சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள் / 2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள் – நிலாந்தன்

2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள் – நிலாந்தன்

ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு கலைச்செயற்பாட்டாளர் என்னைக் கைபேசியில் அழைத்தார். “இன்று நாங்கள் 23பேர் கேப்பாபிலவிற்காக உண்ணாவிரதம் இருக்கப் போகின்றோம் என்று கூறினார். நாங்கள் பிலக்குடியிருப்புக்குப் போகவில்லை. ஒவ்வொருவரும் அவரவருடைய வசிப்பிடத்திலிருந்தபடியே இன்றைய உணவைத் தவிர்த்து பிலக்குடியிருப்பு மக்களுக்கு எங்களுடைய பங்களிப்;பைச் செய்யப் போகின்றோம்” என்று. அவர்களில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது படித்துப்பட்டம் பெற்று வெளியேறியவர்கள். அவர்களுக்குள் ஓர் ஆவிக்குரிய சபை பாஸ்ரரும், ஒரு முஸ்லிம் மாணவரும் அடங்குவர். அவர்கள் கேப்பாபிலவுக்குப் போகவில்லை தாங்கள் உண்ணாநோன்பிருப்பதை பிலக்குடியிருப்பு மக்களுக்குத் தெரியப்படுத்தவுமில்லை. தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தவுமில்லை. இன்றைக்கிந்த செல்ஃபி யுகத்தில் தங்களைப் பகிரங்கப்படுத்தாது அந்த 23 பேரும் பகல் முழுவதும் உண்ணாமலிருந்திருக்கிறார்கள்.

இதுவும் ஓர் அறப்போராட்ட வடிவம்தான். உணவை ஒறுப்பது மட்டுமல்ல விளம்பரத்தை ஒறுப்பதும் இதிலிருக்கிறது. இது ஓர் ஆத்மார்த்தமான பங்களிப்பு. இப்படிப்பட்ட பங்களிப்புக்கள் ஈழத்தமிழர்களுக்கும் புதியவை அல்ல. ஆயுதப் போராட்டத்திற்கு முன்பிருந்தே அதைக் காண முடியும். குறிப்பாக “சிங்களம் மட்டும்” சட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து ஒரு தொகுதி அரச ஊழியர்கள் தமது பதவி உயர்வுகளை ஓறுத்தார்கள்.அரச ஊழியம் எனப்படுவதை ஒரு பெரிய பாக்கியமாகக் கருதிய ஒரு படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். ஆனால் சிங்களச் சோதினை எடுக்க மறுத்து அதனாலேயே பதவி உயர்வுகளையுமிழந்தார்கள். அது அந்நாட்களில் ஒரு பெரிய தியாகம். அதுவும் ஓர் அறப்போர் வடிவம்தான். மானசீகமான அறப்போர் அது. காலி முகத்திடலிலும் கச்சேரி வாசலிலும் சத்தியாக்கிரகிகள் செய்த அறப்போராட்டத்திற்கு அது எந்த விதத்திலும் குறைவானதல்ல.

இவ்வாறான தனித்தனியான மானசீகமான தியாகங்களின் உச்சமான திரட்சியை ஆயுதப் போராட்டத்தில் காண முடிந்தது. உணவைத் துறப்பது, பதவி உயர்வுகளைத் துறப்பது, சலுகைகளைத் துறப்பது என்று தொடங்கிய ஓர் அரசியலானது ஆயுதப் போராட்டத்தோடு சொத்துக்களைத் துறப்பது,படிப்பைத் துறப்பது, உறுப்புக்களைத் துறப்பது, பிள்ளைகளைத் துறப்பது, இளமைச் சுகத்தைத் துறப்பது முடிவில் உயிரைத் துறப்பது என்ற ஓருச்ச வடிவத்தைப் பெற்றது. அக்காலகட்டத்தில் போருக்குப் போன தங்களுடைய பிள்ளைகளுக்கு நீண்ட ஆயுளை வேண்டி தத்தமது வீடுகளில் ஒரு வேளை உணவை அல்லது இரு வேளை உணவை அல்லது முற்றிலுமாக சோற்றை ஒறுத்து விரதமிருந்த அன்னையரும் ஒரு விதத்தில் அறப்போராட்டத்தைச் செய்தவர்கள் தான். இப்பொழுதும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையோடு உணவை ஒறுத்து உபவாசமிருக்கும் எல்லாத் தாய்மாரும் அறப்போராட்டத்தைச் செய்பவர்கள் தான்.

