சுதந்திரக் கட்சியிலிருந்து மகிந்தவை நீக்கக் கோரிக்கை !!

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி கட்சியின் மத்திய செயற்குழுக்கு கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர இளம் தொழிலாளர்கள் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ரஜிக கொடிதுவக்கு தெரிவித்தார்.

கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

மஹிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சிதைத்துக்கொண்டிருக்கிறார். எமது கட்சியின் அங்கத்தவராகவும் ஆலோசகராகவும் செயற்பட்டுக்கொண்டு ஜீ.எல்.பீரிஸ் ஆரம்பித்துள்ள புதிய கட்சிக்கு உரமூட்டிக்கொண்டுள்ளார். இவரது செயற்பாடுகள் கட்சியின் அபிவிருத்திக்கு பாதிப்பாகவும், மக்கள் மத்தியில் கட்சி தொடர்பில அதிருப்தி நிலைகளை தோற்றுவிக்கவும் காரணமாக அமைந்துள்ளன.

இதனால் இவர் கட்சியின் ஆலோசனைப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் நாம் எமது கோரிக்கையை கட்சியில் சமர்பிக்கவுள்ளளோம்.

இதுபோன்று கட்சியின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ள ஏனைய நபர்களையும் நீக்க வேண்டும். கடந்த 3 வருட காலத்தில் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டியிருந்த இடங்களில் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை. இதற்கு கோத்தாபய ராஜபக்ஷவின் சம்பவம் சிறந்த உதாரணம். இவர் மிக் விமான கொடுக்கல் வாங்கல் மோசடியில் ஈடுபட்டிருந்தார்.உக்ரேய்னுக்கும் இலங்கைக்கும் இடையில் இக்கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றது.

இதன் பெறுமதி 14.7 டொலர் மில்லியன்களாகும். ஆனால் உக்ரெய்னுக்கு 7.2 மில்லியன் டொலர்களே அனுப்பட்டுள்ளது. எஞ்சிய 7.5 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது?

ஆனால் இந்த விடயங்கள் குறித்து இன்றுவரை உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் தங்களது குற்றச்செயல்களை மூடி மறைப்பதற்காகவே ஜீ.எல்.பீரிஸை முன்னிலைப்படுத்திய கட்சியை ஆரம்பித்து தாய்க் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சிதைக்கும் வகையில் தமது பிரசாரப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

எனவே ராஜபக்ஷ சகோதரர்களது செயற்பாடுகள் கட்சியின் நலனுக்கு பாதிப்பாக இருப்பதால் இவர்கள் குறித்து உயர்பீடம் நல்ல முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com