வடமராட்சி கிழக்கில் நேற்றைய தினம் எவரும் கடத்தப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிசார் கடத்தப்பட்டார்கள் என கூறப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி கட்டைக்காடு முள்ளியான் பகுதியை சேர்ந்த ஜோர்ஜ் ராஜநாயகம் (வயது 42) ஜெப்ரின் (வயது 45) மற்றும் வீ.மைக்கல் (வயது 45) ஆகிய மூவரும் கடத்தப்பட்டதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது.
அது தொடர்பில் பளை பொலிஸ் தரப்பினர் கூறுகையில்,
திருகோணமலை பொலிஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து வடமராட்சி கிழக்கில் மூவர் குற்ற செயல் ஒன்றுடன் சம்பந்தப்பட்டு உள்ளார்கள் அவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு பகுதிக்கு தாங்கள் வரவுள்ளதாக அறிவித்து இருந்தனர்.
ஆனால் வந்தவர்கள் தாம் மூவரை கைது செய்து கொண்டு செல்வதாக எமக்கு அறிவிக்கவில்லை. குடும்ப உறுப்பினர்கள் எமது பொலிஸ் நிலையத்தில் வந்து மூவரையும் வானில் வந்தவர்கள் கடத்தி சென்றதாக அறிவித்ததை அடுத்து திருகோணமலை பொலிஸ் தலைமை அலுவகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது , திருகோணமலை பகுதியில் கஞ்சா போதை பொருள் கடத்தல் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் , அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் தான் கட்டைக்காடு ஆழியவளை பகுதியை சேர்ந்த மூவரை தாம் கைது செய்யதாக திருகோணமலை பொலிசார் தெரிவித்ததாக பளை பொலிசார் தெரிவித்தனர்.