இப்பொழுது அந்த ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான எட்டாண்டுகால அனுபவத்தின் பின்னணியில் மறுபடியும் ஓறுத்தல் பற்றியும், அர்ப்பணிப்புக்கள் பற்றியும் தியாகங்களைப் பற்றியும் உரையாட வேண்டிய ஓரிடத்துக்கு தமிழ் அரசியல் வந்து நிற்கிறது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தின் முக்கியத்துவம் அது சாகும் வரை என்ற இலக்கை வைத்துத் தொடங்கப்பட்டது தான். அதனால்தான் அந்தப் போராட்டம் உடனடியாக ஊடகக் கவனிப்பைப் பெற்றது. வேக வேகமாக தன்னைச் சுற்றி ஒரு கொந்தளிப்பையும் உருவாக்கியது. அது உயிரைத்துறக்கத் தயாராகவிருந்த ஒரு போராட்டம் என்பதே அதற்குக் கிடைத்த உடனடிக்கவனிப்புக்குக் காரணம்.

வவுனியாப் போராட்டத்தால் அருட்டப்பட்டதே பிலக்குடியிருப்புப் போராட்டம். இது சாகும் வரையிலுமானது அல்ல. ஆனால் இங்கேயும் ஒறுத்தல் உண்டு. வீதியோரப் பள்ளத்தில் இரண்டு படை முகாம்களுக்கு இடையில் தற்காலக் கொட்டில்களில் அந்த மக்கள் தங்கியிருந்தார்கள். பனி, மழை, வெயில் மற்றும் இரவில் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள் போன்றவற்றை எதிர்கொள்ள அவர்கள் தயாராக் காணப்பட்டார்கள். அகதிகளைப் போல தற்காலிகக் கொட்டில்களில் தங்குவதால் வரக்கூடிய எல்லா இடர்களையும் அவர்கள் எதிர் கொண்டார்கள். தமது பிள்ளைகளின் கல்வியும் அவர்கள் ஒறுக்கத் தயாராக இருந்த விடயங்களில் ஒன்றாகும். இப்படியாகத் தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக பிலக்குடியிருப்பு மக்கள் தமது அன்றாடச் சீவியத்தின் சுகங்களை ஒறுத்தார்கள்.

பிலக்குடியிருப்பில் கிடைத்த வெற்றிக்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவது அந்த மக்கள் இழப்பதற்குத் தயாராகக் காணப்பட்டமை. விட்டுக்கொடுப்பின்றிக் காணப்பட்டமை. இரண்டாவது இது ஜெனீவாக் கூட்டத்தொடர் காலம் என்பதால் அரசாங்கம் தனது ஜனநாயகத்தின் விரிவை நிரூபிக்க வேண்டியிருந்தது. மூன்றாவது பிலக்குடியிருப்புக் காணிகளில் பெரும்பாலானவை வான் படையினரின் அத்தியாவசியப் பாவனைக்குள்ளிருக்கவில்லை என்பதை அங்கு முன்பு அனுமதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச அலுவலர்களும் அவதானித்திருக்கிறார்கள். நாலாவது அங்கு காணிகள் விடுவிக்கப்பட்டாலும் அந்த மக்கள் வான் படைத்தளத்துக்கும், தரைப்படைத்தளத்துக்கும் இடையே சான்ற்விச்சாகத்தான் சீவிக்க வேண்டியிருக்கும். ஐந்தாவது போராடிய மக்களிடம் தமது காணிகளுக்குரிய உத்தியோகபூர்வ ஆவணங்கள் இருந்தன.

பரவிப்பாஞ்சானிலும் புதுக்குடியிருப்பிலும் தமது அத்தியாவசிய பாவனையில் இல்லாத நிலப்பரப்பை படைத்தரப்பு விட்டும் கொடுத்திருக்கிறது. அதோடு அங்கு விடுவிக்கப்பட்ட காணிகள் யாவும் தனியாருக்குச் சொந்தமானவை.

இவ்வாறு பிலக்குடியிருப்புக்கும் பரவிப்பாஞ்சானுக்கும் புதுக்குடியிருப்பிற்கும் பொருந்தி வரும் களயதார்த்தம் ஏனைய போராட்டங்களுக்கும் பொருந்தும் என்பதல்ல. உதாரணமாக வவுனியா போராட்டத்தின் முதற்கட்டத்தை அரசாங்கம் நுட்பமாகக் கையாண்டு முடித்து வைத்தது. தவிர ஏற்கனவே தமது உறவுகளைத் தொலைத்த முதிய உறவினர்கள் உண்ணாமலிருந்து உயிர் துறப்பதையோ அல்லது உண்ணாவிரதம் நீடிப்பதால் அவர்களுடைய உள்ளுறுப்புக்கள் நிரந்தரமாகப் பாதிக்கப்படுவதையோ அந்தப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்களும் அதற்கு ஆதரவானவர்களும் விரும்பவில்லை. ஆனால் இப்பொழுது இரண்டாவது கட்டமாக அப்போராட்டம் வேறு விதமாக முன்னெடுக்கப்படுகிறது. அதன் முதலாவது கட்டத்துக்குக் கிடைத்த அதேயளவு ஊடகக் கவனக்குவிப்பும் இப்பொழுது கிடைப்பதில்லை என்று ஓர் ஏற்பாட்டாளர் குறைபட்டுக் கொண்டார்.

காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதியும் காணிவிடுவிப்பும் ஒன்றல்ல. காணி கண் முன்னே கிடக்கிறது. இடையே முள்ளுக்கம்பி வேலி நிற்கிறது. ஆனால் காணாமலாக்கப்பட்டவர்கள் அப்படியல்ல. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கொடுப்பதென்றால் அவர்களைக் காணாமல் ஆக்கியவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இது நடக்குமா? அல்லது குறைந்த பட்சம் நிலைமாறு கால நீதிப் பொறிகளுக்கூடாக அவர்களுக்கு இழப்பீடாவது வழங்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் திறைசேரி அதைத் தாங்குமா?

எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை அரசாங்கம் எப்படிக் கவனிக்கப் போகிறது என்பது இங்கு முக்கியமானது. நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களை அரசாங்கம் ஜெனீவாக் கூட்டத் தொடருக்குப் பின் எப்படிக் கையாளப்; போகிறது என்பதும் இங்கு முக்கியமானது. அதே சமயம் அரசாங்கத்தினதும் உலக சமூகத்தினதும் கவனங்களைத் தம்மை நோக்கி ஈர்க்கும் விதத்தில் தமிழ் மக்கள் எப்படித் தமது போராட்டத்தை புத்தாக்கம் செய்யப் போகிறார்கள் என்பது அதை விட முக்கியமானது.

போராடும் மக்கள் எதை ஒறுத்துப் போராடுகிறார்கள் என்பதை விடவும் எதை எப்படி ஒறுத்தால் அரசாங்கமும் உலக சமூகமும் அவர்களை உற்றுக் கவனிக்கும் என்று சிந்திப்பது இங்கு முக்கியமானது.

இந்த இடத்தில் ஓர் ஆகப்பிந்திய உதாரணத்தைச் சுட்டிக்காட்டலாம். அண்மையில் தமிழ் நாட்டில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு எழுச்சியின் விளைவுகளே அவை. ஜல்லிக்கட்டு மீட்பு என்பது பண்பாட்டுரிமைகளை மீட்பதற்கான ஒரு போராட்டம்தான். பண்பாட்டுரிமைகள் எனப்படுபவை ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுரிமைகள்தான். தமது கூட்டுரிமைகளுக்காக ஒரு மக்கள் கூட்டம் போராடினால் அது தேசியத்தன்மை மிக்கதே. இவ்வாறு தமது தேசிய அடையாளங்களுக்காகப் போராடிய தமிழக மக்கள் அதன் அடுத்த கட்டமாக கலப்புருவாக்க உலகமயமாதலுக்கு எதிராகவும் தமது போராட்டத்தை விஸ்தரித்தார்கள். உலகளாவிய கோப்பரேட் நிறுவனங்களின் தயாரிப்புக்களான குடிபானங்களைத் துறக்கும் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. தமிழக வணிகர் கழகங்கள் இந்த முடிவை எடுத்தன. இது இப்பொழுது தமிழகத்தைதைத் தாண்டி கேரளா கர்னாடாவுக்கும் பரவத் தொடங்கியிருக்கிறது. இது விடயத்தில் தமிழகம் ஒரு முன்மாதிரியாகவும் நொதியமாகவும் செயற்படுகிறது. இதுவும் ஓர் அறப்போராட்டந்தான்.

ஒரு சமூகம் கோப்பரேற் உற்பத்திகளை ஒறுத்து தனது சுய உற்பத்திகளை விரும்பி நுகர்வது என்பது இப்போதுள்ள உலகமயமாதல் சூழலில் ஓர் அறப்போர் வடிவம்தான். இந்த அறப்போர் எதிர்காலத்தில் எவ்வளவு தூரத்திற்கு நின்று பிடிக்கும் என்ற கேள்விகள் இருக்கலாம். ஆனால் தனது பண்பாட்டுரிமைகளுக்காகப் போராடத் தொடக்கிய தமிழகம் கோப்பரேற் உற்பத்திகளைத் துறக்க முடிவெடுத்ததும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடுவதும் மகத்தான முன்மாதிரிகளே.

