யாழ் மாநகரசபை விகிதாசாரப் பட்டியலில் முஸ்லீம்களுக்கு இடமில்லை ! திட்டமிட்ட சதி எனக் குற்றச்சாட்டு !!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விவரங்களை சிறி லங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளன.
இந் நிலையில் யாழ் முஸ்லீம்கள் தொடர்பில்  வாக்குறுதிளித்த எந்த அரசியல் கட்சியும் முஸ்லீம்களை விகிதாசாரப் பட்டியல் ஊடாக உள்வாங்கியிருக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தொகுதிவாரி அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ஒரு முஸ்லீமும் (10 ஆம் வட்டாரம்) ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட ஒரு முஸ்லீமும் (13 ஆம் வட்டாரம்) வெற்றிவெற்றிருந்தனர்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும்வகையில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தன. தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படும் முஸ்லீம் மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் முஸ்லீம் மக்களிம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். இந்நிலையில் அவை யாவும் நிராகரிக்கப்பட்டு தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக யாழ் முஸ்லீம்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ் மாநகரசபையில் 45 உறுப்பினர்கள் உள்ள நிலையில் முஸ்லீம் பிரதிநிதித்துவம் 02 பேருக்கே கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள் கடந்த உள்ளூராட்சித் தேர்தலின்போது முஸ்லீம் பிரதிநிதித்துவம் 05 ஆகக் கணப்பட்டிருந்தது எனவும் இந்தத் தேர்தலில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தபோதிலும் முஸ்லீம் பிரதிநிதித்துவம் திட்டமிட்ட அடிப்படையில் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.
மேற்படி  உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தவிர   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  ஈ.பி.டி.பி ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றில் இணைந்து முஸ்லீம் வேட்பாளர்கள் நேரடியாகவும் பட்டியல் உறுப்பினராகவும் இணைந்து அக்கட்சிகளுக்கு கணிசமான வாக்குகளை பெற்றுக்கொடுத்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com