தனித்து முடிவெடுக்கும் தமிழரசுக் கட்சியை கழற்றிவிட பங்காளிகள் முடிவு

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டாக செயற்பட வவுனியாவினில் தீர்மானித்துள்ளன. நேற்று (02) மாலை வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளான புளொட் , ரெலோ ,ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள் வவுனியா விருந்தினர் விடுதியில் ஒன்று கூடி இம்முடிவை எடுத்துள்ளனர்.
அண்மைக்காலமாக கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுள் ஒன்றான தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக செயற்பட்டுவரும் நிலையில் ஆயுதப்போராட்டத்தின் வழிவந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன் முன்னுதாரண நடவடிக்கையாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ; தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளான புளொட் , ரெலோ ,ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி இனிவருங்காலத்தினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெயரினில் செயற்படுவதென தீர்மானித்துள்ளனர்.
குறித்த ஒன்றுகூடலில் மாவட்ட ரீதியில் மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முடிவெடுத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மாதாந்தம் இப்படியான ஒன்றுகூடல்கள் தொடருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தினில் அவதானிப்பாளர்களாக சிவசக்தி ஆனந்தன்,சித்தார்த்தன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கெடுத்திருந்தனர்.
இதுவரை தமிழரசுக்கட்சியுடனான உறவு தொடர்பினில் மதில் மேல் பூனையாகவிருந்த சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய இருவரும் மாகாணசபையினில் தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகளினால் தீர்க்கமான முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் விரைவில் தமிழீழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) இருந்து நீக்கப்படவுள்ளார்.எதிர்வரும் 12ம் திகதி வவுனியாவில் கூடும் உயர்மட்ட கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படலாமென தெரிகிறது.

ஏற்கனவே கட்சியுடன் உறவை பேணாத நிலையில், முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் டெனிஸ்வரன் கையெழுத்திட்டார். எனினும், முதலமைச்சரை ஆதரிப்பதென தமிழீழ விடுதலை கழகம் முடிவுசெய்திருந்தது. கட்சியின் முடிவை மீறி டெனிஸ்வரன் கையெழுத்திட்டதையடுத்து, அவரிடம் விளக்கம் கேட்டு கட்சி கடிதம் அனுப்பியிருந்தது.
அதில், கட்சியை விட்டு அவரை ஏன் நீக்கக்கூடாதென்பதற்கு விளக்கமளிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. ஆனால் டெனிஸ்வரன் இதற்கு பதிலளிக்கவில்லை. மாறாக, கட்சியின் யாப்பை தனக்கு தருமாறு கேட்டிருந்தார்.
இதனையடுத்து கட்சிக்குள் இது தொடர்பான ஆலோசனை நடந்தது. அவர் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினராக இணைந்து கொண்டவர், கட்சி விதிமுறையை அறியாமலா உறுப்பினராக இணைந்தார்? என்ற கேள்வி அங்கு எழுப்பப்பட்டுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இணைபவர்கள் கட்சியின் யாப்பை அறிந்துகொண்டிருப்பார்கள் என்பதன் அடிப்படையில், டெனிஸ்வரனிற்கு யாப்பை வழங்குவதில்லையென கட்சி முடிவு செய்துள்ளது.

வரும் 12ம் திகதி வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்ட குழு கூடி டெனிஸ்வரன் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவுள்ளது. அனேகமாக டெனிஸ்வரனை கட்சியை விட்டு நீக்கும் முடிவு அன்றைய தினம் எடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com