வடக்கு முதல்வருக்கு ஆளுமை இல்லையாம் !

இலங்கையில் முதலமைச்சர்களில் தகுதி கூடிய ஒரே முதலமைச்சர் என்றால் அது வடக்கு முதலமைச்சர்தான். அது அனைவருக்கும் தெரியும். வயம்ப முதலமைச்சர் எட்டாம் வகுப்பும் வரைதான் படித்தவர். ஆனால் அவர் அங்கு சிறப்பாக நிர்வாகத்தை நடத்துகின்றார். இவ்வாறு வடக்கு மாகாண எதிர் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மேல் மாகாணத்தில் வயம்ப எனும் இடத்தில் அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றுக்கு கல்வி அமைச்சருடன் சென்றிருந்தேன். அக் கூட்டத்தில் முதலமைச்சர் எட்டாம் ஆண்டுதான் படித்தவர் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் அவர் அந்த மாகாணத்தை சிறப்பாக கொண்டு நடத்துகின்றார். இதற்குத் தகுதி முக்கியம் அல்ல ஆளுமைதான் முக்கியம். அவரிடம் அந்த ஆளுமை இருக்கிறது.
இதனைப் பல இடங்களில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதுபோன்றே வடக்கு கல்வி அமைச்சரும் ஆசிரியராக, அதிபராக, வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்து கல்வி அமைச்சராக வந்தவர் என்பது முக்கியமல்ல இதிலும் அவரது ஆளுமைதான் முக்கியமானது . வடக்கின் கல்வித் துறையில் வளங்கள் சரியாக பகிரப்படாமை, சரியாக பயன்படுத்தப்படாமை, மற்றும் நெறிப்படுத்தப்படாமை போன்ற காரணங்களால் கல்வித்துறை என்றுமில்லாத அளவுக்கு இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.
வடக்கின் கல்வி வீழ்ச்சி தொடர்பாக ஆரம்பத்தில் என்னால் கேள்வி எழுப்பிய போது பழைய வடக்கு ஆளுநர் மற்றும் பழைய மகிந்த அரசையும் அந்த அரசுக்கு ஆதரவு வழங்கிய அரசியல் கட்சிகளையும் குறை சொல்லியதோடு, அவர்களின் தலையீடும் காரணம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இற்றைக்கு மூன்றரை வருடங்கள் கடந்த நிலையிலும் வடக்கு மாகாணம் இன்றும் கல்வியில் கீழ் நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயம். என்னைப் பொறுத்தவரை இதற்கான முழுப்பொறுப்பையும் வடக்கு மாகாண சபைதான் ஏற்க வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் வளங்கள் உள்ளிட்ட கல்வித்துறையின் வளங்கள் உரிய முறையில் பங்கிடப்படவில்லை, இலங்கையில் ஆசிரியர் – மாணவர் விகிதாசார நியமம் 18 க்கு ஒன்றாக இருக்க வேண்டும் ஆனால் வடக்கில் 16 க்கு ஒன்றாக காணப்படுகிறது. எனவே வளங்கள் அதிகமாக இருக்கிறது. ஆனால் அந்த வளங்களை சரியாக பயன்படுத்தவோ, பங்கிடவோ, நெறிப்படுத்தவோ முடியாத வினைத்திறனற்ற நிர்வாகமே காணப்படுகிறது. இதனாலேயே இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக ஒரு சில வலயங்களில் கல்வித்துறையின் ஆளணி வளம் குவிக்கப்பட்டுள்ளது. எத்தனையோ தடவைகள் எடுத்துக் கூறியும் அது சீர்செய்யப்படவில்லை. அதற்கு மேலதிகமாக இக் குறைபாடுகளை நீக்குவதற்காகதான் பட்டதாரிகள், ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்கள். இதில் குறிப்பாக வன்னிப் பிரதேசங்களில் நியமிக்கவே முன்னுரிமை அளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கு வெளியே நானூறு பேரளவில் நியமிக்கப்பட்டார்கள் அதில் ஜம்பது பேர் ஒத்து இடமாறுதல் மூலம் மீண்டும் யாழப்பாணத்திற்கு வந்திருக்கின்றார்கள். ஆனால் 75 பேர் அரசியல்வாதிகளின் சிபார்சு மற்றும் உயர்மட்ட செல்வாக்கின் அடிப்படையிலும் யாழப்பாணத்திற்கு வந்து விட்டார்கள் இதில் எந்தெந்த அரசியல்வாதிகள் ஈடுப்பட்டுள்ளனர் என்ற ஆதாரமும் என்னிடமும் உள்ளது. வளங்களை சரியாக நெறிப்படுத்தி அதற்கான ஆளுமையான தலைமைத்துவத்தை வழங்கி வினைத்திறனான செயற்பாடுகளை கொண்டு நடத்தவே அரசியல் தலைமைத்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
மக்களுக்கு வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்கவே வடக்கு அமைச்சர்களுக்கு சம்பளங்கள் சலுகைகள் என முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அது எதுவும் இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை என வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com