யாழ் சுப்பர் லீக் சுற்றுப் போட்டியில் இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணச் சிறுத்தைகளை வீழ்த்தி வேலணை வேங்கைகள் வெற்றிகொண்டு யாழ் சுப்பர் லீக் முதலாவது பருவத் தொடர் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட்டினை மக்கள் மயப்படுத்தும் நோக்கத்துடன் யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது பருவகால தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் (9) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணச் சிறுத்தைகள் கழத்தடுப்பினை முதலில் தேர்ந்தெடுத்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய வேலணை வேங்கைகள் ஆறு இலக்குகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது. வேலணை வேங்கைகள் அணி சார்பில் உத்தமகுமாரன் 73 ஓட்டங்களைப் பெற்றார்.
172 ஓட்டங்களை எடுத்தார் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணச் சிறுத்தைகள் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
இறுதி வரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றி பெற்ற வேலணை வேங்கைகள் யாழ்ப்பாணச் சிறுத்தைகளின் தொடர் வெற்றியினை முடிவிற்கு கொண்டுவந்ததுடன் யாழ் சுப்பர் லீக் வெற்றிக் கிண்ணத்தினையும் தம்வசப்படுத்தியிருந்தனர்.
முதலாவது யாழ் சுப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் தொடரில் தோல்விகள் ஏதுமின்றி முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு நுழைந்த யாழ்ப்பாணச் சிறுத்தைகள் அணியும், யாழ்ப்பாணச் சிறுத்தைகளுடனான முதலாவது தகுதிப்போட்டியில் மாத்திரம் தோல்வியடைந்து இரண்டாவது தகுதிப்போட்டியில் அரியாலை வோரியர்ஸ் அணியினை 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்த வேலணை வேங்கைகள் அணியினரும் இறுதிப் போட்டியில் மோதியிருந்தனர்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணச் சிறுத்தைகளிடம் தோற்றிருந்த வேலணை வேங்கைகள் அணி இன்றய போட்டியில் காத்திருந்து சிறுத்தைகளை வேட்டையாடியது எனலாம்.