புலிப்படைக்கு தொகுதி கொடுத்த அதிமுக – கருணாஸ் போட்டி

அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா இன்று அறிவித்தபோது, கூட்டணிக் கட்சிகளுக்கென்று ஏழு இடங்களை ஒதுக்கியிருந்தார். அவரது கூட்டணியில் ‘முக்குலத்தோர் புலிப்படை’ என்ற கட்சியின் தலைவர் நடிகர் கருணாஸுக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட, பலரும் ஆச்சர்யத்தில் வாய்பிளந்தார்கள். இப்படியொரு கட்சி இருப்பதையே பலரும் இப்போதுதான் அறிந்தார்கள்.
” நேத்துதான் கார்டனில் அம்மாவை சந்தித்துப் பேசினேன். அவரை சந்திக்க வேண்டும் என முன்னாடியே லெட்டர் கொடுத்திருந்தேன். நேத்து அம்மாவைப் பார்த்தப்ப, ‘எங்கள் அமைப்புக்கு உரிய அங்கீகாரம் வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தேன். அவரும், ‘ எங்களோட கூட்டணிக்குள் இருந்தாலே உங்களுக்கு நல்ல அங்கீகாரம்தான்’ எனச் சொன்னார். இன்னைக்கு மதியம் காஸ்மோ கிளப்பில் சாப்பிடப் போயிருந்தேன். அங்கிருந்த டி.வியிலதான் எனக்கு சீட் கொடுத்த தகவலையே தெரிஞ்சுகிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சார்…” – முகம் முழுக்க சிரிப்பை நிரப்பிக் கொண்டு பேசினார் கருணாஸ்.
இப்படி ஓர் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தீர்களா?
” நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. ஏழு வருடங்களாக புலிப்படை அமைப்பை நடத்தி வருகிறேன். இளைஞர்களை சரியான பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அவர்களை அரசுப் பணிகளில் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு வந்தால்தான் உண்மையான வளர்ச்சி கிடைக்கும் என்பதற்காகத்தான் பாடுபட்டு வருகிறேன். இதுவரைக்கும் 180 பேருக்கும் மேல் படிக்க வைத்திருக்கிறேன். பலரைப் பட்டதாரி ஆக்கியிருக்கிறேன். அதிலும், இலங்கை அகதிகளின் எண்ணிக்கைதான் அதிகம். இதையெல்லாம் நான் வெளியில் சொல்வது கிடையாது. நடிகராக இருந்து உதவி செய்வதைவிடவும், அரசியல் தளத்தில் இன்னும் நிறைய உதவிகள் செய்ய முடியும் என்றுதான் அம்மாவிடம் கோரிக்கை வைத்தேன். ஒரே நாளைக்குள் இப்படியொரு அங்கீகாரத்தைக் கொடுப்பார் என நினைத்துகூடப் பார்க்கவில்லை”.
அதென்ன முக்குலத்தோர் புலிப்படை… எப்போது இந்த அமைப்பை உருவாக்கினீர்கள்?
” 2009-ம் ஆண்டு இந்த அமைப்பை உருவாக்கினேன். அடிப்படையில் நான் வறுமையில் இருந்து வந்தவன். நல்ல கல்வி கிடைக்காமல் கஷ்டப்பட்டிருக்கேன். நாலு பேருக்கு உதவி செய்ய வேண்டும் என எனக்குள் தூண்டிவிட்டவர் ஈழ நேரு என்பவர்தான். அவர் அப்போது திருச்சி முகாமில் இருந்தார். அவருடன் நான், சத்யராஜ் உள்பட பலர் சேர்ந்து நிறைய உதவிகள் செய்தோம். நான் சின்ன வயசுல வேதாரண்யம் உள்பட கடற்கரையோர பகுதிகளில் குடியிருந்தேன். புலி என்பது தமிழனின் அடையாளம். நமது முன்னோர்கள் பலருக்கும் புலிதான் அடையாளச் சின்னம். அதையொட்டிதான் புலிப்படை என்ற பெயரை வைத்தேன்”.
ஒருநாள் சந்திப்பிலேயே, ஜெயலலிதா எப்படி அங்கீகாரம் கொடுத்தார்? அ.தி.மு.கவோடு இதற்கு முன்புவரை இணக்கமாக இருந்தீர்களா?
” அப்படி எதுவும் கிடையாது. எனக்கு 45 வயது முடிந்துவிட்டது. நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அ.தி.மு.கவில் நான் அடிப்படை உறுப்பினரும் கிடையாது. நடுநிலையோடுதான் இருந்து வந்திருக்கிறேன். என்னைப் பற்றி விசாரித்து அவர் தெரிந்து கொண்டிருக்கலாம். இந்த ஏழு வருடங்களில் கிராமங்களில் நடக்கும் நல்லது, கெட்டது என அனைத்துக்கும் போய் வருகிறேன். எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் போகாமல் இருந்ததில்லை. நடிகர் என்ற போர்வைக்குள்ளும் நான் இருப்பது இல்லை. இளைஞர்கள், பெண்கள் எல்லாருக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும். அங்கீகாரம் கொடுக்கும்போது எல்லாவற்றையும் விசாரித்துதான் அம்மா முடிவெடுத்திருப்பார். இது எங்கள் அமைப்புக்கும் சமூகத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன்”.
நடிகர் சங்கப் பிரச்னையில் சரத்குமாரோடு முரண்பட்டீர்கள். இப்போது இருவரும் ஒரே அணியில். உங்களுக்காக சரத்குமார் பிரசாரம் செய்வாரா?
” கண்டிப்பாக பிரசாரம் செய்வார். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருக்கிறது. அதை அவரும் அறிவார். நள்ளிரவு என்றாலும் அவருக்குப் போன் செய்து பேசுவேன். ஒரு கட்சியை திறம்பட நடத்தி நிரூபித்தவர் அவர். நடிகர் சங்கம் என்பது ஓர் அறக்கட்டளை. அந்தப் பிரச்னை அதோடு முடிந்துவிட்டது. என் தொகுதிக்கு பிரசாரம் செய்யக் கூப்பிட்டால், கட்டாயம் வருவார். அரசியலுக்கு நான் புதியவன். நேற்றுதான் வந்தேன். அவருடைய அனுபவங்களையும் நான் கற்றுக் கொள்ள வேண்டும்”.
திருவாடனை தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி?
” எம்.பி தேர்தலில் நடிகர் ரித்தீஷ் போட்டியிட்டபோது, திருவாடனை கிராமங்களுக்குப் போயிருக்கிறேன். எனக்கு நன்றாகப் பழக்கப்பட்ட தொகுதிதான் அது. அ.தி.மு.க சின்னத்தில் போட்டியிடப் போகிறேன். அங்கு அம்மாவுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. அம்மா ஆட்சியின் நிறைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்க வேண்டும். தொகுதிக்குத் தேவையான வசதிகளைக் கொண்டு வந்து சேர்ப்பது, மக்களோடு இணக்கமாக இருப்பது என, வெற்றி பெற்ற பிறகு அந்தத் தொகுதியில் எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com