“அந்தக் கட்டுரையின் பின்னால் நிறைய அரசியல் உண்டு“

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் பங்கெடுத்த பெண் போராளிகளை மிக மோசமாகச் சித்தரித்து கட்டுரைகளினை எழுதிய சிவ மகாலிங்கம் அருளினியன் எனும் நபருக்கெதிராக மீண்டும் சர்ச்சைகள் வெடித்துள்ளன. இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆனந்தவிகடன் நாளிதழில் “நேற்று நான் விடுதலைப்போராளி இன்று பாலியல் தொழிலாளி“ என்ற தலைப்பில் ஒரு பெண்புலியின் வாக்குமூலமென அவர் குறித்த கட்டுரையினை ஜந்து வருடங்களிற்கு முன்னதாக எழுதியிருந்தார்.

இக்கட்டுரை தொடர்பில் வடகிழக்கிலிருந்து பலத்த எதிர்வினைகள் ஆற்றப்பட்டிருந்ததுடன் பல கண்டனங்கள் ஆனந்த விகடன் ஆசிரியர் பீடத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து விகடனின் மாணவ பத்திரிகையாளரான சிவ மகாலிங்கம் அருளினியன் இந்நிறுவனத்தினிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். விகடன் நிறுவனம் மன்னிப்புக் கோரலின்றி ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் கேரள டயரீஸ் எனும் புதிய நூலுடன் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பியிருக்கும் இந்நபர் தனது புதிய நூலை எதிர்வரும் 3ம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சபாலிங்கம் மண்டபத்தினில் வைத்து வெளியிடவுள்ளார்.

இந்நிலையினில் பெண்போராளிகளை கொச்சைப்படுத்தியதற்கு யாழினில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ளன.அத்துடன் விடுதலைப்போராட்டத்தில் மிகப்பெரிய பங்கினையாற்றிய இந்துகல்லூரி பாடசாலை மண்டபத்தை இத்தகைய நடவடிக்கைக்கு வழங்கியதற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பழைய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல தரப்புக்களும் கண்டனம் வெளியிட்டுள்ளன.அத்துடன் இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திற்கும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நூலாசிரியர் அளுளினியன் யாழப்பாணத்திலிருந்து வெளியேறி தற்போது இந்தியாவினில் வேலை செய்துவருகின்றார். இந்தியாவில் அவர் உள்ளபோதே குறித்த கற்பனை கட்டுரையினை அவர் எழுதியதாக சொல்லப்பட்ட போதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் இந்தியா றோ புலனாய்வு கட்டமைப்பின் தூண்டுதலில் இக்கட்டுரை எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை எமக்குக் கருத்துத் தெரிவித்த அருளினியன்  “அதன் கொடும் அரசியல் உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்தப் பேட்டி வெளிவந்த 2012- இல் நான் வெறும் மாணவப் பத்திரிகையாளனே. அந்தக் கட்டுரையின் பின்னால் நிறைய அரசியல் உண்டு”. என தெரிவித்துள்ளார்.

எனினும் கட்டுரையின் பின்னால் உள்ள அரசியல் குறித்தோ தான் அதன் பங்காளராக இருந்ததற்கான பொறுப்புக்கூறலையோ அவர் வெளியிட்டிருக்கவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com