விக்னேஸ்வரனும் பிரபாகரன்தான் – தமிழர்களை நாடு கடத்துவோம் – சீறிப் பாய்கிறார் பிக்கு

gansara-thero-jhahhahhதமிழீழமும் இனவாதமும் தோற்கடிக்கப்பட்ட நிலையில் விக்கினேஸ்வரன் இன்று இரண்டாவது பிரபாகரனாக விஸ்வரூபம் எடுத்துள்ளார். சிங்கள
வர்களின் இறுதிக்கட்ட பொறுமையையும் சோதித்து
பார்க்கும் விக்கினேஸ்வரனுக்கு நாம் கூறுவது என்ன
வெனில், இனியும் எம்மை சீண்டிப்பார்த்தால் இலங்கையில்
உள்ள அனைத்து தமிழர்களும் இந்தியாவிற்கு செல்ல தயாராக வேண்டும் என்பதேயாகும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
வடக்கில் தலைதூக்கிவரும் ஈழ வாதத்தை தோற்கடிக்க அனைத்து பெளத்த சிங்கள அமைப்புகளும் பெளத்த மதத் தலைவர்களும் கட்சி பேதம் இன்றி ஒன்றிணைய வேண்டும். பொது அணியொன்றை உருவாக்கி சிங்கள பெளத்த கொள்கையை நிலைநாட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுபல சேனா அமைப்பினால் நேற்று கிருலப்பனையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நல்லாட்சியை பலப்படுத்துவதாக ஆட்சியமைத்த புதிய அரசாங்கம் நாளுக்கு நாள் முன்னெடுத்து செல்லும் நடவடிக்களின் மூலமாக நாட்டின் சிங்கள இனமும் சிங்கள கலாசாரமும் அழிந்துகொண்டு செல்கின்றது. நாட்டில் முப்பது வருடகால யுத்தத்தை கடந்து அவற்றை மறந்து வாழ்ந்த இந்த நாட்டு மக்களுக்கு மீண்டும் அந்த நிலைமைகளை நினைவுபடுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட, தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மீண்டும் இன்று நாட்டுக்குள் செயற்பட்டு வருகின்றன. புலிகளின் பிரதிநிதிகள் மீண்டும் இந்த நாட்டுக்குள் அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்புடன் செயற்பட ஆரம்பித்துள்ளனர். அதன் ஒரு கட்டமாகவே தற்போது விக்கினேஸ்வரன் வடக்கில் தெரிவித்துவரும் கருத்துக்களும் அமைந்துள்ளன. புதிய ஈழ வாதமும், கைவிடப்பட்ட இனவாதமும் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. வடக்கில் சிங்கள மக்களும் சிங்கள புனிதத்துவமும் அழிக்கப்பட்டு வருகின்றது.
தெற்கில் சிங்கள மக்களுடன் வாழ்ந்து நீதியரசராக செயற்பட்ட விக்கினேஸ்வரன் இன்று வடக்கில் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் சிங்கள மக்களுக்கு எதிராக அவர் செயற்படுவது நினைத்துக்கூட பார்க்க இயலாத அளவிற்கு அமைந்துள்ளது. விக்கினேஸ்வரன் இன்று இரண்டாவது பிரபாகரனாக செயற்பட்டு வருகின்றார்.
நாட்டின் நீதியை நிலைநாட்டுவதாகவும், அனைத்து மக்களுக்கும் சமமாக செயற்படுவதாக கூறிய அரசாங்கமும் சிவில் அமைப்புகளும் இப்போது அமைதிகாத்து வருகின்றமையே எமக்கு கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகம் பற்றி பேசியவர்கள் ஏன் இன்று அமைதிகாத்து வருகின்றனர். வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு நியாயம் நிலைநாட்டப்படாதது ஏன் என்பதே எமது கேள்வியாகும். தெற்கில் தமிழர்கள் தடைகள் இன்றி வாழக்கூடிய சூழல் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுவரும் நிலையில், வானத்தை தொடும் அளவில் கோவில்களை அமைக்க சிங்களவர்கள் இடமளித்து வரும் நிலையில் வடக்கில் ஏன் சிங்கள மக்களும் தடைகள் விதிக்கப்படுகின்றது.
சிங்களவர்களின் இறுதிக்ககட்ட பொறுமையையும் சோதித்து பார்க்கும் விக்கினேஸ்வரனுக்கு நாம் கூறுவது என்னவெனில் இனியும் எம்மை சீண்டிப் பார்த்தால் இலங்கையில் உள்ள அனைத்து தமிழர்களும் இந்தியாவிற்கு செல்ல தயாராக இருக்கிறார்களா? என்பதற்கு விக்கினேஸ்வரன் பதில் கூறவேண்டும்.
அதிகாரத்துக்காக அரசாங்கம் வாய்மூடி இருக்கலாம் ஆனால் நாட்டுக்காகவும் சிங்கள பெளத்த மக்களுக்காகவும் நாம் பொறுமையாக இருக்க மாட்டோம். நாம் இவ்வளவு காலமும் அமைதியாக நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் இனியும் பொறுமைகாக்க முடியாது. நாட்டுக்கும் சிங்கள மக்களுக்கும் எதிராக தந்திரமாக புலிகள் அமைப்புகளும் மேற்கத்தேய நாடுகளும் செயற்பட்டு வருகின்றன. நாட்டின் புலனாய்வு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்து உள்ளது. ஆகவே நாட்டின் சிங்கள பெளத்த மக்கள் நாட்டுக்காக போராட முன்வரவேண்டும். அன்று லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சி இன்று இலங்கையிலும் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அனைத்து பெளத்த சிங்கள அமைப்புகளும் பெளத்த மதத் தலைவர்களும் கட்சி பேதம் இன்று ஒன்றிணைய வேண்டும். பொது அணியொன்றை உருவாக்கி சிங்கள பெளத்த கொள்கையை நிலைநாட்ட வேண்டும். மஹிந்த ராஜபக் ஷ போன்ற பலமான ஆட்சியை வீழ்த்த முடிந்த மக்களால் இந்த ஆட்சியை கவிழ்ப்பது கடினமான ஒன்றல்ல. ரணில், மங்கள, சந்திரிக்கா போன்ற தமிழ் இனவாதத்தை வளர்க்கும் நபர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும். சிங்களவர்களின் ஒற்றுமை என்னவென்பதை வெளிப்படுத்த வேண்டுமாயின் அதையும் வெளிப்படுத்த நாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com