சாம்பல்தீவில் புத்தர்சிலை நிறுவ முயற்சி – மக்களிடையே பதட்டம்

golden-buddhaதிருகோணமலை சாம்பல்தீவுச் சந்தியில் மீண்டும் புத்தர் சிலையை நிறுவும் முயற்சிகள், பௌத்த பிக்குகள், மற்றும் சிங்களவர்களால் முன்னெடுக்கப்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டு வருகின்றது.

நிலாவெளி வீதியில், தனியார் காணியில் பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த இரண்டு சோதனைச் சாவடிகளை இராணுவத்தினர் அண்மையில் அகற்றியிருந்தனர்.

இந்த இரண்டு சோதனைச்சாவடிகளிலும், புத்தர் சிலைகள் வைத்து படையினரால் வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இங்கிருந்து படையினர் விலகிய போது, புத்தர் சிலைகளையும் அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், சாம்பல்தீவுச் சந்தியில், புத்தர் சிலை அகற்றப்பட்டு வெறுமையாக இருந்த இடத்தில், பிள்ளையார் சிலை ஒன்றும், சூலம் ஒன்றும் கடந்த 08 ஆம் திகதி வைக்கப்பட்டது.

உடனடியாகவே அவை மர்மநபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டதோடு, மறுநாள் மீண்டும் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையும் உடைத்தெறியப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (10) புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த பகுதியில் படையினரால் நாட்டப்பட்டு வளர்ந்திருந்த அரசமரம் ஒன்று இனந்தெரியாதவர்களால் வெட்டி வீழ்த்தப்பட்டது.

இதையடுத்து நேற்றுக் திங்கட்கிழமை (11) காலை அந்தப் பகுதியில் பெருமளவு சிங்களவர்களும் பௌத்த பிக்குகளும் ஒன்று கூடி, வழிபாடு நடத்தினர்.

பௌத்த கொடிகளால் சாம்பல்தீவு சந்தி அலங்கரிக்கப்பட்டதுடன், அவசர அவசரமாக புத்தர் சிலையை நி்றுவுவதற்கான கட்டுமாணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையினால், அந்தப்பகுதியில் செறிவாக வாழும் தமிழ் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதியில் இருந்த போதி மரத்தை வெட்டி வீழ்த்தியமை தொடர்பில், சிங்ஹலே தேசிய வேலைத்திட்ட தேசிய அமைப்பாளர் அரம்பபொல ரத்னசார தேரர் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது மதவாதிகளின் நடவடிக்கை அல்ல எனவும், இது தீவிரவாத செயல் என அவர் தெரிவித்தார். இது சிங்கள பௌத்தர்களை அழிப்பதற்கான செயற்பாடு எனவும் இதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு சிங்கள அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஆர்.எம். அநுர பண்டார விடுத்துள்ள அறிக்கையில், இது இனங்களுக்கிடையில் காணப்படும் நல்லுறவை இல்லாதொழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சி எனவும், இது தொடர்பில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, 2005ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி இரவோடு இரவாக திருகோணமலை பேருந்து நிலையப் பகுதியில் புத்தர் சிலை ஒன்றை வைத்ததால், பெரும் பதற்றநிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com