Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இறால் தந்து சுறாப்பிடிக்கிறது தெற்கு – விக்கி சாடல்

போரானது மிரட்டுவோரையும், சுரண்டுவோரையும், கரவாகக் கவர்வோரையும் வகைதொகையின்றி எம் மண்ணில் கால் பதிக்க வழி அமைத்துவிட்டது. எம் மண்ணின் மைந்தர்கள் வளம் அற்றிருக்க, வாழ்வாதாரம் தொலைத்து நிற்க மதிலேறிக் குதித்தவர்கள் எமது வளங்களைக் கொள்ளை அடித்துச் செல்லும் துர்ப்பாக்கிய நிலை இன்று உதயமாகி விட்டது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கிட்டு பூங்காவில் இன்று நடைபெற்ற கார்த்திகை மாத மரம் நடுகை விழா மற்றும் கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றிபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

இறாலைத் தந்து திமிங்கிலத்தை அறுவடை செய்வதே அவர்கள் குறிக்கோள். நேற்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. காபந்து அரசாங்கத்தினர் கரவாக என்ன செய்வார்கள் என்பதை இருந்து தான் பார்க்க வேண்டும்.

நாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்ட பின்னர் பன்னாட்டு நிறுவனங்கள் எமக்கென பல இலட்சம் செலவு செய்வதாகக் கூறி கிடைக்கும் நிதிகளிலே அவர்களின் நிறுவன நிர்வாகத்திற்கே ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் அடித்துக் கொண்டமை நீங்கள் அறியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதற்காக பன்னாட்டுப் பணிகள் இங்கு பரவலாக வேண்டாம் என்று நான் கூறவரவில்லை. பன்னாட்டில் இருந்து பணியாற்ற வந்தோரின் பணி பற்றிப் பரிசீலிக்க எமக்குப் பலம் காணாமல் இருப்பதைக் குறிப்பிடுகின்றேன்.

எமது சூழலியல் வளங்களைப் பாதுகாக்கின்ற பணிகளை மத்திய அரசு தொடர்ந்து தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கின்றது. எமது சூழல் வேறுபட்டதொன்று என்பதைத் தெரியாமலேயே, புரியாமலேயே எமது சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பை வேற்றான் தான் ஏற்றுக்கொண்டுள்ளான். எமது நில அமைப்பு, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்கள் ஏனைய மாகாணங்களின் நிலப் பண்புகள் பண்பாட்டு நியமங்களில் இருந்து நில அமைப்பு, வாழ்முறை, வழக்கம், விழுமிய வழிமுறைகளால் வேறுபட்டவை என்பதை அவர்கள் புரியாமலேயே இங்கு அதிகாரம் செலுத்துகின்றார்கள். உதாரணத்திற்கு வேற்று மாகாணங்களில் நதிகள் உண்டு. ஆனால் வடமாகாணத்தில் நிலத்தடி நீர் மட்டுமே உண்டு. சூழலால் எமது சிந்தனைகளும் மாறக் கூடும் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வேற்றுமை பற்றி ஒரு உதாரணம். நான் நீதிபதியாக நாடெங்கிலும் வலம் வந்த காலத்தில் எமது கொழும்பு வீட்டை ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தோம். அவர்கள் மத்திய கிழக்கு நாடொன்றைச் சேர்ந்தவர்கள். எமது சிறிய பின் வளவில் பசுமை நிறைந்த செடிகள் பல உண்டாக்கியிருந்தோம். அவை கண்ணுக்குக் குளிர்ச்சி அளிப்பதாகவும் சூழலுக்கு நிழல் தருவதாகவும் மனதிற்கு இதம் அளிப்பதாகவும் இருந்தன. அவை பற்றி எதுவும் பேசாமலே நாங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டோம். பின்னொரு நாளில் அவர்கள் குடியிருந்த எமது வீட்டைப் பார்வையிடச் சென்ற போது பின்வளவில் பச்சை நிறமே காணாமல்ப் போய் இருந்தது. “எங்கே எமது பசுமையான பின் வளவு?” என்று கேட்டேன். “ஓ அதுவா? நுளம்புகள் வருமென்று அவற்றை எல்லாம் அழித்து விட்டேன்” என்று சர்வ சாதாரணமாகக் கூறினார் எனது வாடகைக் குடியிருப்பாளர். “என்னிடம் அது பற்றிக் கூறியிருக்கலாமே. உங்களுக்கு வேண்டுமென்றால் நுளம்பு வராதிருக்க வலையொன்றை உங்கள் யன்னல்களுக்குப் போட்டுத் தந்திருப்பேனே?” என்றேன். “அதை நான் பெரிதாக எண்ணவில்லை. எப்படியும் யன்னலுக்கு வலையை நானே அடித்துள்ளேன்” என்றார். “அட கடவுளே! வலையையும் போட்டுவிட்டு மனு~ன் பசுமையையும் அகற்றியுள்ளானே!” என்று எனக்குள் மனவருத்தம். அப்பொழுது தான் நான் புரிந்து கொண்டேன். வனாந்தரத்தில்ப் பிறந்து வளர்ந்தவர்கள் பசுமையை அதிகம் மதிப்பதில்லை என்பதை. ஆனால் இஸ்ரேல் நாடு தமது வனாந்தர மண்ணில் பாரிய பசுமையை செயற்கையாக உண்டாக்கி வருகின்றார்கள். குடியிருந்தவர் இஸ்ரேலைச் சேர்ந்தவர் அல்ல. சிலரின் பின்புலம், வாழும் முறை, வாழ் நியமங்கள், விழுமியங்கள் எம்மோடு ஒத்துப் போக வேண்டிய அவசியமில்லை என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன்.

எமது தெற்கத்தைய மக்களை நான் வனாந்தரம் வாழ் மக்களாகக் கணிக்கவில்லை. ஆனால் தெற்கிலிருந்து இங்கு எம்மைப் பாதுகாக்க என்று வருபவர்களின் மனோநிலை வேறு விதமாக அமைந்திருப்பதை நான் கண்;டுள்ளேன். வடக்கில் இருந்து, கிழக்கில் இருந்து எதனைச் சுருட்டிச் செல்லலாம் என்றே அவர்கள் மனோநிலை இருப்பதைக் கண்டுள்ளேன். எம்முட் சிலரும் சூழலைத் தமது சுரண்டலுக்குப் பாவிக்கவே நினைக்கின்றார்கள்.
நாம் இயற்கையின் ஒரு அங்கமே. இந்த உலகில் நாமும் ஒரு உயிர் வாழ் இனமே. நாம் எம்மைச் சுற்றியுள்ளவற்றை அழித்தால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும். உதாரணத்திற்கு சுவரில் பதியும் நுளம்புகளைப் பல்லிகள் தின்கின்றன. பல்லிகள் எல்லாவற்றையும் அழித்தோமானால் நுளம்புகள் கணக்கின்றிப் பெருக நாம் வழிவகுப்பதாக அமையும். அது எம்மையே பாதிக்கும் – என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com