சொந்த இடத்தில் குடியமர்த்துங்கள் -இரணைதீவு மக்கள் போராட்டம்

கிளிநொச்சி இரணை தீவு கிராம மக்கள் தங்களை சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய கோரி இன்று திங்கட்கிழமை(23) காலை படகு மூலம் தமது சொந்த மண்ணிற்குச் சென்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி இரணை தீவு கிராம மக்கள் 1992 ஆம் ஆண்டு தமது சொந்த மண்ணில் இருந்து இடம் பெயர்ந்து சென்று முழங்காவில் கிராமத்தில் உள்ள இரணை மாதா கிராமத்தில் குடியேறியுள்ளனர்

சுமார் 183 குடும்பங்கள் கடந்த 27 வருடங்களுக்கு முன் இடம் பெயர்ந்துள்ள நிலையில் தற்போது 400 குடும்பங்களுக்கு மேலாக தமது சொந்த இடத்தை விட்டு நிர்க்கதியான நிலையில் முழங்காவில் கிராமத்தில் உள்ள இரணை மாதா கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய கோரி சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக தமது போராட்டத்தை தொடாந்த குறித்த கிராம மக்கள் தமது சொந்த நிலமான இரணை தீவு கிராமத்திற்கு இன்று (23) திங்கட் கிழமை காலை படகுகள் மூலம் சென்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பின் தலைவர் ஜே.ஜாட்சன் பிகிராடோ கலந்து கொண்டு மக்களின் உரிமை சார் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்.

முன்னதாக இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் படகுகள் மூலம் இரணை தீவு கிராமத்திற்கு சென்ற மக்கள் அங்குள்ள தேவாலையத்தில் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்தனர். எனினும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கடற்படையினர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.

எனினும் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளாத இரணை தீவு கிராம மக்கள் தமது கிராமத்தில் உள்ள கோயிலுக்கு அருகாமையில் தமது போராட்டத்தை மேற்கொண்டனர்.

குறித்த பிரச்சினை தொடர்பில் தீர்வு கிடைக்காத நிலையில் இரணை தீவு கிராமத்தில் தங்கி நின்று போராட்டங்களை முன்னெடுப்பதாக அந்த மக்கள் முடிவுகளை மேற்கொண்டனர்.

அதற்கு அமைவாக சுமார் 400 குடும்பங்கள் வரை இரணை தீவு கிராமமத்தில் தங்கி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com