முற்றுகையிடும் பிக்குகள் ! – வடக்கு அவையை முடக்க முடிவு

சிங்கள இனவாத அமைப்பான இராவணபலய அமைப்பு வடக்கு மாகாண சபையை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்து முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சர்ச்சைக்குரியவகையினில் நாவற்குழியில் முன்னெடுக்கப்படும் பௌத்த விகாரை அமைப்பு பணிகளிற்கு வடமாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சு தடைவிதித்துள்ள நிலையினில் இதற்கெதிராகவே நாளைய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சுமார் 300 வரையிலான சிங்கள பௌத்த பிக்குகள் இதற்கென வருகைதரவுள்ளதுடன் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நாவற்குழியினில் படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விகாரை கட்டுமான பணிகளை பார்வையிடுவதுடன் ஆசீர்வாதம் வழங்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது.
இதனிடையே நாவற்குழியினில் இலங்கை அரசினது தேசிய வீடமைப்பு அதிகாரசபை காணியினில் சிங்களவர்களை குடியமர்த்துவதில் முன்னின்ற தரப்பின் தூண்டுதலிலேயே தற்போதைய பௌத்த பிக்குகளது வருகை அமைந்திருப்பதாக சொல்லப்படுகின்றது.
எனினும் குறித்த விகாரை அமைப்பு தொடர்பாக அப்பகுதி உள்ளுராட்சி அமைப்பான சாவகச்சேரி பிரதேச சபைக்கு விகாராதிபதி அறியத்தந்ததாகவும் அப்போதே அதற்கு அனுமதி வழங்கப்படவில்லையென தெரிவித்து பிரதேச சபை செயலாளரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
நாளைய வடமாகாணசபை அமர்வினில் குறித்த நாவற்குழி விகாரை அமைப்பு தொடர்பினில் பேச சில தரப்புக்கள் முற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com