வடக்கு பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர் !

இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வினை இரத்துச் செய்வதோடு பட்டம் பெற்ற ஆண்டு திகதி அடிப்படையில் பட்டதாரி நியமனம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள், தொடர்ச்சியான தொழில் உரிமைப் போராட்டத்தை இன்று காலை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பட்டாரிகளில் 5 ஆயிரம் பேருக்கு அடுத்த மாதமும் மேலும் 15 ஆயிரம் பேருக்கு எதிர்வரும் செப்ரெம்பர் மாதமும் அபிவிருத்தி உதவியாளர் நியமனம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நேர்முகத் தேர்வின் அடிப்படையிலேயே இந்த நியமனம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 15 ஆயிரம் பேரை நியமிப்பதற்கு மீளவும் நேர்முகத் தேர்வு நடத்தத் திட்டமிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதனைக் கண்டித்தும் பட்டம் பெற்ற ஆண்டு திகதி அடிப்படையில் பட்டதாரி நியமனம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியும் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும்வரையுமான தொழில் உரிமைப் பேராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

குறித்த போராட்டம் இரவு பகலாக தொடர்ச்சியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் மாவட்டச் செயலகம் முன்பாக மன்னார் மாவட்டப் பட்டதாரிகள் நேற்று முதல் தொடர் போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com