வெடுக்குநாறிமலையில் 400 மீற்றருக்கு அப்பலே ஆலயம் அமைக்க முடியும்!

வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் இருந்து 400 மீற்றருக்கு அப்பலே ஆலயம் அமைத்து வழிபடமுடியும் என தொல்லியல் திணைக்களம் பதில் வழங்கியிருப்பதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகத்தினரை அழைத்த நெடுங்கேணிப் பொலிஸார் இவ்வாறு தெரிவித்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்வீக பிரதேசமான வெடுக்குநாரி மலை அமைந்துள்ளது.

குறித்த மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் என்ற சிவனுடைய லிங்கம் காணப்படுவதுடன், தமிழ் மக்கள் வரலாற்றுடன் தொடர்புடைய நாகர்களின் புராதான பிராமிய எழுத்துக்களும் காணப்படுகின்றன. கடந்த ஐந்து தலைமுறையாக அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொதுமக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இத்தடையினை தற்காலிகமாக தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நெடுங்கேணி பொலிஸார் நீக்கி வழிபாடுகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதியளித்துள்ளதுடன், ஆலயத்தினை புனரமைப்பு செய்வதற்கும் புதிய கட்டட நிர்மாணப்பணிகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஆலயத்தினை முழுமையாக மீட்டுத் தருமாறும், தமது மத வழிபாடுகளுக்கு அனுமதி வழங்க கோரியும் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த 21 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டமும் இடம் பெற்றிருந்தது. அத்துடன் எதிர்வரும் 7, 8, 9 ஆம் திகதிகளில் திருவிழா நடத்துவதற்கும் ஆலய நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில், நேற்றைய தினம் ஆலய நிர்வாகத்தினரை அழைத்த நெடுங்கேணி பொலிஸார், வெடுக்குநாறிமலை தொல்பொருள் திணைக்களத்திற்குரிய இடம் எனவும் அங்கு ஆலயம் அமைத்து வழிபடமுடியாது எனவும் மலையில் இருந்து 400 மீற்றருக்கு அப்பால் ஆலயம் அமைத்து வழிபடமுடியும் எனவும் தொல்லியல் திணைக்களம் பதில் வழங்கியிருப்பதாக தெரிவித்ததுடன்,

திருவிழா தொடர்பில் ஓலிபெருக்கியில் அறிவிக்க தடை விதித்ததுடன் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதி பெற்று திருவிழா மற்றும் வழிபாடுகளை நடத்துமாறும் மீறிச் செயற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com