மதவாதத்துக்கு மக்கள் முன்னணியில் இடமில்லை

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மதவாதத்தைக் கிளப்புகின்ற செயற்பாடு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியில் மதவாதத்துக்கு இடமில்லை என தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (03) புதன்கிழமை  யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார். அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மதவாதத்தைக் கிளப்புகின்ற செயற்பாடு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எங்களுடைய கட்சி என்பது தமச் சார்புக் கொள்கை எதனையும் ஏற்றுக்கொள்ளாத கட்சி. நாங்கள் எல்லா மதங்களும் சமமாக மதிக்கப்படவேண்டும். அவர்களுக்குரிய கௌரவங்கள் வழங்கப்படவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் செயற்படுகின்ற கட்சி. மதவாதம் பேசுபவர்களை மக்கள் அடையாளம் கண்டு நிராகரிக்கவேண்டும். எங்களுடைய கட்சியில் மதவாதிகளுக்கு இடமில்லை.
அத்தொடு இரண்டாவது ஒரு விடையம் இந்தத் தேர்தலை வெறுமனே அபிவிருத்திக்கான தேர்தலாக விட்டுச் சென்றுவிட முடியாது. அடிப்படைக் கட்டுமானங்களை சீரமைப்பது என்பதற்கு அப்பால் எங்களுக்கான அரசியல் தீர்வு எனும் போர்வையில் கொண்டுவரப்படவிருக்கின்ற ஒற்றையாட்சி தீர்வின் இடைக்கால அறிக்கையினை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  அரசியல் தீர்வாகக் கூறி அதற்கான ஒரு ஆணையாகவே இந்தத் தேர்தலை பார்ப்பதாக கூறிவருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சுமந்திரன் கூட இதனை வலியுறுத்தியிருந்தார். மக்கள் இவ் விடையத்தில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். நாங்கள் இந்த ஒற்றையாட்சி இடைக்கால வரைபினை நிராகரிக்கின்ற ஒரு மக்கள் ஆணையாகவும் இந்தத் தேர்தலை அணுகிவருகின்றோம்.
இந்த இடைக்கால அறிக்கையினை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறுகின்ள தரப்பு இரண்டு விடையங்களை முன்னிலைப்படுத்திவருகின்றது. அதில் ஒன்று நடைமுறைச் சாத்தியமானதையே பெறவேண்டும் என்பது. இன்னொன்று இந்த இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அனைத்து விடயங்களும் உள்ளடங்கியிருக்கின்றது எனக் கூறிவருகின்ற பிரச்சாரம். ஆனால் இந்த இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற எந்த அரசியல் தீர்வும் இல்லை என்பது வெளிப்படையான உண்மை. இவ் அறிக்கையில் ஒற்றையாட்சியே வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை சிங்களத் தலைவர்கள் தென்னிலங்கை மக்களிடம் தெளிவாகக் கூறிவருகின்றனர்.
மற்றையது  இவர்கள் கூறுகின்ற நடை முறைச் சாத்தியமான தீர்வு என்பது. இதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் நடை முறைச் சாத்தியம் என்பதற்கு அடிமட்ட வரையறை எதுவும் இல்லை. நாம் இதுதான் வேண்டும் எனக் கேட்காமல் அவர்கள் தருவதை வாங்கிக்கொண்டு பேசாமல் இருப்பதுதான் இவர்கள் கூறுகின்ற நடைமுறைச் சாத்தியமான தீர்வு. இது புற்றுநோயிற்கு பனடேலைக் கொடுத்து கட்டுப்படுத்தி வைத்திருக்கலாம் என எண்ணுகின்ற மனநிலையே ஆகும். இது நோயாளியின் உயிருக்கு ஆபத்தினையே உண்டுபண்டும்.  பேரம்பேசுவதற்கு கிடைத்த சந்தப்பங்கள் அனைத்தையும் கைநழுவ விட்டுவிட்டு நடைமுறைச் சாத்தியம் எனப் பேசுவது வேடிக்கையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com