Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

“ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ்” அரசியலைக் கலாய்ப்பதுதுதான் சர்க்கார் படக் கதையா ?

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணை மூன்றாவது முறையாக இணையும் படத்துக்கான அறிவிப்பு வந்த நாளில் இருந்தே விஜய் ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு ஏக எதிர்பார்ப்பு. ‘விஜய்-62’ என்று அழைக்கப்பட்ட இந்தப் படத்துக்கு ‘சர்கார்’ என்று பெயரிடப்பட்டு அவரின் பிறந்தநாளையொட்டி ஃபர்ஸ்ட்லுக்கும் வெளியிடப்பட்டது. கையில் சிகரெட்டுடன் ஸ்டைலாக போஸ் தரும் விஜய்யின் இந்த லுக் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் அது ரசிகர்கள் மத்தியில் மாஸாக கொண்டாடப்பட்டது.

விஜய்-முருகதாஸ் கூட்டணியின் ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களைப்போன்றே ‘சர்கார்’ படத்திலும் சமூகக் கருத்து இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தவிர ‘கத்தி’, ‘தெறி’, ‘பைரவா’, ‘மெர்சல்’… என விஜய்யின் சமீபத்திய சினிமாக்கள் அவரை அரசியலை நோக்கி நகர்த்தும் களமாகவே அமைந்துள்ளதால் ‘சர்கார்’ படத்திலும் அரசியல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வானுயர கட்டடங்களுக்கு நடுவே நிற்பது, இரண்டாவது போஸ்டரில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஆப்பிள் மேக் புக்கை பார்த்துக்கொண்டு இருப்பது, மற்றொரு போஸ்டரில் கோபத்துடன் நிற்பது… என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மாஸாக இருக்கின்றன. தவிர ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் வெளியாகின. அவற்றில் அரசியல் கட்சித் தலைவர்களாக நடிக்கும் பழ.கருப்பையா, ராதாரவி இருவரின் பேனர்கள் தென்படுகின்றன. மேலும் ஒரு விழாவுக்காக வைக்கப்பட்டுள்ள பிரதான கட்அவுட்டில் இவர்களின் போட்டோக்கள் இருபுறமும் இருக்க நடுவே ‘இணைப்பு விழா’ என்று கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது.

பழ.கருப்பையா இருக்கும் ஒரு அரசியல் மேடைக்கு ஆயிரக்கணக்கில் இளைஞர்களை அழைத்துச்செல்லும் விஜய், அங்கு ஆக்ரோஷமாக பேசியபடி மேடையை விட்டு இறங்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள். இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலை இந்தப் படம் பேசும் என்று தெரிகிறது. குறிப்பாக ‘இணைப்பு விழா’ என்பது பிரிந்திருந்த ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் இணைந்ததைக் கதைக்குள் காட்சியாகச் சேர்த்துள்ளார்கள் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

அப்படியெனில் இதில் விஜய்க்கு என்ன கேரக்டர்? வெளிநாட்டில் பெரிய கோடிஸ்வரராக இருக்கும் விஜய், தன் சொந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி நாடு திரும்புவாராம். மக்களுக்கு அவர் சேவை செய்வது பிடிக்காத அரசியல்வாதிகள் அதைத் தடுத்து நிறுத்தி அவரிடம் இருக்கும் அத்தனை செல்வங்களையும் இழக்க வைப்பார்களாம். மேலும், அவர் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இழக்கச்செய்து மீண்டும் எழ முடியாத அளவுக்கு அவரை வீழ்த்துவார்களாம்.

தான் இழந்த பணத்தையும், மக்களிடத்தில் தனக்கு இருந்த செல்வாக்கையும் மீட்டெடுக்க விஜய் என்ன செய்கிறார் என்பதும் க்ளைமாக்ஸில் வில்லன்களை எப்படி ஒழித்துக்கட்டுகிறார் என்பதும்தான் கதையாம். இலகுவாக இருக்கும் ரெகுலர் சூப்பர்ஹீரோ கதையாகத்தான் இது தெரிகிறது. திரைக்கதைதான் வித்தியாசப்படும் என்கிறார்கள்.

அப்படி என்ன நல்லது செய்ய வேண்டும் என்று விஜய் வெளிநாட்டில் இருந்து வருகிறார். அவருக்கும் கீர்த்தி சுரேஷுக்குமான காதல். வரலக்ஷ்மி சரத்குமாருக்கு என்ன கேரக்டர். ‘மெர்சல்’ போன்று இந்தப்படமும் சர்ச்சையை கிளப்புமா, விஜய்யின் அரசியல் பயணத்துக்கு இந்தப்படம் எந்த வகையில் உதவும். இப்படியான கேள்விகளுக்கான பதில்களைப் போகப்போகத்தான் பெற முடியும்.

இந்தக் கதையைத்தான் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியிடம் சொன்னதாகவும் ஆனால் ரஜினி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் கமிட் ஆனதால் அந்தக் கதையில் சில மாற்றங்கள் செய்து விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். நதிகள் இணைப்பு பற்றிய கதை என்று சொல்பவர்களும் உண்டு. எது எப்படியோ விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ்-ரஹ்மான் கூட்டணியில் தீபாவளி அன்று வரும் ‘சர்கார்’ திரைப்படம் பட்டாசாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், ரிலீஸுக்கு முன்பே ‘சர்கார்’ தொடர்பான சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது. பார்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com