நாட்டுக்காக பணியாற்றுவதற்காக அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கு தயாராக உள்ளேன் – ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதி என்ற ரீதியில் 19ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அதிகார பகிர்வு வழங்கப்படுவதற்கு முன்னர் அமைச்சராக இருக்கும் போதே தான் இம் முன்மாதிரியை நாட்டுக்கு வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அன்று விவசாய அமைச்சராகவும் சுகாதார அமைச்சராகவும் மாகாண மேற்பார்வையினையும் அதிகாரங்களையும் அம்மாகாண அமைச்சர்களுக்கு எழுத்துமூலம் ஒப்படைத்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, நாட்டுக்காக பணியாற்றுவதற்காக அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கு தான் தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.

நேற்று (21) முற்பகல் ஹிக்கடுவையில் இடம்பெற்ற மாகாண முதலமைச்சர்களின் 32 ஆவது செயலமர்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், தான் ஜனாதிபதியாக பதவியேற்றது அதிகாரத்தை தன்வசம் வைத்திருப்பதற்காக அன்றி அதிகாரத்தை கையளிப்பதற்காகும் எனத் தெரிவித்தார்.

இன்று உலக அரசியலில் எப்போதும் கல்விமான்கள், புத்திஜீவிகள், அரசியலமைப்பு நிபுணர்கள் ஆகியோர் அதிகாரத்தை குவிப்பதிலன்றி அதிகாரத்தை பகிர்வது தொடர்பாகவே கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். இவ் எண்ணக்கருவானது எவ்வகையிலும் பலவீனமடையாது என்பதுடன் அதற்கெதிராக ஏதேனும் கருத்து முன் வைக்கப்படுமாயின் அது அபிவிருத்தி அடையாத சமூகம் ஒன்றின் குணவியல்பாகவே கருதப்படுமெனக் குறிப்பிட்டார்.

இன்று உலகின் உயர்ந்தபட்ச அபிவிருத்தியை எய்தியுள்ள அனைத்து நாடுகளும் அதிகாரப்பகிர்வு மற்றும் பிரதேச அபிவிருத்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பின் ஊடாகவே அதனை எய்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஒரே நாடு எனும் கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டு அரசாங்கமும் மாகாண சபைகளும் புரிந்துணர்வுடன் நடவடிக்கை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தினை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பதவிகளை வகிக்கும் நபர்கள் நியதிச்சட்ட நிலைமைகளில் குறிப்பிட்ட ஒரு காலம் அப்பதவிகளை வகித்த போதும் இந்நிறுவனங்கள் முன்னோக்கி செல்லவேண்டியுள்ளதால் அனைவரும் தத்தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் உரியவாறு நிறைவேற்றுவதற்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் பிரச்சினைகளை தீர்க்கும் நாகரீகமடைந்த மக்களின் குணவியல்புகள் அனைவரிடத்திலும் காணப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

நாட்டின் ஜனாதிபதி ஒரு கட்சியையும் பிரதமர் மற்றுமொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு கட்சிகளுக்கிடையிலும் பகிர்ந்தளிக்கப்பட்ட ஓர் அமைச்சரவையுடன் நடவடிக்கை மேற்கொள்ளுதல் இதற்கு முன்னர் காணப்படாத புதியதொரு அனுபவமெனத் தெரிவித்த ஜனாதிபதி, அர்ப்பணிப்பு இலட்சியம் மற்றும் தன்னம்பிக்கை என்பவற்றின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு தேசத்தின் நன்மைக்காக பொது நோக்கத்தை நிறைவேற்றுவது அனைவரதும் பொறுப்பாகுமென தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com