ஆட்டாகுதிப் பஞ்சகம் அல்லது வேள்வி மறுக்கப்பட்டவனின் பாடல் – செல்லத்துரை சுதர்சன்

01.
பழமையானதெனினும்
எழுதப்படாதது எங்கள் வேதம்
அருளப்படாததெனினும்
ஆகமமும் அப்படித்தான்

மழைதவறாமலும்
கடல் பெருகாமலும்
குருதி பரவக் கூறியவை
எங்கள் உபநிடதங்கள்

குடலுமீரலுமான குளிர்த்தியில்
துளிர்த்த பண்களே
எங்கள் தேவார திருவாசகங்கள்

காலைப் புலர்வுக் கனவிலூரும்
கிழ நாயில்
நரை வைரவர் பாடிய
கிடாய் நொந்த புராணமே
எங்கள் கலாசாரமாயிற்று

 

02.
திரண்டு நிமிர் வாழ்வின்
பெருங்கூடல் வேர்க்கொத்தில்
கனவு செறியப் பாவியது
நேர்த்தியின் குருதியே

மண்ணுள் காயும்
பழங்கிழவி மனத்து
தவறாப் பூப்படைவும்
ஊறும் வளநிலத்துப் பொலிவும்
பீறும் குருதியே

களவுண்டு போகா
இன்பப் பொழிவும்
நிலத்து மேலொரு
காப்பாடை நெய்வும்
நீளும் குருதியே

குருதியே எங்கள் மார்க்கம்

கிடாய்கள் சூழப் பொலிய வரும்
குருதியாடிய பாதம்
பதமருளுமெனில்
ஐயனுக்கு நாமிடுவது
ஆட்டாகுதியன்றோ!

 

03.
வைகாசிப் பூரணை

பெருவிளக்கொளிப் பூசை
இரவோடு பகலொட்டக்
கடக்குமொரு சனி

நேர்த்தி வேதம் ஓதி
காத்துக் கிடக்கும்
தலைக் கிடாயின்
நீள்செவி தொங்கும்

இரத்தம் தோய
மாமிசச் சமித்தை
இடுமொரு வெட்டில்
தலை தாழ்படும்

வேற்றின்பக் கூடல் என்ன?

04.
முதியோர் நெடுங்கனவில்
பொல்லோசை பதிய
நாய்களின் கானமிசைத்து
குறி சொல்லிப் போவார்
நரைபூசிய கிழவைரவர்

தன்முற்றத்தில் பரவிய
கிடாயின் குருதியை,
மாமிசச் சமித்தை,
கோழியின் சூட்டுத் தசையை,
கொத்தியும் காளியும்
ருசித்த கதையைச்
சிவந்த விழிகளில்
வரைந்து போவார்

கருப்பையுள் புதுப்பூப் பூப்பதாயும்
காணாமல் போனோர்
மலர் தூவியதாயும்
கன்னியர் கழுத்து
பொன்பூச் சொரிவதாயும்
கள் கங்கையாகப்
பனங்கூடல் வழிவதாயும்
ஊன்றுகோல் பறக்கப்
பனையால் விழுந்தவனின்
கால் நடப்பதாயும்
புற்றிலிட்ட பல்லுக்கீடாய்
கீரி தன் பல் கொடுப்பதாயும்
புத்தகப் பையுள்
செவ்வரத்தம் பூ விரிவதாயும்
மந்திரவாதியின் தலையில்
காட்டுக்கள்ளி முளைப்பதாயும்
மனைக்குள் வைத்த வினையை
நாயின்வாய் கௌவித் தின்பதாயும்
…………………………….
எழுதிச் செல்ல
எட்டாம் நாள் ஆயிற்று.

05.
எட்டாம் நாள்
விடிந்ததொரு சனிகாலை

மாலை சூடிய ஆடும் கோழியும்
ஐயனுக்கு மாலையாகும்

குருதிகுளிர் நிலத்தில் பொங்க
முறுக்கொடு பால்றொட்டி பெருகி
வாழைக்காய் சீப்பாய் வலம்வர
பலாக்காய் பிழக்க
நுங்குவிழி திறந்து
நீளும் பெருமடை

தீவட்டி யொளியில்
பறையொலி மினுங்க
ஆச்சியின் மேனியில் கொத்தி ஏறுவாள்
அப்புவின் மேனியில் காளி ஏறுவாள்
நூறுதலைமுறை ஆட்டைவெட்டிய
அவனில் வைரவர் நின்று ஆடுவார்
தெய்வங்கள் ஏறும் மேனிகள் கொண்டோம்
வேதமும் வேண்டோம் தீட்சையும் வேண்டோம்
…………………..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com