
யாழில் துடுப்பாட்டத்திற்கு புற்தரை (டேவ்) மைதான வசதிகள் இல்லை. துடுப்பாட்டப் போட்டிகளை புற்தரையில் நடத்தவே எமக்கு விருப்பம். ஆனால் யாழில் அதற்கான வசதிகள் இல்லை. இதனை ஏற்படுத்தித் தரவேண்டும் என கோரிக்கை விடப்பட்டள்ளது.
விஜயரட்ணம் ஞாபகார்த்த இருபதுக்கு இருபது (T20) கடின பந்து (லெத போல்) துடுப்பாட்ட போட்டிக்கான அணிகளின் அறிமுகம், சீருடை (ஜெசி) வெளியிடு என்பன நேற்றைய தினம் (28) யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது.
அதன் போது போட்டியினை நடாத்தும் விஜயரட்ணம் பிரபன் கருத்து தெரிவித்த போதே மேற்கண்ட கோரிக்கையினை விடுத்துள்ளார்.
அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,
பாடசாலை மட்டங்களில் விளையாடும் திறமையான வீரர்கள் யாழில் சாக்கில் (மற்றிங்) விளையாடி பழகி வெளியே கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு சென்று புற்தரையில் விளையாடும் போது பல சவால்களை எதிர்நோக்கு கின்றார்கள். அதனால் அவர்கள் தமது திறமைகளை அங்கே வெளிப்படுத்த முடியவில்லை.
யாழில் இருந்து தேசிய அணிக்கு செல்ல கூடிய அளவுக்கு சிறந்த வீரர்கள் இருக்கின்றார்கள். தேசிய அணிக்கு இல்லாவிடினும் B , C அணிக்காவது விளையாடும் அளவுக்கு வீரர்கள் உள்ளனர். அவர்கள் இங்கே மற்றிங்ல விளையாடி பழகி புற்தரையில் விளையாட முடியாது தடுமாறுகின்றார்கள்.
எனவே யாழில். புற்தரை மைதானங்களை உருவாக்க உரிய தரப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு எமது துடுப்பாட்ட வீரர்களின் திறமைகளை வளர்த்து தேசிய அளவில் அவர்களை பிரகாசிக்க செய்ய வேண்டும் என கோருகிறேன், என தெரிவித்தார்.