பெண்கள் அனைத்து துறைகளிலும் வலுவூட்டப்பட வேண்டியது அவசியம்!

பெண்கள் பாதுகாப்பான தொழில்களைப் பெற்றுக் கொள்ள உதவுவதன் மூலமும் சமூக தலைமைத்துவ அந்தஸ்த்துகளை அவர்கள் அடைந்து கொள்வதற்குத் தடையாகவுள்ள சட்ட மற்றும் சமூக தடைகளை அகற்றி ஒரு அபிவிருத்தியடைந்த கல்வி மற்றும் தொழிற் திறன்களை அவர்களுக்கு வழங்குவதனூடாக மட்டுமே பெண்களை வலுவூட்ட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (08) இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலைமையை நாம் எடுத்து நோக்கினால் கடுமையான பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தின் பல்வேறு யுகங்கள் கடந்துள்ள நிலையில், பெண்களின் வகிபாகம் குறித்து பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

உலகில் முதலாவது பெண் பிரதமர் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைப் பெற்ற நாடு என்ற போதிலும், இந்த நாட்டின் பெண்களும் பெண் பிள்ளைகளும் இன்னும் அவர்களது பாதுகாப்புக் குறித்த பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்றும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சர்வதேச மகளிர் தினச் செய்தி

   
        “ஒரு சமூகம் அதன் பெண்களுக்கு வழங்கும் அங்கீகாரம் அச்சமூகத்தின் அபிவிருத்தித் தரத்தின் அளவுகோலாகக் கருதப்படுகிறது. ‘தொட்டிலை ஆட்டும் கரங்கள் உலகை ஆளும்’ என்ற பழமொழி இலங்கை சமூகம் அதன் வரலாறு நெடுகிலும் பெண்களின் கௌரவமான சமூக அந்தஸ்தைப் புரிந்து வைத்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

    என்றாலும் இன்றைய நிலைமையை நாம் எடுத்து நோக்கினால் கடுமையான பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தின் பல்வேறு யுகங்கள் கடந்துள்ள நிலையில், பெண்களின் வகிபாகம் குறித்து பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். உலகில் முதலாவது பெண் பிரதமர் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைப் பெற்ற நாடு என்ற போதிலும், இந்த நாட்டின் பெண்களும் பெண் பிள்ளைகளும் இன்னும் அவர்களது பாதுகாப்புக் குறித்த பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

      இலங்கையில் பெண்கள் புலம்பெயர் தொழிலாளர்களாகவும் ஆடைத்தொழிற்துறை ஊழியர்களாகவும் பெருந்தோட்டத்துறை ஊழியர்களாகவும் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய மூலமாக உள்ளார்கள். என்றாலும் அவர்கள் சுரண்டப்படும் நிலைமை மற்றும் அவர்களது தொழில் பாதுகாப்பின்மையைக் கவனத்திற் கொள்கின்றபோது, ஒரு தேசம் என்றவகையில் அவர்களது வருமானம் குறித்து நாம் மகிழ்ச்சியடைய முடியாது.
   
    பாதுகாப்பான தொழில்களைப் பெற்றுக்கொள்ள உதவுவதன் மூலமும் சமூக தலைமைத்துவ அந்தஸ்த்துகளை அவர்கள் அடைந்து கொள்வதற்குத் தடையாகவுள்ள சட்ட மற்றும் சமூக தடைகளை அகற்றி ஒரு அபிவிருத்தியடைந்த கல்வி மற்றும் தொழிற் திறன்களை அவர்களுக்கு வழங்குவதனூடாக மட்டுமே பெண்களை வலுவூட்ட முடியும்.
   
       இந்த விடயத்தில் அரசாங்கத்தின் முழுமையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், பாராளுமன்றத்திலும் ஏனைய அரசியல் கட்டமைப்புகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு அண்மையில் பாராளுமன்றத்தில் ஒரு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  சட்டங்களினூடாக கைக்கொள்ளப்படுகின்ற உரிமைகள் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு விரிந்த சமூக உரையாடல் அவசியமாகும். பெண்கள் தொடர்பான இந்த உரையாடலைத் தொடர்வதற்கு மார்ச் 08 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச பெண்கள் தினம் ஒரு சிறந்த அடித்தளமாகும்.
   
     ‘வலுவூட்டப்பட்ட பெண்கள் – நிலையான எதிர்காலம்’ என்ற இவ்வருட கருப்பொருளினூடாக சமூகத்திற்கு வழங்கப்படும் செய்தி நிலையான அபிவிருத்திக்கு பெண்களை வலுவூட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

பால் அநீதிகளின்றி நாகரீகமும் பண்பாடும் மிக்க ஒரு சமூகம் இந்த உரையாடலை முன்னெடுத்துச் செல்வது திருப்தியளிக்கிறது. என ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com