வடக்கு மீனவர் ஒப்புதலின்றி இந்திய மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டாம்

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட இந்திய இழுவை படகுகளையும், இந்திய மீனவர்களையும் வடமாகாண மீனவர்களின் ஒப்புதலின்றி விடுவிக்க கூடாது என வடமாகாண கடற்தொழிலாளர் இணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய பிரதமர் வருகை மற்றும் இந்திய மீனவர்களின் விடுதலை தொடர்பாக இன்றைய தினம் (சனிக்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
“இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின்போது வடமாகாண மீனவர்களின் ஒப்புதல் பெறப்படாமல் இந்திய இழுவைப் படகுகளும், இந்திய மீனவர்களும் விடுவிக்கப்பட்டால் வடக்கில் மட்டுமல்லாமல் தெற்கிலும் பாரிய போராட்டங்களை நடத்துவோம்.
இதேவேளை கடந்த மாதம் 5ம் திகதி அமைச்சரைச் சந்தித்தபோது 6 கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அதன்போது இந்திய இழுவைப் படகுகளால் அழிக்கப்பட்ட வடக்கு மாகாண மீனவர்களின் கடற்தொழில் உபகரணங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்பது உள்ளிட்ட 6 நிபந்தனைகள் வழங்கப்பட்டிருந்தன.
அவற்றுக்கும் ஆக்கபூர்வமான பதில் இதுவரையில் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய படகுகள் விடுவிக்கப்பட்டால் வடக்கில் மட்டுமல்லாமல் தெற்கிலும் அதாவது தலைநகரிலும் போராட்டங்கள் வெடிக்கும்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com