வாழைச்சேனையில் ஆர்பாட்டக்காரர் மீது பொலிஸார் அடிதடி!

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதானத்தில் உள்ள குடிசைகளை அகற்ற மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையில் பிரதேச மக்கள் சிலர் முற்பட்டதால் அங்கு சற்று அமைதியின்மை நிலை தோன்றியது.

குறித்த மைதானத்தை இன்று(15)  காலை முற்றுகையிட்டதை அடுத்து அங்கு தீவிர நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிள்ளையாரடி ஆலயத்தில் மத நல்லிணக்கத்திற்காக விசேட பூஜைகள் நடைபெற்றதுடன், முறாவோடை பாடசாலை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிசைகளுக்கு எதிராக பிரதேச மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் குறித்த பாடசாலைக்கு சென்று அங்கு அமைக்கப்பட்ட வேலிகளை அகற்ற முற்பட்டனர்.

இதனையடுத்து கலகம் அடக்கும் பொலிசாருக்கும் ஆர்பாட்டகாரர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் இடம்பெற்றதுடன், ஆர்ப்பாட்டகாரர்கள் அதனையும் மீறி வேலியை அகற்ற முற்பட்டனர்.

இதனையடுத்த பொலிசார் அவர்கள் மீது தடியடி பிரயோகம் செய்தனர். இதில் பெண்கள் உட்பட 4 பேர் காயடைந்தனர்.

இதேவேளை பொலிசார் மீது ஆர்பாட்டகாரர்கள் கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதை அடுத்து, பொலிசார் புகைக்குண்டுகள் வீசி ஆர்பாட்டகாரர்களை கலைத்தனர்.

அங்கு மேலதிகமாக கலகம் அடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டு பாதகாப்பில் ஈடுபட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் வருகை தந்து ஆர்பாட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், இது தொடர்பாக நாளை புதன்கிழமை காலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் அரசாங்க அதிபர், பொலிசார், காணி ஆணையாளர், பிரதேச செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொண்ட விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பாடசாலை மைதானத்திற்கு வரைபடத்தில் உள்ள காணியில் ஒரு அங்குலம் கூடவிடாது அதனை பெற்றுதருவதாக உறுதியளித்ததை அடுத்து ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com