ஊர்காவற்றுறையில் இளம் கர்ப்பிணித் தாய் வெட்டிக் கொலை

ஊர்காவற்றுறை சுருவில் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் கோடரி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

7 மாத கர்ப்பிணியான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர் மீதே இவ்வாறு கோடாரி வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு குழந்தையின் தாயான இப் பெண்ணின் வீட்டுக்குள், திருடும் நோக்கோடு இன்று மதியம் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள், கோடாரியால் கொத்தியுள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் இருந்த பெண்ணைக் கண்ட அயலவர்கள், உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக, பொலிஸார் கூறினர்.

வாய்பேச முடியாத மாற்று வலுவுள்ள இளைஞர் ஒருவர் சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி, பின்னர் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு இளைஞர்கள் இருவரை பிடித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் இந்த கொலையுடன் சம்மந்தப்பட்டவர்கள் அந்த ஊரை சேர்ந்தவர்கள் அல்ல எனவும் அவர்கள் வெளியிடத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி வை. எம். எம். றியால், சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com