2017 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா யாழில் நேற்று(23) சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
யாழ்ப்பாணம் ஒஸ்மோனியாக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஐயசூரிய கலந்து கொண்டிருந்தார்.
மேலும் முஸ்லிம் சமய பண்பாட்டல்வல்கள் மற்றும் தபால் அமைச்சரான எம்.எச்.எம்.ஹலீம் வர்த்தக வாணிப அமைச்சரான றிசாட் பதீயுதீன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈ.சரவணபவன் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோலட் கூரே உட்பட அரச அதிகாரிகள் பொது மக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது 2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வின் ஞாபகார்த்தமாக முத்திரை ஒன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த முத்திரையை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம் எச் எம் ஹலீம் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்தனர்.
ரூபா 15 பெறுமதியான இம்முத்திரையில் யாழ்ப்பாணம் முகமதியா ஜும்மா பள்ளிவாசலின் முகத்தோற்றம் (புதுப்பள்ளி) இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை இந் நிகழ்வில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்த கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணங்களினால் அவர் இந் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
