கேப்பாப்புலவு காணியை விடுவிப்பதில் அரசாங்கம் இழுத்தடிப்பு!

கேப்பாப்புலவில் மக்களுக்குச் சொந்தமான 111 ஏக்கர் காணியை விடுவிப்பதில் அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது.

குறித்த பிரதேசங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி, நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாதுகாப்புச் செயலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்தப் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படுமெனவும், அதற்கு இராணுவத்தினரால் கோரப்பட்ட பணத்தினை தான் உடனடியாக கொடுப்பதென அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இரா.சம்பந்தனிடம் தெரியப்படுத்தியதாகவும், ஆனால் இதுவரை அதற்குரிய நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லையென்றதையும் சுட்டிக்காட்டி இரா. சம்பந்தன் மீண்டும் பாதுகாப்புச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதம் வருமாறு,

திரு. கபில வைத்தியரத்ன ஜ. ச
செயலாளர்
பாதுகாப்பு அமைச்சு
இல 15/5, பாலதக்ச மாவத்தை,
கொழும்பு -03

ஐயா,
முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாபிலவிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குச்
சொந்தமான காணிகள்

மேற்குறித்த விடயம் தொடர்பில் தங்களது MOD/PAC/01/L/938/AY இலக்கமிடப்பட்ட 09.08.2017 திகதியிடப்பட்டிருந்த கடிதம் நேற்று எனக்குக் கிடைத்தது. தங்கள் பதிலுக்கு எனது நன்றிகள்.

இந்த விடயம் பல்வேறு மட்டங்களில் அவதானத்திற்கு உள்ளாகி வந்துள்ளது, இறுதியாக புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் தலைமையில், புனர்வாழ்வு அமைச்சில் ஜூலை, 26 2017 அன்று ஒரு கூட்டம் இடம்பெற்றிருந்தது.

ஜூலை, 20 2017 அன்று நான் தங்களுக்கும் ஏனையோருக்கும் ஒரு பிரதியுடன் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் அனைத்தையும் உறுதி செய்கிறேன். எனது குறித்த கடிதத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் அவர்கள் 2017 ஜூலை 28ம் திகதி SP/4/1 இலக்கமிடப்பட்ட கடிதத்தின் மூலம் பதிலளித்திருந்தார்.

புனர்வாழ்வு அமைச்சில் ஜூலை 26ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், குறித்த இடத்திலிருந்து இராணுவம் வெளியேறுவதற்குத் தேவையான நிதியினை தான் ஒரு சில நாட்களில் ஒதுக்கித் தருவதாக கௌரவ அமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இந்தத் தீர்மானத்திற்கு அமைய வெளியேறும் நடவடிக்கையானது தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். தீர்வு எட்டப்பட வேண்டிய விடயமாக இருப்பது 70 ஏக்கர் 2ரூட் காணி விடயமே. தங்களது 09.08.2017 அன்று திகதியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 73.11 ஏக்கர் காணியே இது என்பது எனது கணிப்பாகும்.

இந்தக் காணி தொடர்பில் ஜூலை 20, 2017 அன்று ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த விடயங்களை உறுதி செய்கிறேன்.

ஜனாதிபதியின் செயலாளரினால் ஜூலை 28ஆந் திகதி அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் இந்த நிலைப்பாடு தொடர்பில் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியில், வெளியேறுவது தொடர்பில் தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரே விடயம் இந்த 70 ஏக்கர் 2ரூட் /73.11ஏக்கர் காணிப் பகுதியேயாகும்.

இந்த மக்கள் சொந்தக் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு ஒரு தசாப்த காலம் கடந்து விட்டது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்து விட்டன. இந்த மக்கள் தமது காணிகளில் மீளக் குடியேறுவதை வலியுறுத்தி கடந்த 165 நாட்களாக இந்தக் காணிகளின் வாயிலின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டமானது மழையிலும் வெயிலிலுமாக மிகுந்த அவஸ்தைகளோடு இடம்பெற்று வருகின்றது.

மக்களின் அனுமதியின்றி இந்தக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. மேலும,; அவர்களின் இடைவிடாத போராட்டங்களின் மத்தியிலும் சட்டரீதியாகப் பெறப்படாத இந்தக் காணிகளில் இராணுவம் தொடர்ந்தும் குடிகொண்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது நிச்சயமாக சட்டஒழுங்குக் கட்டமைப்பை மீறும் செயலாகும்.
மேலும், இராணுவத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய போதியளவு அரசகாணி குறித்த இடத்திலே காணப்படுகின்றது. குறித்த 111 ஏக்கர் மற்றும் 70 ஏக்கர் 2ரூட்/73.11ஏக்கர் காணிகள் பெரும்பாலும் மக்களுக்கு உரித்தான, அவர்கள் வாழ்வதற்கும் ஏனைய சமூக, பொருளாதார தேவைகளுக்குமாக பரம்பரை பரம்பரையாக நூற்றாண்டு காலமாகப் பயன்படுத்தி வந்த காணிகளாகும். தாங்கள் பிறந்து வளர்ந்த மண் தொடர்பில் அவர்களுக்கு உரித்து உண்டு.

இந்த மக்களுக்கு அவர்களது இடங்களுக்குத் திரும்பிச் செல்லும் உரிமையை இனிமேலும் மறுக்க முடியாது. அப்படிச் செய்வது அநீதி மாத்திரமல்ல, அது நற்செயலுக்கும், புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும் பாதகமான செயற்பாடாக அமையும்.

குறித்த 111 ஏக்கர் மற்றும் 70ஏக்கர் 2ரூட்/73.11 ஏக்கர் காணிகள் எவ்வித தாமதமும் இன்றி விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்ட வேண்டும் என நான் மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன்.
இந்த விடயம் தங்களது மிக விரைவான கவனதிற்குட்படுவதை நான் வரவேற்கிறேன்.

இரா. சம்பந்தன்
பாராளுமன்றஉறுப்பினர்
எதிர்க்கட்சிதலைவர்

பிரதிகள் : (1) கௌரவ ரணில் விக்ரமசிங்க
பிரதமமந்திரி

(2) கௌரவ டி.எம்.சுவாமிநாதன்
புனர்வாழ்வுஅமைச்சர்

(3) ஜனாதிபதியின் செயலாளர்

(4) பாதுகாப்புசெயலாளர்
பாதுகாப்புஅமைச்சு

(5) ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா
முப்படைத் தளபதி

(6) ஜெனரல் மகேஷ் சேனநாயக்க
இராணுவதளபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com