ஆறு அமைச்சர்கள் !!! யார் அமைச்சர்கள் ??? – சபையை கேலிக்கூத்தாக்கும் கௌரவ உறுப்பினர்கள்

ஆறு அமைச்சர்கள், இவர்களில் யார் யார் அமைச்சர்கள் என ஒவ்வெரு அமர்விலும் ஒருவரைப் பார்த்து கேள்வி கேட்பதிலும் கேலி செய்வதிலும்தான் வடக்கு மாகாண சபையின் அண்மைய அமர்வுகள் கடந்துசெல்வதை அவதானிக்க முடிகிறது.

கடந்தவருடம் வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர்களைப் முதலமைச்சர் பதவி நீக்கி புதிய அமைச்சர்களை நியமித்ததில் இருந்து ஒவ்வொரு அமர்விலும் பேசப்பட்டுவந்த அமைச்சர்கள் விவகாரம் தற்போது டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கிய முறை செல்லுபடியற்றது என நீதிமன்றினால் இடைக்கால தடை விதிக்கப்பட்டபின் முழுநேர விவாதமாக மாறிவிட்டது.

ஆளுங்கட்சிக்குள் எதிர்க்கட்சி என அணிகளாகப் பிரிந்து அமைச்சர்கள் விவகாரத்தை விட்டால் சபையில் கதைப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில்தான் விவாதங்கள் சூடு பறக்கின்றன. கடந்த சில அமர்வுகளாக இந்த விசாதங்கள் உச்சம் பெற்றிருந்தன.

காலையில் அவைக்கு வருவது ஏதாவது ஒரு பிரேரணையை கையில் எடுப்பதும் உடனே ஒருவர் எழுந்து ஆறு அமைச்சர்கள், இவர்களில் யார் யார் அமைச்சர்கள் என தொடங்குவதும் ஆக ஆரம்பிக்கும் சண்டைகள் வீடு செல்லும் நேரம் வந்ததும் மக்கள் எங்களை நம்பித் தெரிவுசெய்துவிட நாங்கள் தேவையற்ற விடயங்களைக் கதைக்கின்றோம் மக்கள் பணத்தை வீணாக்கக்கூடாது என தங்களுக்கு தாங்கள் நியாயம் கூறிக்கொள்வதும் என சபை ஒத்திவைக்கப்படுகின்றது.

அடுத்த அமர்வில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பார்கள் ஆறு அமைச்சர்கள், இவர்களில் யார் யார் அமைச்சர்கள் என. இன்றய அமர்வில் தமிழக முன்னாள் முதல்வருக்கு அனைவரும் ஒருமித்து அஞ்சலி செலுத்தியதை விட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட கௌரவ பிரதிநிதிகள் என தங்களைத் தாங்களே பெருமைப்படுத்திக்கொள்ளும் மாகாணசபை உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களிற்கு மதிப்பளிக்கும்வகையில் ஏதேனும் ஒரு நற்செயல் ஆற்றியதாய் கூறுவார்களா ?

ஒக்ரோபர் 25 ஆம் திகதியுடன் வடக்கு மாகாணசபை கலைந்துவிடுகிறது. அதுவரை ஆறு அமைச்சர்கள், இவர்களில் யார் யார் அமைச்சர்கள் என்ற சலிப்புமிகு விவாதங்கள் தொடந்துகொண்டுதான் இருக்கப்போகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com