பாதிக்க வேண்டியுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ஈடுகொடுக்க உடலும் இடம் கொடுக்க மறுக்கின்றது. வேலைப்பளுக்களும் வேகமாகச் சுமை ஏற்றி நிற்கின்றன. எவரின் மனதையும் புண்படுத்த விருப்பமில்லாமையால் “முடியாது” என்று அறிவித்த இந்தக் கூட்டத்திற்கு முயன்று வந்து கலந்து கொண்டிருக்கின்றேன். காலை 10 மணிக்கு ஒரு முக்கிய கூட்டம் இருக்கின்றது. பக்கத்தில்தானே எமது காரியாலயம் என்ற நினைவில் விரைவில் வந்து செல்ல எத்தனித்துள்ளேன்.
மேலும் ஒரு காரணம் என்னை இங்கு அழைத்து வந்துள்ளது. யாழ் மாவட்ட சனசமூக நிலையங்கள் பலவற்றிலும் செயற்பாடுகளில் முன்னிற்று அறுபது அகவையில் அசையாது நிலைபெற்றிருக்கும் உங்கள் சனசமூக நிலையத்தைப் பாராட்ட, ஆசிகூற வேண்டிய ஒரு கடப்பாடு என்னைச் சார்ந்துள்ளதையும் நான் உணர்ந்தேன். தரமான சேவையை நாம் தட்டிக் கொடுக்காவிட்டால் எம் கடமையை நாம் தட்டிக் கழித்தவர்கள் ஆகிவிடுவோம்.
இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்ததில் நிறைவான மனமகிழ்ச்சி அடைகின்றேன். புறம் என்னைப் புறுபுறுக்க வைத்தாலும் அகம் உங்கள் அகவை அறுபதின் பூர்த்தியையும் வைரவிழாக் கட்டடத் திறப்பின் அழகையும் கண்டு அகமகிழ்கின்றது.
பல கிளைகளை வெளிநாடுகளில் திறந்துள்ளீர்கள். சுவிஸ்கிளை, பிரான்ஸ்கிளை, இலண்டன்கிளை, டென்மார்க்கிளை என்று உங்கள் மத்தியில் பிறந்து வளர்ந்த சகோதர உறவுகள் அங்கு சென்று கிளைகள் அமைத்திருப்பதால் கைதடி மக்களின் மாண்பைக் கண்கூடாகக் கண்டு களிக்க வழி அமைந்துள்ளது. உங்கள் யாவருக்கும் என் பாராட்டுக்கள்.
போரானது எம்மைப் பெருத்த அழிவுகளுக்குள் இட்டுச் சென்றாலும் உலக அரங்கில் “நாம் தமிழர்” என்ற அடையாளத்தையும் பொறிக்க உதவி செய்துள்ளது. மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசிய நாட்கள் போய் பிறநாட்டு நல்லறிஞர் எம்மை வெகுவாகப் புகழ்ந்து பேசும் நிலையை அடைந்துள்ளோம். பிறநாட்டு எம்மவர்களின் தரமான கொடையானது முறையாக எம்மை முயன்று முன்னேற வழி வகுத்துள்ளது.
உங்கள் செய்திச் சாளரத்தின் வாயிலாக உங்கள் உவப்பான உலகத்தில் ஓரளவு உலாவர முடிந்தது என்னால்! பலவகையான சேவைகள், பலவகையான வெற்றிகள், பலவகையான திட்ட முயற்சிகள் என்று உங்கள் சேவைகள் பாராட்டுக்கு உரியனவாக அமைந்திருப்பதை அவதானித்தேன்.
உங்கள் சிரமதானப் பணி என் கவனத்தை ஈர்த்தது. இவ்வருடம் ஜனவரி பத்தாந்திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிக்கு உங்கள் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் விளையாட்டுக்கழக உறுப்பினர்களுடன் சுமார் அறுபது பேர் சேர்ந்து உதய நகரில் ஆரம்பித்து தெருநகர், கோவையூர் ஊடான கல்லாக வீதி வழியாக நேவையூரைச் சென்றடையும் 3 கிலோமீற்றர் தூர நீளமான வீதியினைச் சிரமதானப் பணிமூலம் தூய்மைப் படுத்தியமை என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நான் பதவிக்கு வந்த சில மாதங்களில் பல இளைஞர் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு எமது அலுவலக அனுசரணையுடன் மாதமொன்றுக்கு ஒரு சிரமதானப் பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டிருந்தேன். பல காரணங்கள் என் உள்ளக் கிடக்கையை உரியவாறு உயிர் பெற்றுயர விடவில்லை. பின்னர்தான் அறிந்தேன், எனது அலுவலக அசிரத்தையே அத் தோல்விகளுக்கு காரணம் என்று. சிரமதானத்திற்கான மனோநிலையை எம் மக்களில் பலர் இழந்து நிற்கின்றார்கள்.
