Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

டைட்டானிக் க்ளைமேக்ஸ் எடுத்தது 3 அடி நீச்சல் குளத்திலாம்..!

எப்படியும் ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு ஒரு அயல்நாட்டு பார்த்துவிடுவோம். அது சைனிஸ் படமானாலும், ஜப்பான் படமானாலும், ஃபிரெஞ்சு படமானாலும் நம்ம ஊர் டிவியில், எல்லாவற்றையுமே ஹாலிவுட் என்று சொல்லிவிடுவார்கள். நாம் எல்லாருமே பார்த்திருக்கும் சில முக்கியமான ஹாலிவுட் படங்களுக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்ப்போமா!

ஜுராசிக் பார்க் ஹாலிவுட் சுவாரஸ்யங்கள் – ஜுராசிக் பார்க்

*ஸ்பீல்பெர்க் இயக்கி 1992- ல் ‘ஜூராசிக் பார்க்’ வெளிவந்தது. மைக்கல் க்ரைக்டன் எழுதிய நாவலில் ஈர்க்கப்பட்டு கதையை வடிவமைத்தார் ஸ்பீல்பெர்க். டைனோசர்களை ரொம்பவும் நம்பகத்தன்மையுடன் காட்ட, இவர் எடுத்த முயற்சி அசாத்தியமானது. ஷூட்டிங் நேரத்தில் வீழ்ந்து கிடக்கும் டைனோசார் முன் ஸ்பீல்பெர்க் அமர்ந்திருப்பதைப் போல் உள்ள புகைப்படத்தை படக்குழு வெளியிட்டது. “கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஒரு உயிரினத்தை வேட்டையாட எப்படி மனம் வந்தது” என்றெல்லாம் கமென்ட்டுகளில் வசைபாடினர் அதிபுத்திசாலிகள் சிலர்.

*ஜூராசிக் பார்க்கின் ஓனராக நடித்திருந்த தாத்தா, பிரபல பிரிட்டிஷ் இயக்குநர் ரிச்சர்ட் அட்டென்பரோ (“காந்தி” படத்தின் இயக்குநர்) நடிப்பதை நிறுத்தி 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பீல்பெர்க்கின் கதை சொல்லலில் ஈர்க்கப்பட்ட, நடிக்க ஒப்புக் கொண்டார். இதற்கு முன்பே தன் படத்தில் அவரை நடிக்க வைக்க ஸ்பீல்பெர்க் மூன்று முறை முயற்சித்திருக்கிறார். 1983-ல் நடந்த ஆஸ்கர் விருதின் போட்டியில் ரிச்சர்ட் அட்டென்பரோவின் ‘காந்தி’, ஸ்பீல்பெர்க்கின் E.T படத்திற்கு பெரும் ஸ்டஃப் கொடுத்து ஆஸ்கரை வென்றது குறிப்பிடத்தக்கது.

*பிரம்மாண்டமான T-Rex டைனோசர் வரும்போது தண்ணீர் அதிரும் காட்சி பிரபலமான ஒன்று. டம்ளருக்கு அடியில் கித்தார் நரம்பை அதிரச் செய்து படமாக்கினராம். ரிச்சர்ட் அட்டென்பரோவின் கேரக்டர் எப்போதும் வெள்ளை நிறத்திலேயே உடை அணிந்திருப்பதைப் போன்றும், மால்கம் என்னும் கேரக்டர் எப்போதும் கருப்பு ஆடையை அணிந்திருப்பது போன்றும் காட்சிகளை வைத்திருப்பார் ஸ்பீல்பெர்க். இருவரும் நேரெதிர் குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்பதன் குறியீடு அது!

*டைனோசார்கள் எழுப்பும் சத்ததிற்காக கழுதை, குதிரை, ஆமைகள் போன்றவற்றின் குரல்களை ‘ரெக்கார்ட்’ செய்தபின் மிக்ஸிங்கில் உருவாக்கினர். பெரிய மாமிச டைனோசார் T-Rex எழுப்பும் சத்தம் ஒரு குட்டி யானையில் பிளிறல் என்றால் நம்ப முடிகிறதா!

ஹாலிவுட் சுவாரஸ்யங்கள் – டைட்டானிக்

*1912-ல் மூழ்கிய ‘டைட்டானிக்’ கப்பலில் ஒரு காதல் என்ற ஒன்லைன் கொண்டு 1997-ல் வந்த இந்த ‘காஸ்ட்லி’ சினிமாவிற்காக ஒரிஜினல் டைட்டானிக் கப்பலின் 90% உருவ அமைப்பைக் கொண்டு வந்தனர். இன்றும் ‘பாக்ஸ் ஆஃபிஸ்’ ரெக்கார்டில் டைட்டானிக்கிற்கு தனி இடம் இருக்கிறது. 14 ஆஸ்கர் விருதுகள் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு 11 விருதுகள் வென்ற ‘எபிக் ரொமான்ஸ்’ திரைப்படம். க்ளைமேக்ஸ் காட்சி மூன்று அடி ஆழம் கொண்ட குட்டி swimming pool என்று சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள்.

*நல்ல ஓவியராக டிகாப்ரியோவின் கதாபாத்திரம் அமைந்திருக்கும். படத்தில் கேட் வின்ஸ்லெட்டை வரையும் காட்சி மிகப் பிரபலமானது. அந்த ஓவியத்தை வரைந்தவர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தான். அந்தக் காட்சியில் காட்டப்படும் கையும் அவருடையது. பின்னர் அந்த ஓவியம் பத்தாயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது.

