மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நடத்திய 300 பேர் கைது!

மெரினாவில் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்வை நடத்த முயன்று கைது செய்யப்பட்ட 300 உணர்வாளர்களை தற்போது ஆழ்வார்பேட்டையில் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டனர்.
ஆனால் திருமுருகன் உள்ளிட்ட 6 உணர்வாளர்களை சிறையில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளதை அறிந்த மேற்கண்ட 300 பேரும் விடுதலையாக மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்.
அனைவரையும் விடுதலை செய்யுங்கள் அல்லது அனைவரையும் சிறையில் அடையுங்கள் என இயக்குநர் வ.கௌதமன் அனைவரின் சார்பாகவும் கூறினார்.

இலங்கை இனப்படுகொலையில் உயிர்நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில், கடந்த 7 ஆண்டுகளாக மே 17 இயக்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் மெரினாவில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, அப்பகுதியில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த ஆண்டும் திட்டமிட்டபடி, நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப் போவதாக மே 17 இயக்கத்தினர் அறிவித்திருந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தினாலும் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், மெரினா கடற்கரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதுடன், உள்வட்ட சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கருப்புச்சட்டை அணிந்து வந்தவர்களை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு முழக்கமிட்டபடி வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். அப்போது, இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

இதனைத் தொடர்ந்து, திருவள்ளுவர் சிலை அருகே திருமுருகன் காந்தியும், தமிழ் உணர்வாளர்களும் மெழுகுவர்த்தி ஏந்தியபடி அஞ்சலி செலுத்தினர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com