பட்டத்திருவிழா பார்க்க யாழ் வந்த அமைச்சர் மயிரிழையில் உயிர் தப்பினார் !

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நேற்று விமானம் மூலம் வருகை தந்த அமைச்சர் மகிந்த அமரவீர தெய்வாதீனமாக உயிர் தப்பினார் என்று செய்தி வெளியாகி உள்ளது.
வல்வெட்டித்துறையில் நேற்று இடம்பெற்ற பட்டத் திருவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வருகை தந்த கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர பயணித்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தின் விமானிக்கு பலாலி விமான ஓடுதளம் தெரிந்திருக்கவில்லை. விமானி நீண்ட நேரம் விமானத்தை வானில் சுற்றிய நிலையில் ஒருவாறாக தரையிறக்கினார். அப்போது விமானத்தின் எரிபொருள் தீர்ந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
ஒருவாறு விமானம் தரையிறக்கப்பட்டதால் அமைச்சர் மகிந்த அமரவீர அதிஷ்டவசமாக உயிர் தப்பினார் என கொழும்பு சிங்கள ஊடகமான மௌவிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் உள்ளிட்ட குழுவினருடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்துக்கு செல்லவிருந்த போதிலும், தலைமன்னர் நோக்கி விமானி விமானத்தை கொண்டு சென்றுள்ளார். பலாலி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு பதிலாக தலைமன்னார் தீவுக்கு அருகில் விமானம் செல்வது குறித்து அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் செல்லும் வழி தனக்கு தெரியாதென விமானி குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் கூகிள் வரைப்படத்தின் உதவியுடன் விமானத்தை பலாலி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு விமானி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக கொழும்பில் இருந்து பலாலி செல்ல 45 நிமிடங்கள் மாத்திரமே செலவிடப்படுகின்ற நிலையில், நேற்றைய தினம் பலாலி விமான நிலையத்தை சென்றடைய 2 மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விமான நிலையத்தை நெருங்க வேண்டிய சந்தர்ப்பத்தில் விமானத்தில் எரிபொருள் தீர்ந்து போய் விட்டமையே ஆபத்தான நிலைமைக்கு முக்கிய காரணமாகியுள்ளது.
அதன் பின்னர் அமைச்சரின் அதிகாரிகள் கொழும்பில் இருந்து இரண்டு வாகனங்களை வரவழைத்துள்ளனர். அதற்கமைய மீண்டும் நேற்றிரவு வாகனத்தில் அமைச்சர் கொழும்புக்குத் திரும்பியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com