“யாழ் 2020 – நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்” – செயற்றிட்ட வரைவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வெளியீடு

யாழ்.நகரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தயாரிக்கப்பட்டுள்ள “யாழ் 2020 – நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்” செயற்றிட்டம் தொடர்பான வரைபடம் இன்று (06.01.2018) சனிக்கிழமை நண்பகல் வேளையில் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ் நகரிலுள்ள விருந்தினர் தங்ககம் ஒன்றில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் குறித்த “யாழ் 2020” செயற்றிட்ட வரைபடத்தை வெளியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினை தலைமையாக கொண்டு உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய பேரவையின் யாழ்.மாநகர சபையின் முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சில திட்டமிடல் நிபுணர்களுடன் இணைந்து குறித்த செயற்றிட்டத்தினை உருவாக்கியுள்ளதாகவும் தமது கட்சி யாழ் மாநகரசபையினைக் கைப்பற்றினால் 2020 ஆம் ஆண்டுக்குள் யாழ் நகரைத் நேர்த்தியாக வடிவமைக்க முடியும் எனக் குறிப்பிட்டார். அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,
“யாழ்.நகரத்தில் எவ்வாறான மாற்றத்தை ஏற்பத்துவது என்பது தொடர்பில் நிபுணர்களுடன் ஆராய்ந்து திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளேன். எமது கட்சி ஆட்சிக்கு வந்தால் அதனை நடைமுறைப்படுத்தவும் உள்ளேன். குறிப்பாக யாழில் இரண்டு நவீன சந்தை கட்டட தொகுதிகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
இதில் ஒன்று குருநகர் சின்னக்கடையும், மற்றையது யாழ்நகரில் இயங்கி வருகின்ற சந்தையையும் நவீனமயமாக்குவது. மேலும் பிரதானமாக மீள் சுழற்சியை அடிப்படையாக கொண்டு சூழலுக்கு தீங்கில்லாத வகையில் திண்ம கழிவகற்றல் முகாமைத்துவம் நடைமுறைக்கு கொண்டு வருதல், இதன் மூலம் கல்லுண்டையில் கொட்டப்படும் கழிவுகளுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை எட்ட முடியும்.
இது தவிர யாழ்.நகரில் உள்ள வீதிகள் அனைத்துமே நடைபாதைக்கு என இடம் ஒதுக்கப்படாமல் தான் காணப்படுகின்றன. இதனால் மக்கள் வீதிகளினாலேயே நடந்து செல்லும் நிலை காணப்படுகின்றது. நோயாளர்களும் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஆகவே எமது திட்டத்தில் நகரத்தில் காணப்படுகின்ற அனைத்து வீதிகளுக்கும் நடைபாதைகள் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் நகரில் வாகன தரிப்பிடம் ஒன்று நவீனமயப்படுத்தப்பட்ட முறையில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்த வாகன தரிப்பிடம் அமைக்கப்படுமாக இருந்தால் வீதிகளின் நடுவே வாகனங்களை நிறுத்த வேண்டிய தேவை ஏற்படாது. குறிப்பாக யாழ்.மாநகரத்துக்குள் காணப்படும் வாய்க்கல்கள் அனைத்துமே மாசடைந்த நிலையில் தான் காணப்படுகின்றன. எனவே சிறந்த ஒரு வடிகாலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் டெங்கு காய்ச்சல் உட்பட பல நோய்களின் பரவலை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும். இது தொடர்பிலும் எமது திட்ட வரைபில் யோசனைகளை முன்வைத்துள்ளோம். இவற்றுக்கு என இரண்டு நிபுணர் குழுக்களை உருவாக்கி பணிகளை முன்னெடுத்து செல்லவும் தீர்மானித்துள்ளோம். குறிப்பாக நகர அபிவிருத்தியில் ஏற்படுகின்ற சட்ட சிக்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சட்டத்தரணிகள் கொண்ட குழுவும்,  நகர திட்டமிடல் தொடர்பில் ஆராய்வதற்கு பேராசிரியர்கள், துறைசார் நிபுணர்கள், பொருளியல் நிபுணர்கள் என்போரை உள்ளடக்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டவுள்ளது. மேலும் எம்மால் கைப்பற்றப்படும் உள்ளூராட்சி சபைகளையும் ஒவ்வொரு நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த உறவுகள் பொறுப்பெடுத்து அந்த சபைகளின் கிராம, நகர அபிவிருத்திக்கு நிதி, துறை சார் வளங்கள், பயிற்சிகள், அபிவிருத்திகள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்”-  என்றார்.
இதேவேளை முன்னர் யாழ் மாநகரை சிங்கப்பூராக மாற்றுவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்களாலோ தற்போது
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் யாழ்ப்பாணத்தை சிங்கப்பூரா மாற்றுவோம் என வாக்குறுதிகளை வழங்குபவர்களாலோ இவ்வாறான முன் திட்டமிடல் வரைவு ஒன்றினை வெளியிட முடியாது போயுள்ள சூழலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் ஒருவர் முதன் முதலாக தான் போட்டியிடும் சபையின் அபிவிருத்தி தொடர்பில் திட்டம் ஒன்றை தேர்தலுக்கு முன்னதாகவே வெளியிடுவது என்பது புதிய ஆக்கபூர்வமான அரசியல் கலாச்சாரம் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com