வடக்கு மக்களுக்கு பிரச்சினை உள்ளதென்பதை புரிந்துகொள்வது அவசியம் – நான் முன்வைத்த காலை பின் வைக்கமாட்டேன் – ஜனாதிபதி

col_dsc0027161308293_4550285_18072016_kaa_cmy“முன்வைத்த காலை பின் வைப்பவன் நானல்ல” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சியில் தெரிவித்தார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற அர்ப்பணித்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி; வடக்கு மக்களுக்குப் பிரச்சினை உள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.

புதிய இயக்கமொன்றை உருவாக்கப் போவதாகச் சிலர் கூறிவருகின்றனர். அத்தகைய இயக்கமொன்று தேவைதானா என கேள்வியெழுப்பிய ஜனாதிபதி; இரண்டு முறை தேர்தலில் தோல்வியைத் தழுவியவர்களால் புதிய இயக்கம் அமைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கிளிநொச்சியில் ஜேர்மன் – இலங்கை தொழில்நுட்ப நிறுவனத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

2015 ஜனவரி 8 ஆம் திகதி நாம் புதிய அரசாங்கத்தை அமைத்தோம். அந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் தீர்மானித்ததன் முக்கிய நோக்கம் நாம் மக்கள் முன் வைத்த தேர்தல் விஞ்ஞாபனமே. அதன் மூலம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற அர்ப்பணித்துள்ளேன் என்பதை மீண்டும் மக்களுக்கு நினைவுறுத்த விரும்புகின்றேன்.

சிலர் புதிய இயக்கமொன்றை உருவாக்கப் போவதாக கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுகின்றனர். எதற்காக அதனை அமைக்கப் போகிறார்கள் என அவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்.

நான் “முன்வைத்த காலை பின்வைப்பவனல்ல “ என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த நாட்டிலுள்ள பிரச்சினை என்னவென்று அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டில் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க அனைவரும் அர்ப்பணிக்க வேண்டியுள்ளது.

இந்த நாட்டில் வாழும் சிங்கள பௌத்த மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமென்றால் ஏனைய சமூக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

வடக்கு மக்களுக்கு பிரச்சினை உள்ளதென அனைவரும் புரிந்துகொள்வது முக்கியம். இனங்களுக்கிடையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முதலில் அது தொடர்பில் புரிந்துகொள்வது அவசியம்.

கொழும்பில் இருந்து கொண்டு செய்தியாளர் மாநாடுகளை நடத்துபவர்கள் கொழும்பிற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளார்கள் அவர்கள் ஊடக வீரர்களாக மட்டுமே உள்ளனர். அந்த வீரர்கள் வடக்கிற்கு வந்து வடக்கு மக்களின் பிரச்சினைகளை நேரில் பார்க்க வேண்டும். அதைச் செய்வதில்லை.

அதேபோன்று கிழக்கிற்கு சென்று அந்த மக்களின் பிரச்சினைகள் என்ன என்பதைத் தேடிப் பார்த்து அவர்களோடு கலந்துரையாடுவதுமில்லை. தெற்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

புதிய இயக்கமொன்றை உருவாக்கப் போவதாகக் கூறுவோருக்கு நான் கூறவிரும்புவது நல்லிணக்கம் தொடர்பில் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. அவர்கள் ஆட்சி நடத்தும் போது எவ்வாறு செயற்பட்டனர் என்பதை நாம் அறிவோம்.

நாடுகளில் புதிய கட்சி, புதிய இயக்கங்களை அமைத்தோர் பற்றி நாம் அறிவோம் சுதந்திரத்துக்குப் பின்னர் கட்சி அமைத்தவர்கள் அரசு நடத்தியவர்களையும் நாம் அறிவோம். அதற்கு ஊழல் மோசடியற்ற ஜனநாயக ரீதியில் செயற்படும் தலைவர்கள் தேவை.

இப்போது நாட்டுக்கு அத்தகைய அவசியம் எதுவும் காணப்படவில்லை. நாம் இந்த அரசாங்கத்தைப் பொறுப்பேற்றது குறைபாடுகளை நிறைவாக்குவதற்கே என்பதைக் குறிப்பிட வேண்டும்.

தேசிய ரீதியான தேர்தல்களில் தோல்வியைத் தழுவியவர்களால் நாட்டில் புதிய இயக்கமொன்றை ஒருபோதும் உருவாக்க முடியாது. நாட்டில் நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் கட்டியெழுப்ப எமது அரசாங்கம் அர்ப்பணித்துள்ளது.

அரசியலமைப்பொன்றை நாம் தயாரித்து வருகையில் அது தொடர்பில் பொய் பிரசாரங்களை முன்னெடுப்பதில் சில சக்திகள் முன்னின்று செயற்படுகின்றன.

புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு அல்ல

நாட்டை ஐக்கியத்திலும் நல்லிணக்கத்திலும் பொருளாதாரத்திலும் கட்டியெழுப்புவதற்கே.

தவறான பிரசாரங்களை மேற்கொள்வோருக்கு நான் கூற விரும்புவது மக்களை திசை திருப்ப முற்பட வேண்டாம்.

அதிகாரத்தைக் கேட்கின்றவர்கள் மீண்டும் ஊழல், மோசடிகளை ஏற்படுத்தவா அதனைக் கேட்கிறார்கள்? நாம் நல்லிணக்கம், மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதை அவர்கள் எதிர்க்கின்றார்களா என நான் கேட்க விரும்புகின்றேன்.

நல்லிணக்கம் என்பது கூறுவதற்கு இவகுவாக இருக்கும் ஆனால் அதனைக் கட்டியெழுப்புவது சவால் நிறைந்தது எனினும் அதனை நாம் மேற்கொள்வோம்.

தேசிய நல்லிணக்கத்தைப் போன்றே நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதிலும் நான் மிக உறுதியாகவுள்ளேன். எனது வாக்குறுதியில் அடங்கியுள்ள அனைத்தையும் நான் நிறைவேற்றுவது உறுதி என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com