*படத்தில் வயதான ரோஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் குளோரியா ஸ்டூவர்ட் தான் இன்றளவும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட மிக வயதான நபர். படத்தில் பணியாற்றியவர்களில் இவர்தான் உண்மையான டைட்டானிக் மூழ்கியபோது வாழ்ந்த ஒரே ஆர்டிஸ்ட்.

 

ஹாலிவுட் சுவாரஸ்யங்கள் – அவதார்

*1999-ம் ஆண்டிலேயே ஸ்கிரிப்ட் எழுதப்பட்ட நிலையில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கொண்டு வர நினைத்த விஷயங்களுக்கு அப்போது இருந்த எந்த ஸ்டூடியோவிலும் வசதிகள் இல்லை. தயாரிக்கவும் முன் வரவில்லை. எட்டு ஆண்டுகளாக அந்த ஸ்கிரிப்டை கிடப்பில் போட்டு வைத்திருந்தார் கேமரூன். பின் 2009-ல் உலகிலேயே மிக அதிக பொருட்செலவில் தயாராகி அதிகமான பணத்தை ஈட்டிய படமாக ரெக்கார்ட் செய்தது சர்ப்ரைஸ். டைட்டானிக் படத்தின் வசூலை தானே முறியடித்த பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார்.

*நாவிக்கள் (பண்டோரா கிரகத்தின் வாழும் வேற்றுக்கிரகவாசிகள்) பேசும் மொழியை வடிவமைக்க டாக்டர்.Paul.R.Frommer என்ற பல்மொழியியல் வல்லுநரை, கேமரூன் அணுகினார். உலகில் எந்த மனிதர்களும் பேசும் மொழி போலவும் இருக்கக்கூடாது; அதேசமயம் நடிகர்கள் உச்சரிக்க சுலபமாகவும் இருக்க வேண்டும் என்ற சவாலை ஏற்று புதியதாய் ஆயிரம் வார்த்தைகள் கொண்ட மொழியை Dr.Frommer உருவாக்கினார்.

*1995-ல் வெளியான டிஸ்னியின் “Pocahontas” அனிமேஷன் படத்தைப் பார்க்கும் போதுதான் அவதாருக்கான ஐடியா கிடைத்ததாக கேமரூன் சொல்கிறார்.

*‘அவதார்’ என்ற சொல் இந்தியாவிலிருந்து இன்ஸ்பையர் செய்யப்பட்டது. நாவிக்களின் நீல நிறத்திற்கு காரணமும் இங்கு விஷ்ணுவின் அவதாரங்களின் நீல நிறங்களே என்றும் சொல்லப்படுகிறது.

*2010 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதின் போது நடந்த சுவாரஸ்யம் என்னவென்றால் “சிறந்த திரைப்படம்” என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட “அவதார்” படத்தை அடித்து நொறுக்கி “தி ஹர்ட் லாக்கர்” (The Hurt Locker) திரைப்படம் விருதைத் தட்டிச் சென்றது. அந்த படத்தின் இயக்குநர் கேத்தரின் பிகிலோ வேறுயாருமில்லை ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவி.

அவெஞ்சர்ஸ் அவெஞ்சர்ஸ் – ஹாலிவுட் சுவாரஸ்யங்கள்

*2012-ல் வெளியான “அவெஞ்சர்ஸ்” திரைப்படம் உலக அளவில் வசூலை வாரிக் குவித்த படங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. மார்வெல் ஸ்டூடியோ உருவாக்கிய சூப்பர் ஹீரோக்கள் கூட்டணியைக் கொண்டு உருவான இப்படத்தின் டைரக்டர் ஜாஸ் வேடன் (Joss Whedon) முதலில் இயக்க ஆசைப்பட்டது எக்ஸ்- மென் (X-Men) பட வரிசையைத்தானாம்.

*அவெஞ்சர்ஸின் முதல் பாகமான இத்திரைப்படத்தில் தோர் கதாப்பாத்திரத்தின் அண்ணன் “லோகி” தான் வில்லன். ஒரு வில்லன் சூப்பர் ஹீரோ கூட்டணியைச் சமாளிக்க முடியாது என்பதால் இன்னொரு வில்லனையும் சேர்க்க நினைத்த இயக்குநர் வேடனின் ஐடியா மார்வெல் கம்பெனியால் நிராகரிக்கப்பட்டது.

*வில்வித்தை செய்யும் ஹீரோவாக ஜெரேமி ரென்னர் அவெஞ்சர்ஸில் நடித்திருப்பார். இதற்குக்காக அவருக்கு, ஒலிம்பிக்கில் பங்கேற்ற தேர்ந்த வில்வித்தைக்காரர்களால் பயிற்சி தரப்பட்டது.

*காமிக்ஸ் காலத்திலேயே ஹல்க் (Hulk) கதாபாத்திரத்தின் கலர் பச்சை இல்லை. க்ரே கலர்தான். ஆனால் பிரிண்ட் செய்வதற்கு பச்சை வசதியாக இருந்ததால் ஹல்க்கின் நிறமே பச்சையாக்கப்பட்டது.

*ஒரு காட்சியில் கால்சன் என்ற ஏஜெண்ட்டை வில்லன் லோகி முதுகுக்குப் பின்னால் இருந்து கத்தியால் குத்துவார். அது மார்பின் வழியே வெளியேறும். இந்த ஒருகாட்சிக்காக படத்துக்கு “R” ரேட்டிங் வழங்கப்பட்டது என மார்வெல் வருத்ததுடன் சொன்னது. “R” ரேட்டிங் என்பது ‘இப்படம் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் பெரியவர்களுடன் பார்க்க உகந்தது’ என்று பொருள் தரும்.

இப்படி பல படங்களுக்கு பின்னால் ‛மிராக்கிள்கள்’ ஒளிந்திருக்கின்றன மக்களே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com