2020 இல் அரச ஊழியர்களுக்கான சம்பளம் பன்மடங்காக அதிகரிக்கும்!

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டளவில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் பன்மடங்காக அதிகரிக்கும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இதன்படி விசேட வைத்திய நிபுணர்களின் அடிப்படை சம்பளம் 1 இலட்சது 20 ஆயிரம் ரூபாவாகவும் சாதாரண சாரதி ஒருவரின் அடிப்படை சம்பளம் 28 ஆயிரம் ரூபாவாகவும் அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க 2020 இல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மேலதிகமாக 30 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஈட்ட வேண்டியுள்ளது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அறிவுத்தும் நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச அதிகாரிகளை எந்த காரணம் கொண்டும் அரசியல்வாதிகள் பகைத்து கொள்ள கூடாது. ஏனெனில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுபவர்கள் அவர்களேயாவர்.

அரச அதிகாரிகள் உன்னதமான சேவையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன்போது மனிதன் என்ற வகையில் தவறுகள் ஏற்படலாம். அதற்காக எக்காரணம் கொண்டும் அவர்களை தவறுதலாக நினைத்து விட கூடாது. எனினும் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது அரசியல்வாதிகளை இணைத்து கொள்ளாது செயற்படுவது அரச அதிகாரிகளின் தவறாகும்.

எக்காரணம் கொண்டும் அரச அதிகாரிகள் சுயாதீனமாக தீர்மானங்கள் மேற்கொள்ளக்கூடாது. அரசியல்வாதிகளுடன் இணைந்த செயற்பட வேண்டும்.

அத்துடன் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை இதுவரை எந்தவொரு அரசாங்கமும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்தோம். இதன்படி 10 ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டது. அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வின் பிரகாரம் அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2020 ஆம் ஆண்டு ஆகும் போது பன்மடங்காக அதிகரிக்கும்.

இதன்படி விசேட வைத்திய நிபுணர்களின் சம்பளம் 1 இலட்சது 20 ஆயிரமாக அதிகரிக்கும். அதேபோன்று தற்போது 12 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் பெறும் சாரதிகள் 2020 இல் 28 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொள்வர். இதற்கிணங்க 2020 ஆம் ஆண்டளவில் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்கு மேலதிகமாக 30 பில்லியன் அரசாங்கம் ஈட்ட வேண்டியுள்ளது.

இருந்த போதிலும் இவ்வளவு தொகை சம்பளத்தை அதிகரித்தும் ஒரு சில அரச அதிகாரிகள் கட்சி போக்கின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில்லை. முன்னைய ஆட்சியின் கொள்கைகளை கொண்டு செல்வதிலேயே குறியாக உள்ளனர். இது தவறாகும்.

கட்சி பேதங்களின் அடிப்படையில் அரச அதிகாரிகள் செயற்பட கூடாது. அதற்கு மாறாக அரச அதிகாரிகள் என்ற வகையில் இவ்வளவு தொகை சம்பளத்தை அதிகரித்து தந்த அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com