’தகரத்தையே மாற்ற முடியாதவர்கள் நகரத்தை மாற்றப்போகிறார்களாம்’ – அமைச்சர் திகாம்பரம்

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் அதிகரிப்பை நாம் உறுதி அளித்ததது போல நிறைவேற்றியுள்ளோம். அபோல ஹட்டன் நகர சபையை மாநகர சபையாக மாற்றும்; எமது இலக்கினை எமது பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே தெரிவித்துள்ளோம். அது அறிவிப்பாக மாத்திரமல்லாது நடைமுறையிலும் செய்யத்தொடங்கிவிட்டோம். ஹட்டன் நகரை மூடியிருந்த தகரங்களை அகற்றி பணிகளை ஆரம்பித்து விட்டோம். பல ஆண்டுகாலமாக இந்த தகரத்தை மாற்ற முடியாதிருந்தவர்கள் இப்போது நகரத்தை மாற்றியமைப்பதாக கூறுவுது வேடிக்கையானது என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஹட்டன் டிக்கோயா நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (26) மாலை இடம்பெற்ற ஹட்டன் வர்த்தகர்களுடனான சந்திப்பின்போதே மேற்படி கருத்தினைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழ் முற்போக்கு கூட்டணி என்கின்ற அடிப்படையில் நாம் வாக்குறுதிகளை மாத்திரம் வழங்குவதில்லை. மாறாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றோம். நுவரெலியா, அம்பகமுவை பிரதேச சபைகளில் அதிக சனத்தொகை அடங்குவதன் காரணமாக அவற்றை அதிகரிக்கும் கோரிக்கையை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். அது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பல்வேறு அரசியல் அழுத்தங்களை பிரயோகித்தோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமது கோரிக்கையின் நியாயங்களைப் புரிந்துகொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு உத்தரவிட்டார். பைசர் முஸ்தபா தனது முதல் பாராளுமன்ற பிரவேசத்தை கண்டி மாவட்ட மலையக தமிழ் மக்களின் வாக்குகளின் ஊடாக பெற்றதாக நன்றிப் பெருக்குடன் பாராளுமன்றில் உரையாற்றி தனது பணிகளை நிறைவேற்றினார். துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்கின்ற வகையில் அவருக்கு அந்த கடப்பாடு உண்டு. அவரை முஸ்லிம் என ஒதுக்கி நாம் பேதம் பார்க்க முடியாது. ஹட்டன் நகர் முஸ்லிம் மயமாவதாக சிலர் இனவாத கோஷம் எழுப்புகின்றனர். ஹட்டன் நகரை மாநகர சபையாக மாற்ற வேண்டுமெனில் இப்போதைக்கு முஸ்லிம் அமைச்சரான பைசர் முஸ்தபாவே அதற்கான பணிகளைச் செய்யவேண்டும். முஸ்லிம் ஒருவரான அபுசாலி அவர்கள்தான் அறுபதாண்டு காலம் ஹட்டன் மாநகர சபை உறுப்பினர் என்ற பெருமை பெற்றவர். அவரது மகள் இம்முறை ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடுகின்றார். அவரை மறுக்க முடியுமா? எனவே சந்தர்ப்பத்திற்காக இனவாதம் பேசுவோர் யார் என அடையாளம் காண முடிகிறதுதானே.

ஹட்டன் நகரை நூற்றாண்டு காலமாக மறைத்திருந்த தகர வேலிகளை அகற்றி ஹட்டன் நகரை வெளிச்சமாக்கியது நானே. அவ்விடத்தில் வீதிகளை அகலமாக்கியுள்ளேன். புதிய கட்டட தொகுதி கட்டப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னர் ஆண்டாண்டு காலமாக நுவரெலியா மாவட்டத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு சிறைமதில்கள் போன்று இருந்த தகரத்தைக் கூட கழற்ற முடியாமல் போனது. இவர்கள்தான் ஹட்டன் நகைர மாற்றப் போகிறார்களாம். இப்போது தான் ஹட்டன் நகரை மாநகரமாக்கும் ஞானம் அவர்களுக்கு பிறந்திருக்கின்றது. நாங்கள் எமது பொதுத்; தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே இதுபற்றி சொல்லியிருக்கிறோம். சொன்னது மட்டுமல்ல செயலிலும் இறங்கிவிட்டோம். பெருநகர அபிவிருத்தி அமைச்சரான சம்பிக்க ரணவக்கவிடம்; நிதியினைப் பெற்று கடைத்தொகுதிகளையும் வீதி அபிவிருத்திகளையும் பொது வசதிகளையும் அபிவிருத்தி செய்ய ஆரம்பித்துவிட்டோம். யார் எந்த துறைக்கு அமைச்சரானாலும் அவரிடம் நிதியினைப்பெற்று அபிவிருத்திகளைச் செய்யும் அரசியல் பலம் எமக்கு இருக்கின்றது.

ஹட்டன் நகரை மாநகர சபையாக மாற்றுவது மட்டுமல்ல மஸ்கெலியா, ராகலை, கொட்டகலை, பூண்டுலோயா, பொகவந்தலாவை போன்ற முன்னேறி வரும் நுவரெலியா மாவட்ட சிறு நகரங்களை நகர சபையாக மாற்றும் திட்டத்தை நாம் கொண்டுள்ளோம். மஸ்கெலியா நகரத்தை விட சிறிய நகரமான ஹப்புத்தளை நகர சபையாக உள்ளபோது மஸ்கெலியாவை நகர சபையாக மாற்றுவது சிரமமல்ல. வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வருடக்கணக்கில் வழங்கிக்கொண்டு இருப்பவர்களுக்கா அதிகாரம் கிடைத்து இரண்டு வருடங்களுக்குள் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கா உங்களது வாக்குகள் என்பதை உங்கள் மனசாட்சி அடிப்படையில் தீர்மானியுங்கள். ஹட்டன் நகரத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துவிட்டதாக புதிதாக ஒருவருக்கு கவலை வந்திருக்கிறது. இப்போது அந்திநேர கூட்டமானால் அவர் அப்படியே பேசி வருகிறார். அந்தி நேரமானால் அவர் அப்படித்தான் உளறுவார். நாடு முழுவதிலும் போதைபொருள் விற்பனை பிரச்சினை இருக்கிறது. அண்மையில் பொலனறுவையிலும் போதைப்பொருள் விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு என்ன சொல்வார்களோ தெரியாது என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com