கடந்த ஆண்டுகளில் ஜெனீவாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் காலச் சூழலில் தமிழகம் கொதித்தெழுந்து போராடியிருக்கிறது. இப்போராட்டங்களின் போது கோப்பரேற் உற்பத்திகளை விற்பனை செய்யும் உள்;ர் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டதுண்டு. அவ்வாறான தாக்குதல்கள் யாவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சிiனாயாகப் பார்க்கப்பட்டன. அவற்றுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கையும் எடுத்தது. ஆனால் அதே பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திகளை புறக்கணிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்ட போது அதைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக அணுக முடியவில்லை. மெரினா எழுச்சியின் இறுதிக்கட்டத்தை தமிழக காவல்துறை மூர்க்கமாகக் கையாண்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் இப்பொழுது தமிழகமும் உட்பட சில தென்னிந்திய மாநிலங்களில் கோபரேற் உற்பத்திகளான குடிபானங்களை புறக்கணிக்கப்படும் போது அதை நேரடியாகச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக்க கையாள முடியவில்லை. இது தொடர்பில் ஆனந்தவிகடனில் எழுதப்பட்டிருந்த ஒரு கட்டுரையை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். கோப்பரேற் உற்பத்திகளைப் புறக்கணிக்கும் அறப்போர் எனப்படுவது உலகளாவிய அதிகார மூலங்களின் இதயத்தைத் தாக்கக்கூடியது. ஒரு கே.எவ்.சி கடையைத் தாக்குவதை விட இது வலிமையானது. இதுதான் அறப்போராட்டத்தின் சிறப்பும்.

ஈழத்திலும் அண்மைவாரங்களாக இது தான் அரங்கேறி வருகிறது. தமது அன்றாடச் சீவியத்தின் சுகங்களை இழக்கத்தயாரான ஒரு தொகுதி மக்கள் தமது நிலங்களை மீட்டிருக்கிறார்கள். இழப்புகளுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட மக்கள் அதனாலேயே இழப்பதற்குத் தயாராக முன்னே வந்து போராடுகிறார்கள். வன்னிப்பெருநிலம் மறுபடியும் ஒரு தடவை சிலிர்த்துக் கொண்டு எழுகிறதா? ஆனால் இழப்பதற்கு நிறைய வைத்துக் கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பாhலானவர்கள் அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்க முடியாதிருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் ஓறுத்தலுக்குத் தயாரில்லை என்பதே இங்குள்ள பிரச்சினை. தமது வாகனங்களையும், ஆளணிகளையும் பதவிகளையும், குறிப்பாக எப்பொழுதும் தம்மை நிழல் போல பின் தொடரும் மெய்க்காவலர்களான காவல்துறையினரையும் இழக்கத்தயாரற்றிருந்த மக்கள் பிரதிநிதிகள் இப்பொழுது உசாரடைந்து விட்டார்கள்.

தமது தலைமைத்துவம் பறிபோகக்கூடும்;. தமது வாக்கு வங்கி சிறுக்கக் கூடும் என்ற அச்சம் அவர்களைத் தொற்றிக் கொண்டு விட்டது. அதனால் ஒரு பகுதியினர் போராட்டக்களங்களில் தொடர்ச்சியாகப் பிரசன்னமாகிறார்கள். இன்னொரு பகுதியினர் தாமே போராட்டங்களை ஒழுங்குபடுத்துகிறார்கள்.

இப்போராட்டங்கள் தொடர்பில் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்தில் ஒரு மாத காலத்துள் இரண்டு ஒத்திவைப்புப் பிரேரணைகளைக் கொண்டு வந்ததிற்கு இதுவே காரணம். அது போலவே ஜெனீவாவில் அரசாங்கத்துக்குக் கால அவகாசம் வழங்கக்கூடாது என்று ஒரு தொகுதி மக்கள் பிரதிநிதிகள் கையெழுத்திட்டதிற்கும் இது ஒரு காரணம். அதுமட்டுமல்ல அக்கையெழுத்துக்கள் தொடர்பாகக் கட்சிக்குள் எழுந்த சர்ச்சைகளில் ஒரு பகுதி மக்கள் பிரதிநிதிகள் உரமாக நின்றதற்கும், இது ஒரு காரணம்.

இழப்பதற்குத் தயாரான சாதாரண சனங்கள் பசி, தூக்கம் பாராது பனி, வெயில், மழை பாராது தமது நிலங்களை மீட்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இழப்பதற்குத் தயாரற்ற மக்கள் பிரதிநிதிகளோ தமது வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்களா?

10.03.2017

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com