யாழில் இருந்து புறப்பட்ட பேருந்தில் கஞ்சா மீட்பு – மாணவர்கள் உட்பட 50 பேர் வவுனியாவில் தடுத்துவைப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த பேருந்திலிருந்த மாணவர்கள் உட்பட 50க்கு மேற்பட்டவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டபின் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த பேருந்திலிருந்து ஒரு கிலோ அளவுடைய கஞ்சா பொதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாலேயே தாம் மாணவர்களைத் தடுத்துவைத்து விசாரித்ததாக வவுனியாப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி இ.போ.ச பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட 50க்கு மேற்பட்ட பொதுமக்களை சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக தடுத்து வைத்த சம்பவம் நேற்று (10.07.2018) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தினை வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் பொலிஸார் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதன் போது பேருந்திலிருந்து ஒரு கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதனையடுத்து நொச்சிமோட்டையிலிருந்து பேருந்தில் எவ்வித பயணிகளையும் ஏற்றாமலும் இறக்காமலும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு பேருந்தினை எடுத்து சென்று பொலிஸ் நிலையத்தின் வாயிலை மூடி பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரையும் சோதனைக்குபடுத்தியுள்ளனர்.

இரவு 9.00 மணியளவில் பேருந்தினை பொலிஸ் நிலையத்தினுள் எடுத்து சென்றதுடன் இரவு 10.00 வரை சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக பயணிகள் எவரையும் வெளிச்செல்லவும் அனுமதிக்கவில்லை. இதனால் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பயணிகள், உறவினர்கள் ஒன்று கூடியதினால் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சற்று பதட்ட நிலை காணப்பட்டது.

இரவு உணவின்றி மாணவர்கள் தவித்துடன் அவர்களை சந்திப்பதற்கு உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இவ்வாறான பொலிஸாரின் செயற்பாட்டினால் பயணிகள் பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவத்தினை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு வாயில் காவலில் நின்ற பொலிஸாரினால் பொலிஸ் நிலையத்தினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதுடன் வெளியில் நின்று புகைப்படம் எடுத்த சமயத்தில் பொலிஸாரினால் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com