ரணில்-மைத்திரி கூட்டரசாங்கம் அமைக்கப்பட்டு மூன்று வருடம் !!

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி நடைபெற்ற தேர்தலின் பின்னரான ரணில்-மைத்திரி கூட்டரசாங்கம் அமைக்கப்பட்டு இன்றுடன் 3 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியைத் தொடர்ந்து ஆட்சி முறையிலும் பொருளாதாரத்திலும் நாட்டின் எதிர்கால செயல்நெறியிலும் பாரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் கீழ் ஜனநாயக உரிமைகள் உறுதி செய்யப்பட்டதோடு சர்வதேச சமூகத்துடனான தொடர்புகள் மீண்டும் வலுவடைய ஆரம்பித்தன.

மேலும், சட்டவாட்சி உறுதிப்படுத்தப்பட்டமை, மனித உரிமைகள் பலப்படுத்தப்பட்டமை, தகவல் அறியும் உரிமை உறுதி செய்யப்பட்டமை போன்ற பல்வேறு விடயங்கள் நல்லாட்சியின் மூலம் ஏற்பட்டன.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இரண்டு பிரதான கட்சிகளையும் சேர்ந்து  தேசிய அரசாங்கமாக ஒன்றிணைந்து அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டன.

ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டதோடு நாட்டின் பொருளாதார தேவைகளுக்கமைய புதிய பொருளாதார வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 

நாடு இழந்திருந்த ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெற்றுக் கொள்ள முடிந்ததோடு ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதித் தடையை விலக்கிக் கொள்ள நல்லாட்சி அரசாங்கத்தால் முடிந்தது. அத்தோடு மக்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்று நாட்டிற்குப் பொருத்தமான புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான பின்னணியும் உருவாக்கப்பட்டுள்ளது.

மக்களை அதிருப்திக்குள்ளாக்கிய விருப்பு வாக்குமுறை நீக்கப்பட்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக புதிய தேர்தல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையை இந்து சமுத்திரத்தின் பொருளாதார மத்திய நிலையமாக மாற்றி கொழும்பை நிதி நகரமாக உருவாக்குவதோடு ஏற்றுமதியை ஊக்குவித்து உள்நாட்டு உற்பத்தியை விருத்தி செய்து 10 இலட்சம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரித்து அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆரம்பத்திலேயே மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆட்சியின் மூலம் ஏற்பட்ட அதிக கடன் சுமை காலநிலை மாற்றம் போன்ற சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லும்வகையில் அரசியல் தீர்வு ஒன்றினை வழங்குதற்கும் அரசியல் கைதிகள் மற்றும் காணி விடுவிப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கும் இரு பிரதான கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட அரசினால் மூன்று வருடங்களில் முடியாமல் போனமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com