அல்லைப்பிட்டிப் படுகொலைகள் 2006, மே 13 அன்று இலங்கையின் வடக்கே வேலணைத் தீவில் மூன்று வெவ்வேறு கிராமங்களில் இலங்கைத் தமிழ் மக்கள் மீது இலங்கைப் படைத்துறையினரால் நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிக்கும். இத்தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
2006, மே 13 சனிக்கிழமை இரவு வேலணையின் அல்லைப்பிட்டி, புளியங்கூடல், வங்களாவடி ஆகிய கிராமங்களில் இப்படுகொலைகள் இடம்பெற்றன. இம்மூன்று கிராமங்களிலும், இலங்கைக் கடற்படயினர் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தோர் மீது துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். அல்லைப்பிட்டியில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் ஒரே வீட்டில் கொல்லப்பட்டனர். புளியங்கூடலில் மூன்று பேரும், வங்களாவடியில் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படைக் கப்பல் ஒன்றைத் தாக்கி 18 மாலுமிகளைக் கொன்றிருந்தனர்.
பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அடுத்து சுமார் 150 குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர்.