29 ஆம் திகதி ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள வாய் மொழி அறிக்கை தொடர்பான தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிலைப்பாடு

Tamil-Civil-Society-Forumஜெனீவா தீர்மானத்தின் கட்டுப்பாடுகளில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகிச் செல்லும் இடங்களை  அழுத்தம் திருத்தமாக ஐ. நா மனித உரிமை ஆணையாளர் அடையாளம் காட்ட வேண்டும்.

கடந்த செப்டம்பர் 2015 இல் ஐ. நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசும் சேர்ந்து பங்காளியாகி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.  அத்தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த கடப்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடந்த ஒரு வருடமாக செய்தவை என்ன செய்யாதவை என்ன என்பது தொடர்பிலான வாய் மொழி மூல அறிக்கை ஒன்று  எதிர்வரும் 29 ஆம் திகதி ஐ. நா மனித உரிமை ஆணையாளரால் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது தொடர்பில் பின்வரும் விடயங்களை ஆணையாளரின் கவனத்திற்கு கொன்று வர விரும்புகின்றோம்:

1. ஐ. நா மனித உரிமைப் பேரவை தீர்மானம் தம் மீது திணிக்கப்பட்ட ஒன்று அல்ல என்றும் அது தமக்கு தாமே வழங்கிக் கொண்ட கட்டுப்பாடுகள் என இலங்கை அரசாங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து கூறி வருகின்றது. அத் தீர்மானத்தின் முக்கிய பந்தி, பந்தி 6 ஆகும். அது அமைக்கப்படும் நீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத்தொடுனர்கள் உள்வாங்கப் பட வேண்டும் என்று கூறுகின்றது. இவ்விடயம் தொடர்பில் நாம் அப்போது வெளியிட்ட கூட்டறிக்கையில் சர்வதேச விசாரணையே எமது கோரிக்கை என்றாலும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் முழுமையாக விடப்படாத ஓர் கலப்பு பொறிமுறை ஒன்றை பரிசீலிப்பதற்கு தயார் எனக் கூறியிருந்தோம். அதவாது ஐ. நாவால் நியமிக்கப்படும் வெளிநாட்டு நீதிபதிகளைப் பெரும்பான்மையாக கொண்ட, கூடுதலாக வெளிநாட்டு வழக்குத் தொடுநர்களைக் கொண்ட  ஓர் கலப்பு பொறிமுறைக்கு நாம் ஆதரவு அளிக்கக் கூடும் என்று தெரிவித்திருந்தோம்.

தமக்கு தாமே வழங்கி கொண்ட கட்டுப்பாடுகள் எனத் தீர்மானத்தை அரசாங்கம் வர்ணித்தாலும் ஆரம்பத்தில் இருந்தே பந்தி 6 இல்  குறிப்பிடப்பட்ட கடப்பாடை தாம் பின்பற்றப்போவதில்லை என்று சனாதிபதி தீர்மானம் நிறைவேறிய சில நாட்களுக்குள்ளேயே கூறத் தலைப்பட்டார். வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று தொடர்ச்சியாக சொல்லி வருகிறார். எனினும் ஐ. நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்த போது தீர்மானத்தின் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவோம் என்று இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் கூறியதாக விஜயத்தின் நிறைவில் வெளியிடப்பட்ட பத்திரிகைக் குறிப்பில் ஆணையாளர் தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பின்னரும் கூட சனாதிபதி வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று கூறுவதை நிறுத்தவில்லை. அண்மையில் பிரதமரும் வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளமை பதிவாகியுள்ளது. அரசாங்கத்தின் இவ் நிலைப்பாடானது தீர்மானத்தின் மிகவும் அடிப்படையான சரத்தை மீறுவதாக கருதப்பட வேண்டியதால் முழுத் தீர்மானம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடும் சந்தேகத்திற்குரியதாகின்றது.

2. நிலைமாற்று நீதி பொறிமுறைகளை அமைக்க முன்னர் எத்தகைய பொறிமுறைகளை அமைக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்தாலோசித்து அப்பொறிமுறைகள் அமைக்கப்பட வேண்டுமென தீர்மனம் வலியுறுத்துகின்றது. இது தொடர்பில் செயலணி ஒன்று அமைக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில் அதனது பணிகள் முறையாக ஆரம்பிக்கக் கூடாத சூழலில் வெறுமனே ஜெனீவா கூட்டத்தொடரை மனதிலிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுடன் முறையான கலந்தோலசனைகள் இல்லாமல் காணாமல் போனோர் அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பிலான சட்ட மூலம் ஜூன் 22 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்தாலோசனையை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்கையே இது காட்டுகின்றது. காணமால் போனோர் இறந்துவிட்டனர் என்று பிரதமரே தெரிவித்துள்ள சூழலில் இவ்வலுவலகமும் வெறும் கண்துடைப்பா என நாம் அஞ்சுகிறோம்.

3. தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இயல்பு நிலை உருவாக்கல் தொடர்பிலான விடயங்களிலும் திருப்திகரமான முன்னேற்றங்கள் இல்லை. காணி விடுவிப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றாலும் புதிய காணி அபகரிப்பு முயற்சிகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. காணி விடுவிப்பு தொடர்பான முழு அளவிலான கொள்கை பார்வை அரசாங்கத்திடம் இல்லை. காணிகள் விடுவிக்கப்பட்டாலும் இராணுவம் விலக்கிக் கொள்ளப்படாமல் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களும் தொடர்ச்சியாக இராணுவ சூழலாகவே தொடர்ந்து இருக்கின்றன. அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் முன்னேற்றம் இல்லை. பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குவது தொடர்ந்து பேச்சளவிலேயே உள்ளது. அதற்காக மாற்றீடாக கொண்டு வரப்படவுள்ள சட்டம் அதனை விட மோசமாக அமையாக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத் தடை சட்டம் தொடர்ந்து நடைமுறையில் உபயோகிக்கப் பட்டு வருகின்றது. அச்சட்டத்தின் கீழான கைதுகள் தொடர்கின்றன. இக்கைதுகள் முன்னாள் போராளிகள் தொடர்பிலேயே கூடுதலாக இடம் பெறுகின்றன. அவர்களது மீள் சமூக ஒருங்கிணைவுக்கு இக்கைதுகள் பெரும் தடையாக விளங்குகின்றன. வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்வது தொடர்பிலும் மனித உரிமை அமைப்புக்கள் ஆவணப்படுத்தியுள்ளன.

4. அரசாங்கம் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட குற்றங்கள் இழைக்கப்படவில்லை என்றும் தனி நபர் குற்றங்கள் மட்டுமே இழைக்கப்பட்டதாகவும் கூறி வருகின்றது. இது ஐ. நா மனித உரிமை ஆணையர் அலுவலகத்தின் அறிக்கையோடு வெளிப்படையாக முரண்படும் நிலைப்பாடாகும். தாம் அமைக்கவிருக்கும் விசாரணைப் பொறிமுறைகள் நோக்கம் இராணுவத்தின் நற்பெயரை காப்பாற்றுவதே என்று அரசாங்கம் கூறிவருகிறது. இது அமைக்கப்படக் கூடிய நிலைமாற்று நீதி பொறிமுறைகள் எட்டும் முடிவுகளை முன் கூட்டியே  நிர்ணயிக்கும் நோக்கம் கொண்டவையாக தெரிகின்றன; அவற்றின் மீதான நம்பிக்கையை குறைக்கும் தன்மையானவை.
சர்வதேச சமூகத்தின் வெவ்வேறு அங்கங்களை அவர்களின் நலன் சார்ந்து முறையாகக் கையாள்வதன் மூலம் ஜெனீவா தீர்மானத்தின் கடப்பாடுகளில் இருந்து அவற்றை நிறைவேற்றாமலேயே தப்பித்துக் கொள்ளலாம் என இலங்கை அரசாங்கம் எண்ணுகின்றது. சர்வதேச சமூகத்தின் பலமான அங்கங்கள் அண்மைக் காலத்தில் மிதமிஞ்சிய புகழ்ச்சியையும் ஆதரவையும் புதிய அரசாங்கத்திற்கு வழங்கி வருவதாவது ஜெனீவா தீர்மானம் தொடர்பிலான கட்டுப்பாடுகளில் இருந்து தூர விலகிப் போக இலங்கையை ஊக்கப்படுத்துமே அன்றி அவற்றை நிறைவேற்ற ஊக்கப்படுத்த மாட்டா. ஐ. நா மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகள் இலங்கை தனது கட்டுப்பாடுகளை நிறைவேற்றுகின்றதா என்பது தொடர்பான மதிப்பீட்டில்  தமது நலன் சார் அரசியலை கலக்க விட்டாலும் ஐ. நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் அத்தகைய அரசியலை தனது மதிப்பீட்டில் கவனம் கொள்ளாதிருப்பது மிகவும் முக்கியமானதாகும். ஐ. நா மனித உரிமை ஆணையாளர் தனது வாய் மொழி மூல அறிக்கையில் இலங்கை அரசாங்கம் தனது கட்டுப்பாடுகளை மீறும் இடங்களை அழுத்தம் திருத்தமாக அடையாளம் காட்ட வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம். அத்துடன் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் இத்திசையில் பயணித்தால் ஜெனீவா அறிக்கையின் பரிந்துரைகளை ஆக்க பூர்வமாக நிறைவேற்ற செய்யப்பட வேண்டியதென்ன என்பது தொடர்பிலும் தீர்க்கமான ஆலோசனைகளை பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்கு ஆணையாளர் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
(ஒப்பம்)

குமாரவடிவேல் குருபரன், எழில் ராஜேந்திரம்
இணைப் பேச்சாளர்கள்
தமிழ் சிவில் சமூக அமையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com