தமிழ் அரசுக் கட்சி மீது வணிகர் கழகம் அதிருப்தி – யாழ். மாநகர சபைத் தேர்தலில் ஆதரவில்லை !

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தால் முன்மொழியப்பட்ட வர்த்தகர்களின் பெயர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்பு மனுவில் உள்வாங்கப்படாது முஸ்லிம் வர்த்தகர்கள் நால்வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களாகக் களமிறக்கியமை தொடர்பில் யாழ் வணிகர் கழகம் தமிழரசுக்கட்சி மீது அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயற்பாடுகளால் தாம் அதிருப்தி கொண்டுள்ள குறிப்பிட்டுள்ள யாழ்ப்பாணம் வணிகர் கழகம் இதனால் இனிவரும் தேர்தல்களில் தமிழ் அரசுக் கட்சிக்கு யாழ்ப்பாணம் வர்த்தகர்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் வேட்பாளர்கள் உள்ளீர்க்கப்படாமை குறித்து வருத்தம் வெளியிட்ட தமிழ் அரசுக் கட்சி  அதுதொடர்பில் எழுத்துமூல கடிதம் ஒன்றினை வணிகர் கழகத்துக்கு அனுப்பியிருந்தது. இது தொடர்பில் ஆராயப்பட்டபோதே வணிகர் கழகம்  அதிருப்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட வணிகர் கழகத்தினர்,

“எமது கழகத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி வடக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ளார். எனினும் யாழ்ப்பாண நகர வர்த்தகர்களின் மிக முக்கிய நிர்வாக அலகான யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் எமது கழகத்தின் வர்த்தகர்களுக்கு இடமளிக்காமல் எமது நம்பிக்கைக்கு தமிழ் அரசுக் கட்சி ஏமாற்றிவிட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்துக்கு அடுத்தபடியாக பலம்பொருந்திய சமூகம் யாழ்ப்பாணம் வர்த்தகர்கள்தான். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாக மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் அரசுக் கட்சியை யாழ்ப்பாணத்தில் வரவேற்று அதற்கு பேராதரவை வழங்கியது யாழ்ப்பாணம் வணிகர் கழகம்தான்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் கோரிக்கையை தமிழ் அரசுக் கட்சி புறந்தள்ளிவிட்டது. இனிவரும் எந்தத் தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு யாழ்ப்பாணம் வணிகர் கழகம் ஆதரவு வழங்காது. யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் மாகாண சபைத் தேர்தலில் வணிகர் கழகம் தனியாகப் போட்டியிடும்” என்று யாழ்ப்பாணம் வர்த்தக சமூகம் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com