குருபெயர்ச்சி பலன்கள் – துலாம் (02.09.2017 முதல் 02.10.2018 வரை)

ஆழ்ந்து சிந்தித்து செயல்படுவதில் வல்லவர்களான நீங்கள், மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள். எதிரிகளையும் நண்பராக்கிக் கொள்வதில் கைதேர்ந்தவர்கள் நீங்கள்தான். தன் பத்து விரல்களையே சொத்தாக நினைப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து கொண்டு சுபச் செலவு, வீண் அலைக்கழிப்பு, பொருள் இழப்பு, மறைமுக விமர்சனங்கள், கடன் பிரச்னைகளை தந்த குருபகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்களது ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் முடிந்தவரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்து கொண்டால்
நல்லது. ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.

குடும்பத்தினருடன் அமர்ந்து பேசக்கூட நேரம் இல்லாமல் போகும். உங்கள் மனம் எதையே தேடிக் கொண்டிருக்கும். ‘‘ஜென்மத்தில் ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்’’ என்ற பாடல்படி கணவன்  மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வரும். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். குருபகவானின் பார்வை:  குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டைப் பார்ப்பதால் புதிதாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். எதிலும் தெளிவு பிறக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புதுவேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

குருபகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டைப் பார்ப்பதால் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் பாக்ய வீடான 9ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். அரைகுறையாக நின்ற வேலைகளெல்லாம் முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். தந்தையாரின் உடல் நிலை சீராகும். பாகப்பிரிவினை, பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தீரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். காணாமல்போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். விலை உயர்ந்த மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

உங்கள் தனசப்தமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புது வேலை அமையும். சகோதர, சகோதரிகள் மதிப்பார்கள். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் என்றாலும் மனைவியுடன் விவாதம், அவருக்கு மருத்துவச் செலவுகளெல்லாம்
வரக்கூடும். வங்கி சேமிப்புக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என மேலாளரை கலந்தாலோசித்து காசோலை தருவது நல்லது. 06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், வாயுக் கோளாறு, சிறுநீர் பாதையில் அலர்ஜி வந்துசெல்லும்.

எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். முன்னேற்றம் தடைபடாது. வேற்றுமதம், மாற்று மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களின் சஷ்டம திருதியாதிபதியான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீண் பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். கடன் பிரச்னையால் நிம்மதி குறையும். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். என்றாலும் வசதி, வாய்ப்புகள் கூடும்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்: 

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் குருபகவான் அமர்வதால் நோயிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்யம் சீராகும். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை குறையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு குடி புகுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விசா கிட்டும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:  

07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் குடும்பத்தில் வாக்குவாதம் வந்துசெல்லும். யாரும் தன்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, தன்னை யாரும் மதிக்கவில்லை என்றெல்லாம் சில நேரங்களில் நினைப்பீர்கள்.

வியாபாரிகளே! லாபம் மந்தமாக இருக்கும். போட்டிகளால் விழிபிதுங்குவீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த பிட் நோட்டீஸ், வானொலி விளம்பரம் என செலவிடுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். புரோக்கரேஜ், ஸ்பெக்குலேஷன், பிளாஸ்டிக், கண்சல்டன்சி, ஏற்றுமதி வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! உங்களின் போராட்டங்கள் மற்றவர்களுக்கு புரியவில்லையே என வருந்துவீர்கள். நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் காரணம் என்று தவறாகப் புரிந்து கொள்வார்கள்.

கன்னிப் பெண்களே! எதிர்காலத்தைப்பற்றி யோசியுங்கள். காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். அன்பாகவும், ஆறுதலாகவும் பேசுகிறார்கள் என்றெல்லாம் நம்பி ஏமாற வேண்டாம். திருமண முயற்சி சற்று தாமதமாக முடியும். அசிடிட்டி தொந்தரவு, முடி உதிர்தல், கர்ப்பப்பை வலி வந்து போகும். போட்டித் தேர்வுகளை கவனமாக எழுதுங்கள். இரவில் அதிக நேரம் விழித்துக் கொண்டிருக்காதீர்கள். பெற்றோரை அனுசரித்துப் போங்கள்.

மாணவ  மாணவிகளே! உங்களுடைய திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். பள்ளிக்கு அடிக்கடி விடுப்பெடுக்க வேண்டாம். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சிலர் விடுதியில் தங்கி படிக்க வேண்டி வரும். கோபத்தால் பழைய நட்பை இழக்க நேரிடும்.

கலைத்துறையினரே! வருவதாக இருந்த வாய்ப்புகள் கை நழுவிப் போகும். வயதில் குறைந்த கலைஞர்களால் உதவிகள் கிடைக்கும். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.

அரசியல்வாதிகளே! வழக்கால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சுற்றியிருப்பவர்களில் யாரை நம்புவது, யாரை தவிர்ப்பது என்பது புரியாமல் தவிப்பீர்கள். தலைமையை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

விவசாயிகளே! விளைச்சல் மந்தமாக இருக்கும். பாம்பு குறுக்கிடவும் வாய்ப்பிருக்கிறது. எனவே மாலை நேரத்தில் அதிக நேரம் நிலத்தில் இருக்க வேண்டாம். பம்பு செட் அடிக்கடி பழுதாகும். இந்த குரு மாற்றம் உடலையும், உள்ளத்தையும் பலவீனமாக்கி உங்களை பரிசோதித்தாலும், சுற்றியிருப்பவர்களின் உண்மை சுயரூபத்தை காட்டிக் கொடுக்கும்.

பரிகாரம்: 

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரரை தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com