சற்று முன்
Home / செய்திகள் / கூட்டமைப்பு கலந்து கொண்ட அலரி மாளிகை சந்திப்பில் பேசப்பட்டவை இவைதான்

கூட்டமைப்பு கலந்து கொண்ட அலரி மாளிகை சந்திப்பில் பேசப்பட்டவை இவைதான்

கோவிட் – 19 வைரஸ் நிலைமைக்கு ஏற்புடைய நிதிரீதியான வெளிநாட்டு உதவிகள் எதுவும் நமது நாட்டிற்குக் கிடைக்கப் பெறவில்லை என பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (2020.05.04) அலரி மாளிகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டபோது பிரதம அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுடைய முதலாவது நோயாளி கண்டறியப்பட்டது முதல் வைரஸைத் தடுப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், நோயினைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுத்துச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் உளவுப் பிரிவினரால் இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வெளிநாட்டு உதவிகள் கிடைப்பது மற்றும் அவற்றை செலவிடுவது தொடர்பாக எதிர்க்கட்சியினரால் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதால், அது தொடர்பாக முறையான தெளிவுபடுத்தல் அவசியமாகும் என இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு உதவிகள் தொடர்பான சரியான தகவல்களைத் தெரிவிக்கும் ஆற்றல் நிதியமைச்சின் செயலாளருக்கே உள்ளதாகத் தெரிவித்த பிரதம அமைச்சர் அவர்கள் இது தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல அவர்களுக்கு வழங்கினார்.

உலக வங்கி தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக 127 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்க இணங்கி, அதற்கு ஏற்புடைய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ள போதிலும், இது வரை அந்த நிதி நமது நாட்டிற்கு கிடைக்கவில்லை எனவும், ஏற்புடைய நிதி எதிர்காலத்தில் கிடைக்கவுள்ளது எனவும் இதன்போது நிதியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். சுகாதார அமைச்சு மற்றும் கோவிட் தொடர்பான செலவினங்களை ஈடு செய்வதற்கு அந்த நிதி கிடைப்பதாகவும், இதற்கு மேலதிகமாக பொருள் ரீதியான வெளிநாட்டு உதவிகள் சுகாதார அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழில்களுக்காக கொழும்புக்கு வந்து, கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக வீடுகளுக்கு செல்ல முடியாமல் தங்குமிடங்களில் சிக்கியுள்ள வடக்கு, கிழக்கு மக்கள் வீடுகளுக்குச் செல்வதற்காக முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்து வழங்குமாறு இதில் கலந்துக்கொண்ட வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், வடக்கு கிழக்கில் வாழும் பெரும்பாலானோர் நாளாந்த வருமானத்தைப் பெறுவோர் என்பதால், அவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணப் பணத்தை அதிகரிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 
கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் உள்ள 53000 பேர் இனங் காணப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக அவர்களைத் தங்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

பி.சீ.ஆர். பரிசோதனைகளின் அளவை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனஞ் செலுத்த வேண்டும் என்பது இச்சந்தர்ப்பத்தில் கலந்துக்கொண்ட பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்தாகக் காணப்பட்டதுடன், அதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஓய்வூதியத்தை அன்பளிப்பாக வழங்க முடியும் எனவும் சுட்டிக் காட்டினர்.
வைரஸ் நிலைமை காரணமாக வீடுகளில் அடைபட்டுள்ள பிள்ளைகளின் கேள்விகளுக்கு பிரதம அமைச்சர் அவர்களினால் பதில்கள் வழங்கப்பட்ட நிகழ்ச்சி தொடர்பாக முன்னாள் உறுப்பினர்கள் தமது பாராட்டினைத் தெரிவித்ததுடன், அவ்வாறான மேலும் பல நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும் என அவர்கள் முன் மொழிந்தனர்.

இதில் கலந்துக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் அவர்களினால் முன்மொழிவுத் திட்டமொன்று பிரதம அமைச்சர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. 
கோவிட் – 19 வைரஸ் நிலைமையைக் கட்டுப்படுத்தல் மற்றும் மக்கள் வாழ்வினை இயல்பு நிலைக்கு மாற்றுவது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பல கருத்துக்கள் மற்றும் முன் மொழிவுகள் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டதுடன், முன் வைக்கப்பட்ட முன் மொழிவுகள் மற்றும் கருத்துக்களைக் கலந்துரையாடி பொருத்தமான முன்மொழிவுகளை எதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கலந்துரையாடலின் இறுதியில் பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மஹஜன எக்ஸத் பெரமுன, பிவிதுரு ஹெல உருமய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேச விமுக்தி ஜனதா கட்சி, இலங்கை கொமியுனிஸ்ட் கட்சி, இலங்கை சமசமாஜக் கட்சி, ஸ்ரீ லங்கா மஹஜன கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

பிரதம அமைச்சரின் செயலாளர் காமினி செனரத்,நிதியமைச்சின் செயலாளர் உட்பட அரச அதிகாரிகள், சுகாதாரப் பிரிவுத் தலைவர்கள், பாதுகாப்புப் பிரிவுத் தலைவர்கள் உட்பட கோவிட் – 19 ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர்களும் இதில் கலந்துக்கொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com