மாதொருபாகனுக்குத் தடையில்லை – பிடிக்காவிடின் படிக்காதீர்கள் – சென்னை உயர் நீதிமன்றம்

mathsமாதொருபாகன் புத்தகத்துக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘ உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் அந்த புத்தகத்தை படிக்காதீர்கள்’ என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் புத்தகத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு, இன்று (05) நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல், புஷ்பா சத்யநாராயணா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாதொருபாகன் புத்தகத்துக்கு தடை விதிக்க முடியாது என தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.இது தொடர்பாக திருச்செங்கோடு மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளையும், திருச்செங்கோடு மக்கள் மன்றம் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

படைப்பாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்கவும் உத்தரவிட்டதோடு, மாதொருபாகன் நாவலின் புத்தகங்களை பெருமாள் முருகன் திரும்பப்பெற வேண்டிய அவசியமில்லை எனக் கூறி, அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரக் கோரிய மனுவையும் ரத்து செய்து அறிவித்தனர்.

அத்துடன் தங்கள் தீர்ப்பில், ’’எழுத்தாளர்களுக்கென்று ஒரு தனி சிந்தனை, சுதந்திரம் இருக்கிறது. அதனை புரிந்துகொள்ள வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும். இலக்கிய தரமான எழுத்துகள் உங்களுக்கு ஆத்திர மூட்டும் விதத்தில் இருந்தால், அந்த புத்தகத்தை வாங்காதீர்கள், அதனை படிக்காதீர்கள். இந்த விவகாரத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அவர் தொடர்ந்து எழுதலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. சாகும் வரை அவர் எழுத்து பணியைத் தொடரலாம். ஏனென்றால், அவராக ‘நான் இனி எழுதப்போவதில்லை’ என்ற முடிவுக்கு வரவில்லை. அதற்கான சூழல் உருவாக்கப்பட்டது. காலம் எந்த ஒரு கோபத்தின் வேகத்தையும் குறைக்கும் ஆற்றல் கொண்டது. அதற்கான சூழல் உருவகும் வாய்ப்பு இரு தரப்புக்கும் அளிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com