சிரமதானம் என்பது எமது மக்களை ஒன்றிணைக்கக் கூடிய ஒரு உன்னதமான கைங்கரியம். எமது சுற்றுச் சுழலைப் பாதுகாக்க, போக்குவரத்தைப் போதிய வசதியுடன் எதிர்நோக்க, இளைஞர் யுவதிகளிடையே புரிந்துணர்வையும் உத்தமமான ஒரு உறவு நிலையையும் மேம்படுத்த, சேவை மனப்பான்மையை எம் மனதில் மேலோங்கச் செய்ய சிரமதானமானது வழி வகுக்கின்றது.
இன்று எமது பட்டினத்து இளைய சமுதாயம், நகர்ப்புற நாகரீக நாயக நாயகியர் பலவிதமான கொடும் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். போதைப் பொருள் பாவனை மட்டுமல்ல கலாசார சீரழிவுகளுக்கும் அவர்கள் காரணமாக இருந்து வருகின்றார்கள். நேற்றையைப் பற்றியோ நாளை பற்றியோ சிந்தனை இல்லாமல் “சாப்பிடுங்கள், குடியுங்கள், உற்சாகமாய் இன்றிருங்கள்” என்ற மனோநிலையில் வாழத் தலைப்பட்டுள்ளார்கள். இது எமது அழிவுக்கு வித்திடும் அறிவற்ற செயலாகும். தரமான வாழ்வு வாழ்ந்த எமது தமிழ் மக்கள் தரங் கெட்டு வாழ்வதை நாம் இடமளிக்க முடியாது.
கிராம மக்களே, கிராம இளைஞர் யுவதிகளே! எமது பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாக்க நீங்கள் முன்வர வேண்டும். நவீனத்தை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய வாழ்க்கை முறையே எமது வாழ்க்கை முறையாக அமைய வேண்டும். பணமும், பகட்டுமே வாழ்க்கை என்றிருப்பவர்கள் வாழ்க்கையில் நாங்கள் பண்பையும் பணிசெய்யும் பாங்கையும் உட்புகுத்த வேண்டும். அதற்கான வழியில் நீங்கள் நடந்து செல்வதை அவதானிக்கின்றேன். உங்கள் சரஸ்வதி சனசமூக நிலையம் நிலையான பண்புகளை நிலைநாட்ட முன்னின்று முயற்சிப்பது எமக்கெல்லாம் பெருமை சேர்க்கின்றது.
அறுபது அகவை கண்டிருக்கும் உங்கள் அழகிய நிலையம் நூறு வயதை விரைவில் எட்டிப் பிடிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. இன்று இளைஞர் யுவதிகளாக வலம் வரும் என்னினிய இளம் உடன் பிறப்புக்கள் நூறு அகவையை எட்டும் போது எம்மைப் போல் வயோதிபர்கள் ஆகிவிடுவீர்கள். ஆனால் உங்கள் சரஸ்வதி சனசமூக நிலையம் என்றென்றும் இளமை பூத்துக் கன்னிப் பெண்ணாகவே காட்சி அளிப்பாள். நெஞ்சமர்க்கும் கவிவரிகளில் சந்திரன் விமலா என்பவரின் கவிதை வாசித்தேன். “கன்னிப் பெண்ணே! இன்று நீ அகவை 60தைக் காண்கின்றாய் அகமகிழ்ந்து வாழ்த்துகின்றோம். வாழ்க வளமுடன்” என்று அவர் வாழ்த்தியதை வாசித்தேன்.
அறுபதில் கன்னியானவள் அகவை நூறிலும் அவ்வாறே அருங்காட்சி அளிப்பாள். என்னைப் போன்றவர்கள் “அங்கிருந்து” அகமகிழ்வோம் என்று கூறிக் கொண்டு என்னை அழைத்தமைக்கு நன்றி கூறி அமர்கின்றேன்.
நன்றி. வணக்கம்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com